Last Updated : 28 Oct, 2020 01:29 PM

 

Published : 28 Oct 2020 01:29 PM
Last Updated : 28 Oct 2020 01:29 PM

சைக்கோ கில்லர்; ஸ்டைலீஷ் கமல்; அழகு ஸ்ரீதேவி; 20 நாளில் படம்; ஒன்றரை நாளில் பின்னணி இசை! - 42 ஆண்டுகளாகியும் இன்னும் மிரட்டும் ‘சிகப்பு ரோஜாக்கள்’! 

அடுத்தடுத்து நடக்கிற கொலையைக் களமாகக் கொண்ட கதைகள், லப்டப்பை எகிறடிக்கிற விஷயங்கள். அதிலும் சைக்கோ கொலைகள் என்பவை இன்னும் பதறடிக்கும். இளம் வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டு, மனப்பிறழ்வுக்கு ஆளானவன், ஒவ்வொரு பெண்ணுடனும் பழகி, அவர்களைக் கொலை செய்து, புதைத்து, அதன் மீது ரோஜாச் செடிகளை நடுவது என்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசுதான். ரத்த வெறியும் பெண்கள் மீதான கோபமும் கொண்டு, கொன்று புதைத்து, ரோஜாச் செடியை நடும் ‘சிகப்பு ரோஜாக்கள்’, தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் த்ரில்லர். மிக முக்கியமான சைக்கோ கில்லர்.

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன், மும்பையில் வேலை நிமித்தமாகச் சென்று, மனப்பிறழ்வுக்கு ஆளாகி, பெண்களைக் கொன்று போட்ட நிஜக்கதையின் இன்ஸ்பிரேஷன் தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்று இயக்குநர் பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.

கிராமத்தில் சிற்றன்னையின் அடி உதைக்கு பயந்து ஊரை விட்டு ஓடுகிறான் இளைஞன். பிராமணக் குடும்பம் ஒன்றில் அடைக்கலமாகிறான். அங்கே உள்ள இளம்பெண் செய்யும் காரியத்தால், கெட்ட பெயரைச் சம்பாதிக்கிறான். ஆகவே அங்கிருந்து செல்ல நேரிடுகிறது. அந்த சமயத்தில், மிகப்பெரிய பணக்காரர் வீட்டில் உணவு கேட்கிறான்.

அவன் மீது இரக்கம் கொண்டு, அவனை வீட்டோடு சேர்த்துக்கொள்கிறார்கள் அந்தத் தம்பதி. பிரியமும் அன்புமாக வளர்கிறான். ஒருநாள்... கணவர் விமானத்தில் வெளியூரோ வெளிநாடோ செல்கிறார். அன்றிரவு வேறொரு ஆணுடன், மதுபோதையில் வீட்டுக்கு வருகிறாள் அவரின் மனைவி. அதைப் பார்த்து அதிர்ந்து போகிறான் அந்தப் பையன். இந்த சமயத்தில், விமானத்தில் ஏதோ கோளாறு என மீண்டும் நிலையத்துக்கு வந்து தரையிறங்க, கணவர் நள்ளிரவில் வீடு திரும்புகிறார்.

உள்ளே வேறொருவனுடன் தன் மனைவி இருப்பதைக் கண்டு கடும் கோபமாகிறார். அவளைக் குத்திக் கொல்கிறார். ‘இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க’ என்று அந்தக் கொலையை ஆமோதிக்கிறான் சிறுவன். அவனை தன் மகனாகவே பாவித்து, தன் சொத்து, வியாபாரம் என சகலத்தையும் தருகிறார் அவர். அத்துடன் வீட்டின் அவுட் ஹவுஸில் இருந்தபடி, இந்த மாதிரியான பெண்களைக் கொல்லவும் தூண்டுகிறார். அவனும் கொல்லும் முடிவுடன் பெண்களுடன் பழகி வேட்டையாடுகிறான்.

இவை எதுவும் தெரியாமல், நாயகி அவனைக் காதலிக்கிறாள். கல்யாணம் செய்துகொள்கிறாள். அவளைக் கொல்ல நாள், நேரம் பார்த்திருக்க, அதற்குள் தன் கணவனைப் பற்றிய சகல உண்மைகளும் தெரிந்துகொண்டவள், அங்கிருந்து தப்பிக்கிறாள். அவன் துரத்துகிறான். அவள் தப்பித்தாளா, அவன் போலீஸிடம் பிடிபட்டானா. அவன் என்னானான் என்பதை நம்மை சீட் நுனியில் உட்கார்த்திவைத்து சொல்லியிருப்பார் பாரதிராஜா.

கமல், ஸ்ரீதேவி, வடிவுக்கரசி, ரஜனி, கவுண்டமணி, சக்கரவர்த்தி என அவ்வளவுதான் கேரக்டர்கள். அதிலும் கமல், ஸ்ரீதேவி, வடிவுக்கரசிதான் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்கள். முதல் படமான ‘16 வயதினிலே’, இரண்டாவது படமான ‘கிழக்கே போகும் ரயில்’ அடுத்து மூன்றாவது படமாக பாரதிராஜா எடுத்ததுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. சொல்லப்போனால், முதல் படமாக ‘சிகப்பு ரோஜாக்கள்’ பண்ணுவதற்கும் கதையை தயார் செய்து வைத்திருந்தார் பாரதிராஜா.

இதனிடையே கிராமத்தில் பிறந்து வளர்ந்த பாரதிராஜா, கிராமக் கதைகளையே எடுத்துவரும் பாரதிராஜா, நகரத்துக் கதைகளெல்லாம் அவருக்கு எடுக்கத் தெரியாது என்று பத்திரிகைகள் எழுதின. இதில் கோபம் அடைந்துதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ பண்ணினேன் என்கிறார் பாரதிராஜா.

ஒரு பங்களா. தோட்டத்தில் செடி நடும் தோட்டக்காரன். ஒரு எலி ஓடும். அந்த எலியை மண்வெட்டியால் அடித்துக்கொன்று, அதற்கு ஒரு குழி தோண்டி, அதில் எலியைப் புதைத்து, அதன் மேல் ரோஜாச் செடியை நடுவார் தோட்டக்காரர். படத்தின் ஒட்டுமொத்த கதையை, இந்த ஒரேயொரு காட்சியிலே ஸிம்பாலிக்காக ரசிகர்களுக்கு உணர்த்திவிடுவார் பாரதிராஜா.

அடுத்த ஷாட். பங்களாவின் படுக்கை. அங்கே சிதறிக் கிடக்கும் பெண்ணின் ஆடைகள். இரண்டு கப்புகளில் காபி எடுத்துவரும் வேலைக்காரப் பையன். ஒரு கப்பை எடுத்துக்கொண்டு காபி குடித்தபடியே பையனின் துழாவும் பார்வையை கவனிக்கும் கமல். அந்தப் பெண் யார், என்ன ஆனாள் என்பதற்கான விடையை முந்தைய காட்சியில் இணைத்துப் பார்த்து நம் யோசனைக்கு விட்டுவிடுகிற புத்திசாலித்தனமான கதைசொல்லல், பளிச்சிடும்.

நாயகியை சாலையோரத்தில் பார்ப்பார். அவர் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்ப்பார். அங்கே சென்று கர்ச்சீப் கேட்டு வருவார் கமல். அடிக்கடி தொடரும் இது. நாயகிதான் ஸ்ரீதேவி. அவரிடம் ஆங்கிலப் புத்தகம் இருக்கும். அதில் பெண்ணின் பெயர் எழுதப்பட்டிருக்கும். அதுதான் ஸ்ரீதேவியின் பெயர் என்று நினைத்து, போன் செய்வார். பீச்சுக்கு வரச்சொல்லுவார். அங்கே... நாயகிக்குப் பக்கத்தில் இருந்தபடி வேலை பார்க்கும் ரஜனிதான் வந்திருப்பார். அந்தப் புத்தகம் அவருடையது. அந்தப் பெயருக்கு உரியவர் ரஜனிதான். கடற்கரையில், சிலைக்கு அருகே நிற்பார். சிலையைச் சுற்றி வருவார். அவ்வளவுதான். ‘இன்னிக்கி ஐஸ்க்ரீம் க்ளோஸ் ஆயிருச்சு’ என்று ஐஸ் விற்பவர் சொல்லுகிற வாய்ஸ் மட்டும் கேட்கும்.

கமல் அலுவலகத்தில் இண்டர்வியூ. பெண்கள் வந்திருப்பார்கள். அதில் தேர்வுக்கு வந்தவர்தான் வடிவுக்கரசி. கமல் செலக்ட் செய்வார். வேலைக்கு மட்டுமல்ல... மரணத்துக்குமாகத்தான்!

இங்கே, கமலும் ஸ்ரீதேவியும் விரும்பத் தொடங்குவார்கள். கல்யாணம் செய்துகொள்வார்கள். அங்கே வடிவுக்கரசியின் அண்ணன், ஹோட்டல் சப்ளையர் பாக்யராஜுடன் அலுவலகம் வந்திருப்பார். ‘என் தங்கச்சி காணாமப் போன அன்னிக்கி, ஹோட்டலுக்கு வந்து ஒருத்தனோட சாப்பிட்டிருக்கா. அந்த சப்ளையருக்கு அவனை அடையாளம் தெரியும்’ என்று வடிவுக்கரசியின் அண்ணன் சொல்ல... இந்த விஷயங்களால், ஸ்ரீதேவியைக் கொல்லும் திட்டம் கமலுக்கு தள்ளிப் போகும்.

அன்றிரவு... சப்ளையரைப் பார்க்க கமல் செல்வார். இங்கே ஸ்ரீதேவியின் ரத்தம் பார்த்து கமல் வளர்க்கும் பூனை துரத்தும். ஒரு அறைக்குள் ஓடிப்பதுங்குவார். அந்த அறையின் சுவர் முழுக்க, கமலின் வரலாறு எழுதப்பட்டிருக்கும். சுவர் முழுக்க டைரி போல் கமல் எழுதிய விஷயங்கள் மொத்தமும் கமல் யார் என்பதை ஸ்ரீதேவிக்கு உணர்த்திவிடும். அறையை விட்டு ஜன்னலுக்கு வந்து வெளியே பார்ப்பார். மழை. பூமியில் இருந்து ஒரு கை வெளியே வரும். மிரண்டு போவார். அவுட் ஹவுஸில் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பார். அங்கே கமலின் வளர்ப்பு அப்பா, ஒவ்வொரு பெண்களையும் கமல் கொல்லும் வீடியோவை ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பார்.

அங்கே... சப்ளையர் பாக்யராஜ், நிறைய பணம் கேட்பார். பணம் கொடுப்பார் கமல். இன்னும் இன்னும் என கேட்க, கடுப்பாகிப் போன கமல், பாக்யராஜைக் கொன்றுவிடுவார். வீட்டுக்கு வந்தால்,ஸ்ரீதேவிக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது என்பது கமலுக்குத் தெரிந்துவிடும். வீட்டை விட்டு வெளியே ஓடும் ஸ்ரீதேவியைக் கொல்லத் துரத்துவார். கல்லறையில் சிலுவைக்கம்பி, வயிற்றில் குத்தி, மயங்கி, பழசையெல்லாம் மறந்த நிலையில், கைதியாகி இருப்பார் கமல்.

படம் தொடங்கியதும் ஜெயிலுக்கு வந்து கைதிகளுக்கு, தன் பிறந்தநாளில் பழங்கள் தருவார் கமல். அப்போது, ஒவ்வொரு கைதியாக அறிமுகப்படுத்துவார் போலீஸ். ‘இவன் சந்தேகத்தால பொண்டாட்டியக் கொன்னுட்டான்’ என்று சொல்ல, மற்றவர்களுக்கு பழங்கள் மட்டுமே கொடுக்கும் கமல், இந்தக் கைதிக்கு பழங்கள் கொடுத்துவிட்டு, கைகுலுக்குவார். இதுவே கமலின் கேரக்டரைஸேஷனை உணர்த்திவிடும் நமக்கு.

இப்படி, படம் நெடுக நான்கைந்து கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சைக்கோ த்ரில்லர் கில்லர் கதையை மிரட்டலாகச் சொல்லியிருப்பார் பாரதிராஜா. கமலும் அழகு. ஸ்ரீதேவியும் கொள்ளை அழகு. அநேகமாக, இந்தப் படத்தின் வசனங்களை எழுத, நான்கைந்து ‘அன்ரூல்டு’ பேப்பர்தான் பாக்யராஜுக்கு பாரதிராஜா கொடுத்திருப்பார் போல! வசனங்கள் மிகவும் குறைவு. ஆனால், கமல் பார்க்கும் பார்வையும் படத்தில் வருகிற மெளனங்களும் ஆயிரம் பக்க வசனம் சொல்லவேண்டியவற்றைச் சொல்லும். கோட் சூட், கண்ணாடியில் கள்ளச்சிரிப்புடன் சிகரெட் பற்றவைக்கிற கமல், செம ஸ்டைலீஷ்.

அப்போது முக்கியமான இரண்டு ஹீரோக்களிடம் இந்தக் கதையைச் சொன்னாராம் பாரதிராஜா. ‘நெகட்டீவ் ரோலா இருக்கு வேணாம்’ என்று சொல்லிவிட்டார்களாம் அவர்கள். கமலிடம் சொன்னதும் ‘பண்ணிருவோம்’ என்றார் கமல் என பாரதிராஜா தெரிவித்துள்ளார். நல்லவேளை... அந்த நடிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. நல்லவேளை... கமல் ஏற்றுக்கொண்டார். இப்படியொரு ஸ்டைலீஷான, சைக்கோத்தனமான திலீப் கதாபாத்திரத்தை கமலைத் தவிர வேறு எவரும் அசால்ட்டாகச் செய்திருக்கவே முடியாது. ஸ்ரீதேவி கேரக்டரும் அப்படித்தான். பிரமாதம் பண்ணியிருப்பார்.

பொதுவாகவே, இப்படியொரு கேரக்டர் இருந்தால், அவனை மோசமானவனாகவோ அல்லது மிக மிக நல்லவனாகவோ காட்டுவதற்குப் பிரயத்தனப்படுவார்கள் இயக்குநர்கள். ஆனால், திலீப் கேரக்டரை உள்ளது உள்ளபடி மிகையின்றி காட்டியிருப்பார் பாரதிராஜா. வேலைக்காரச் சிறுவனிடம் வயதைக் கேட்டு, அவனை ஊருக்கு அனுப்பி படிக்கச் சொல்லி, படிப்பதற்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறேன் என்று கமல் சொல்லும் இடமும், அவரின் கேரக்டரையும் கோடிட்டுக் காட்டும்.

இருபது நாட்களில், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை எடுத்து முடித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா. படத்தின் பின்னணி இசையை பத்தாயிரம் ரூபாய் செலவில், ஒன்றரை நாளில் முடித்துக்கொடுத்தாராம் இளையராஜா. நிவாஸின் ஒளிப்பதிவு ஆங்கிலப்படத்துக்கு இணையானதாக இருக்க, இளையராஜாவின் இசை, மிரட்டியெடுத்துவிடும். கமல் கோபமாகி, பெண்ணைப் பார்க்கும் போது ஒரு மாண்டேஜ் ஷாட்ஸ் கட் ஷாட்ஸ் வைத்திருப்பார் பாரதிராஜா. அதற்கொரு இசை கோர்த்துத் தந்திருப்பார் இளையராஜா. முக்கியமாக, கறுப்புப் பூனையைப் பார்க்கும் போதே திகில் கவ்வும். அதற்காகவும் இசை தொடுத்திருப்பார் ராஜா.

முக்கியமாக, சிகரெட் பாக்ஸில் இருந்து சிகரெட்டை எடுக்க பாக்ஸை ஓபன் செய்வார் கமல். அப்படி ஓபன் செய்யும்போதெல்லாம் ஒரு இசை வந்துகொண்டே இருக்கும். அதாவது சிகரெட் பாக்ஸை ஓபன் செய்தால், இசை வருவது போல் இருந்திருக்கும் போல! அதைக் குறிப்பிட்டு, அதற்கான இசையையும் இளையராஜா கொடுத்து வியக்கவைத்திருப்பார்.

வடிவுக்கரசியின் முதல் படம் இதுதான். இரண்டே காட்சிகள்தான் என்றாலும் எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருப்பார்.

‘16 வயதினிலே’ மயிலு. ‘கிழக்கே போகும் ரயில்’ பாஞ்சாலி. ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தில் சாரதா. ‘ஒரு கைதியின் டைரி’, ‘டிக் டிக் டிக்’ என படங்களிலும் பெண் கேரக்டருக்கு சாரதா என்று பெயர்தான் வைத்திருப்பார் பாரதிராஜா. காரணம் தெரியவில்லை.

பக்கத்துவீட்டு பையன்கள் விளையாடும் பந்து விழ, அந்தப் பையன்களிடம் ஸ்ரீதேவி பேச, ‘போன வாரம் வேற மாமி இருந்தாங்க’ என்று அவர்கள் சொல்ல, இதையெல்லாம் கமலிடம் கேட்க, கமல் டென்ஷனாக, ‘நத்திங்...’ , ‘நத்திங்’, ‘நத்திங்’ என்று சொல்ல, ‘நத்திங் நத்திங் நத்திங் நத்திங்...’ என்று கத்திக்கொண்டே, மூக்குக் கண்ணாடியின் முனையைப் பிடித்து, டிரேயில் நத்திங் என்று எழுதுகிற இடம் அமர்க்களப்படுத்திவிடும். பின்னாளில், ‘புரியாத புதிர்’ படத்தில் ரகுவரன் ‘ஐ நோ’ சொல்வதும் சிம்பு நடித்த ‘மன்மதன்’ படமும் ஒட்டுமொத்த ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை நினைவுபடுத்தத்தான் செய்தன.

படத்துக்கு பாடல்களே வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் கமல். ஆனாலும் இரண்டே இரண்டு பாடல்களை கதையின் வீரியம் குறைக்காமல் செருகியிருப்பார் பாரதிராஜா. மலேசியா வாசுதேவன் பாடிய ‘இந்த மின்மினிக்கு’ பாடலும் கமல் பாடிய ‘நினைவோ ஒரு பறவை’ பாடலும் இன்றைக்கும் ஹிட் பாடல் வரிசையில் நம் நினைவுகளில் மின்னிக்கொண்டிருக்கின்றன. ’இந்த மின்மினிக்கு’ பாடலில், ஸ்ரீதேவியின் கையில் உள்ள புத்தகத்துக்கு க்ளோஸப் வைப்பார் நிவாஸ். ‘சண்டே’ என்றிருக்கும். அடுத்த ஷாட்... கமலும் ஸ்ரீதேவியும் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இப்படி படம் நெடுக, பல காட்சிகள் உண்டு.

பாரதிராஜா, கமல், ஸ்ரீதேவி, நிவாஸ், இளையராஜா, பாக்யராஜ் கூட்டணியில் ’சிகப்பு ரோஜாக்கள்’ மிகப்பிரமாண்டமான வெற்றியைத் தந்தது. கிராமத்துப் படங்கள் மட்டுமின்றி எந்தப் படமாக இருந்தாலும் பிரமாதமாக எடுப்பார் பாரதிராஜா என்று பத்திரிகைகள் எழுதியெழுதிப் பாராட்டின! இந்தப் படத்தை ‘ரெட் ரோஸஸ்’ என்று இந்தியிலும் எடுத்தார் பாரதிராஜா.

1978ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி வெளியானது ’சிகப்பு ரோஜாக்கள்’. படம் வெளியாகி, 42 ஆண்டுகளாகிவிட்டன. சைக்கோ கதையிலும் சொல்லப்பட்ட விதத்திலும் இன்னும் மணம் வீசிக்கொண்டிருக்கின்றன ‘சிகப்பு ரோஜாக்கள்’!

இயக்குநர் பாரதிராஜா, வசனகர்த்தா பாக்யராஜ், கமல், இளையராஜா, வடிவுக்கரசி மற்றும் பாரதிராஜா குழுவினருக்கு சிகப்பு ரோஜாக்கள் கொண்ட பிரமாண்ட பொக்கே பார்சல். பாராட்டுகள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x