திருமணத்துக்கு மறுத்த இந்தி சின்னதிரை நடிகைக்கு கத்திக்குத்து: தயாரிப்பாளர் கைது

திருமணத்துக்கு மறுத்த இந்தி சின்னதிரை நடிகைக்கு கத்திக்குத்து: தயாரிப்பாளர் கைது
Updated on
1 min read

இந்தி சின்னதிரை நடிகை மால்வி மல்ஹோத்ரா திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்ததால் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார் தயாரிப்பாளர் ஒருவர்.

’உடான்’ என்கிற தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் மால்வி. ஒருசில திரைப்படங்களிலும் தலை காட்டியுள்ளார். குமார் மஹிபால் சிங் என்கிற தயாரிப்பாளர், சமூக ஊடகத்தில் மால்வியுடன் நட்பாகியுள்ளார். பின் சில முறை அவரைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஆனால் மஹிபாலின் கோரிக்கையை மால்வி மறுத்துள்ளார். தொடர்ந்து வற்புறுத்தவே, சமூக ஊடகத்தில் மஹிபாலுடனான நட்பை முறித்து விலகியுள்ளார்.

மும்பை வெர்ஸோவா பகுதியில் ஒரு காஃபி ஷாப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மால்வியை தனது ஆடம்பரக் காரில் வந்த மஹிபால் வழிமறித்துள்ளார். தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி நேரிலும் வற்புறுத்த, மால்வி மறுத்துள்ளார். இதனால் கோபம் கொண்ட மஹிபால் கத்தியால் மால்வியை மூன்று முறை பலமாகக் குத்திவிட்டு தன் காரில் தப்பித்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து வெர்ஸோவா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் மஹிபால் நண்பரானதாகவும், இந்த வருடம் ஜனவரி மாதம் அவரைச் சந்தித்ததாகவும், மஹிபால் ஒரு பாடல் வீடியோ ஆல்பத்துக்காக தன்னை நடிக்கக் கேட்டதாகவும் மால்வி காவல்துறையிடம் கூறியதாகத் தெரிகிறது.

கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மால்வி சிகிச்சை பெற்று தற்போது நலமாக இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in