Last Updated : 27 Oct, 2020 11:20 AM

 

Published : 27 Oct 2020 11:20 AM
Last Updated : 27 Oct 2020 11:20 AM

பட் குடும்பத்தினருக்கு எதிராக வீடியோ: நடிகை லுவீனா மீது அவதூறு வழக்கு

நடிகை லுவீனா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருப்பதாக முகேஷ் பட் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடிகை லுவீனா லோத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 நிமிடம் 48 வினாடிகள் ஓடக் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில் பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட் தன்னைத் துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், தான் தனது உறவினரான சுமித் சபர்வால் என்பவரைத் திருமணம் செய்திருப்பதாகவும், ஆனால் அவர் பாலிவுட் பிரபலங்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்யும் வேலைகளில் ஈடுப்பட்டு வருவதால் அவரிடமிருந்து தான் விவாகரத்து கோரியிருப்பதாகவும் லுவீனா கூறியிருந்தார். சுமித் இப்படிச் செய்து கொண்டிருப்பது மகேஷ் பட் குடும்பத்தினருக்கும் தெரியும் என்றும் லுவீனா அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

லுவீனாவின் கணவரான சுமித், மகேஷ் பட்டின் உறவினர் என்பதால் பட் குடும்பத்தினர் தன்னை மிரட்டி வருவதாகவும், தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு மகேஷ் பட், முகேஷ் பட், சுமித் சபர்வால், சாஹில் சைகல் உள்ளிட்டோர்தான் காரணம் என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

லுவீனாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. பல்வேறு வட இந்தியத் தொலைக்காட்சிகளும் அந்த வீடியோவைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தன.

இந்நிலையில் நடிகை லுவீனா மீது அவதூறு வழக்குத் தொடர்ந்திருப்பதாக முகேஷ் பட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் குறிப்பிட்டுள்ளதுபோல், சுமித் சபர்வால் என்பவர் எனது தயாரிப்பு நிறுவனமான விஷேஷ் பிலிம்ஸில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஒரு ஊழியர் மட்டுமே. ஆனால், நடிகை லுவீனா லோத் பல்வேறு ஊடகங்களிலும் சுமித் எங்கள் உறவினர் என்று அவதூறாகக் கூறி வருகிறார்.

மேலும், தன் குடும்பப் பிரச்சினையில் சுயநினைவோடும், தவறான எண்ணத்தோடும் எனது சகோதரர் மற்றும் என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் லுவீனா செயல்பட்டு வருகிறார்.

நீதித்துறை மீது எங்களுக்கு மிக உயர்ந்த நம்பிக்கை உள்ளது. மேலும் இந்த வழக்கில் நல்ல முடிவைக் காண விரும்புகிறோம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x