Last Updated : 21 Oct, 2020 07:37 PM

 

Published : 21 Oct 2020 07:37 PM
Last Updated : 21 Oct 2020 07:37 PM

'நாலு பேருக்கு உதவும்னா எதுவும் தப்பில்ல’, ‘அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்’, ‘அஞ்சு வாங்கறோம், வாங்கி தாராவில நிறுத்துறோம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘தென்பாண்டிச் சீமையிலே...’, ‘நிலா அது வானத்து மேலே’, ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’, ‘நாயக்கரே உனக்கு ஒண்ணும் ஆவாது நாயக்கரே...!’ - கமல், மணிரத்னம், இளையராஜாவின் ‘நாயகன்’... 33 ஆண்டுகள்! 

’டிரெண்ட் செட்டர்’ என்று தமிழ் சினிமாவில் ஒரு ஆங்கில வார்த்தை ரொம்பவே பிரபலம். போய்க்கொண்டிருக்கும் தமிழ் சினிமாப் பயணத்துக்கு புதிய பாதை போட்டுத் தரும் இது. இதையடுத்து வருகிற படங்கள், இந்தப் படத்தின் தாக்கத்திலேயே எடுக்கப்படும். படத்தின் கதை, கதையைச் சொல்லுகிற பாணி, வசன உத்தி, காட்சிகளின் நேர்த்தி, ஒளிப்பதிவின் வெளிச்சப் பாய், இயக்கத்தின் ஆளுமை என ஏதேனும் ஒரு விஷயத்தை, அல்லது மொத்தமான விஷயத்தை அடிதொட்டு வரிசையாக இதேமாதிரி படம் பண்ணுவார்கள். இந்த டைரக்டர், அந்த இயக்குநர் என்று எந்த இயக்குநர், எந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்து வந்தாலும் அவர் ‘டிரெண்ட் செட்டர்’ படத்தை இயக்கிய இயக்குநரின் பாணியில் படமெடுப்பார்கள். அப்படியொரு தாக்கத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படுத்திய டைரக்டர்கள் உண்டு. படங்கள் உண்டு. அப்படியான இயக்குநர்... மணிரத்னம். அந்தப் படம்... ‘நாயகன்’.

’பல்லவி அனு பல்லவி’யில் இருந்து தொடங்கியது மணிரத்னத்தின் பயணம். ஆரம்ப கால அனில்கபூருக்கு இதுவொரு ஜாக்பாட். முரளி, சத்யராஜைக் கொண்டு ‘பகல் நிலவு’ பண்ணினார். மோகன், அம்பிகா, ராதாவைக் கொண்டு ‘இதயக்கோயில்’ கொடுத்தார். ‘இந்தப் பையன் படிச்ச பையன். புதுசா யோசிக்கிறாரு. இவருக்கு ஒரு படம் கொடுங்க’ என்று மணிரத்னத்தின் ஆரம்பகாலங்களில் அவரின் திறமையை, ஒரு பி.ஆர்.ஓ. போல் இருந்து சொன்னவர்... இளையராஜா. மோகன், ரேவதியை வைத்து ‘மெளன ராகம்’ ஹிட்டைக் கொடுத்தார். ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு விதமாக எடுத்துக்கொண்டிருந்தவருக்கு வந்ததுதான் ‘நாயகன்’ வாய்ப்பு.

புகழ்மிக்க நிறுவனமான முக்தா பிலிம்ஸ், மணிரத்னத்தை இயக்குநராகக்கொண்டு படமெடுக்க முன்வந்தது. பம்பாய் வரதராஜ முதலியார் எனும் மனிதரின் வாழ்க்கையைக் கருவாக, இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு, கதை ஒன்றை உருவாக்கினார். கமல் நடித்தால் நன்றாக இருக்குமே என்று சிந்தித்தார். கமலும் சம்மதித்தார்.
எழுபதுகளில் ‘அரங்கேற்றம்’ படத்துக்குப் பிறகிருந்தே ஒவ்வொரு பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ளும் கமலுக்கு, ‘நாயகன்’ அநேகமாக இன்னொரு பரீட்சை. முயற்சி. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. லெனின் - வி.டி.விஜயனின் எடிட்டிங். இளையராஜாவின் இசை. எழுத்தாளர் பாலகுமாரனின் வசனம்.

மக்களுக்கு ‘காட்ஃபாதர்’. அரசாங்கத்துக்கு எதிரி. இதுதான் ஒன்லைன். ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்ல’ என்ற வார்த்தையை வாழ்க்கையாக்கிக்கொண்ட வேலு என்ற இளைஞனின் வாழ்வியலைச் சொன்னதுதான் ‘நாயகன்’.

தூத்துக்குடி. யூனியன் லீடர் அப்பா. போலீஸ் சுட்டுக்கொல்ல, அந்தப் போலீஸை கொன்றுவிட்டு, பம்பாய்க்கு (மும்பை) ஓடிவருகிற பத்து வயதுச் சிறுவன் வேலு, இஸ்லாமியப் பெரியவரிடம் அடைக்கலமாகிறான். செல்வம் என்பவன் நண்பனாகிறான். கொஞ்சம் கொஞ்சமாக, ‘இல்லீகல்’ விஷயங்களுக்குள் இறங்குகிறான். அந்தப் பெரியவர்தான் சொல்கிறார் ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்ல வேலு’ என்று! அதை வேதவாக்காக ஏற்கிறான்.

ஏரியா மக்களையும் இஸ்லாமியப் பெரியவரையும் துன்புறுத்திய, கொன்ற போலீஸ்காரரைக் கொன்று போடுகிறான். வேலு மக்கள் மனதில் இடம்பிடிக்கிறான். விபச்சார விடுதியில் பார்க்கிற பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். வேலு எனும் இளைஞன், மும்பை தாராவி பகுதியில் மெல்ல மெல்ல நாயகனாகிறான். வேலு... வேலு நாயக்கராகிறார்.

அந்த கெட்ட போலீஸ்காரரின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் ஆதரவாக இருக்கிறார் வேலு நாயக்கர். இந்தத் தொழிலில் இருக்கும் பகையால், மனைவியை இழக்கிறார். மகனையும் மகளையும் சென்னைக்குப் படிக்க அனுப்புகிறார். வளர்ந்ததும் வருகிறார்கள்.
அப்பாவின் நடவடிக்கைகள், செயல்கள் மகளுக்குப் பிடிக்கவில்லை. போதாக்குறைக்கு, மகனையும் இழக்க நேரிடுகிறது. நொந்துபோன மகள், அப்பாவை விட்டு எங்கோ சென்றுவிடுகிறாள்.

வேலு நாயக்கர் என்பவரின் வாழ்க்கை, இப்படியாக மக்களுக்காகவே போய்க்கொண்டிருக்கிறது. ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் அதிகாரி, நாயக்கரின் ஆட்களை ஓட ஓட விரட்டுகிறார். அவரின் வாகனங்களுக்கு சீல் வைக்கிறார். நண்பன் செல்வத்தைப் போலீஸ் பிடித்துவிட, ஆவேசமாகிறார். அதிகாரியின் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால்...அங்கே மகள். போலீஸ் அதிகாரியின் மனைவி.

இந்த நிலையில், அப்ரூவர், வேலு நாயக்கருக்கு அரெஸ்ட் வாரண்ட். ஊரே கொந்தளிக்கிறது. தீக்குளிக்கிறது. ‘இந்தக் கிழவனுக்காக இவ்ளோ பேர்...’ என்று மனம் நொந்து, கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்கிறார்.

இந்தசமயத்தில்தான் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறவனுக்கு அப்பாவைக் கொன்றது வேலு நாயக்கர் என்பது தெரியவருகிறது.

கோர்ட். ஆஜர்படுத்தப்படுகிறார் வேலு நாயக்கர். போதிய சாட்சியங்கள் இல்லையென்று விடுதலையாகிறார். ஊரே மகிழ்ச்சி ஆரவார ஆர்ப்பரிப்புடன் வரவேற்கிறது. வேலு நாயக்கர் வருகிறார். அந்த மனநிலை பாதிக்கப்பட்டவன், அப்பாவின் போலீஸ் உடையைப் போட்டுக்கொண்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லுகிறான்.

‘நாலு பேருக்கு உதவும்னா எதுவும் தப்பில்ல’ என்று வாழ்ந்த வேலு நாயக்கர்... பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே வீழ்வான் எனும் சொல்லுக்கு ஏற்ப, இறந்துபோகிறார்.
‘காட்சிப்படுத்துதல்’ என்றொரு அழகான வார்த்தை சொல்லப்படுவது உண்டு. அப்படியான காட்சிப் படுத்துதலும் திரைக்கதை விரிவாக்கமும்தான் ’நாயகன்’ படத்தை, சாதாரணப் படத்தில் இருந்து பிரமாண்டமான, கவிமயமான, ஆகச்சிறந்த கதைச் சொல்லிப் படமாக நமக்கு உணர்த்தியது.

அப்போது மீசை இல்லாத கமல் புதுசுதான். ஒவ்வொரு காலகட்டத்துக்கு தக்கபடி அவரின் தோற்றமும் நடை பாவனைகள் மாறிக்கொண்டே இருக்கும். உச்சந்தலையின் நடுவே வழுக்கையைக் கூட காட்டியிருப்பார் கமல். அறுபதுகளில் நடக்கிற கதைக்கு ஏற்ப, பஃப் வைத்த ஜாக்கெட், ரெட்டை ஜடைப் பின்னல், சீட்டிப் பாவாடை என சரண்யாவின் ஆடைகளிலும் மற்ற கதாபாத்திரங்களிலும் நேர்த்தி காட்டியிருப்பார் மணிரத்னம்.

விபச்சார விடுதியில், கமலுக்கு நேரே கேமிரா இருக்கும். பின்னே கண்ணாடி இருக்கும். அந்தக் கண்ணாடியில் சரண்யா தெரிவார். சாலையில் சரண்யா நடப்பார். கமல் பின் தொடருவார். நூற்றுக்கணக்கான புறாக்கள் பறக்கும். கவிதை மாதிரி இருக்கும்.ரிக்‌ஷாவில் கமலும் சரண்யாவும் செல்ல, ஸ்டைலாகப் பார்த்து, அருகில் நெருங்கி வர ஜாடை காட்டுவார். இருவரும் நடப்பார்கள். கமல் கைக்குட்டையை மடித்து பாக்கெட்டுக்குள் வைப்பார். அந்த நேர்த்தியைக் கவனிப்பார் சரண்யா. கமலின் குழந்தைகள், கமலைப் போல நடித்து விளையாடும். பின்னர், ‘உங்களை மாதிரி ஆகணும்னு சொல்லுதுங்க’ என்பார் சரண்யா. அதற்கு லீட் போலவும் இருக்கும். ஜாலியாகவும் இருக்கும். வலிக்கவும் செய்யும்.

கமல் - ஜனகராஜ் ஜோடி ரொம்பவே ஸ்பெஷல். இதிலும்தான். உப்பைக் கட்டி கடத்தல் பொருளை கடலில் போடுவது, விபச்சார விடுதிக்கு அழைத்துச் செல்வது, ‘இனிமே இப்படித்தான்’ என்பது, ‘பாருப்பா இந்தப் புள்ளைய’ என்பது, ‘நீ போ நாயக்கரே, உனக்கு ஒண்ணும் ஆவாது நாயக்கரே’ என்று வீறாப்பு காட்டுவது என்று படம் முழுதும் ஜனகராஜ், அமர்க்களப்படுத்தியிருப்பார்.

சரண்யாவுக்கு முதல் படம். இப்படிச் சொன்னால்தான் இது முதல்படம் என்று நம்புவோம். அப்படியொரு தேர்ந்த நடிப்பை வழங்கியிருப்பார். நிழல்கள் ரவி, கார்த்திகா, டெல்லிகணேஷ்,விஜயன், பிரதீப் சக்தி, நாசர், ஏ.ஆர்.எஸ், கிட்டி எனப் பலரும் அவரவர் வேலையை, கடமையாகச் செய்திருப்பார்கள்.

கமலும் ஏ.ஆர்.எஸ்.ஸும் பேசிக்கொள்கிற காட்சி. ’தெரியும்’, ‘தெரியும்’ என்று சொல்லும் இடத்தில் கேமிரா கோணம் அபாரம். கமல், கார்த்திகா, ஜனகராஜ்... ‘அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்’ என்ற இடத்தில் கேமிரா, ’நாயக்கரே’ என்று நிழல்கள் ரவியை கமல் அழைக்கும் காட்சியின் கோணம், ‘நீலாவோட அஸ்தி கரையறதுக்குள்ளே ரெட்டி குடும்பத்துல ஒரு ஆம்பள உயிரோட இருக்கக் கூடாது’ என்று சொன்னதும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு லோகெஷனில், ஒவ்வொரு விதமாகக் கொல்வது, ‘எனக்கு இந்தி தெரியும்’ என்று ஆரம்பித்து கடைசி வரை கமலுக்கு நெருக்கமாக இருக்கும் ஐயர் கேரக்டர் டெல்லி கணேஷ் பிரமாதப்படுத்தியிருப்பார். ஆஸ்பத்திரியில் குழந்தையைசேர்த்துவிட்டு, டெல்லி கணேஷும் கமலும் பேசிக்கொள்ளும் இடத்தில் இருவரின் நடிப்பும் உயரம் தொட்டிருக்கும்.

ஒரு காட்சிக்கு, காட்சியின் கனத்தை ரசிகனுக்குக் கடத்துவதற்கு எப்படி ஷாட் வைக்க வேண்டும் என்று படம் முழுக்கவே பாடம் எடுத்திருப்பார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். ஒவ்வொரு காலகட்டத்தையும் உணர்த்த கோடு போட்ட கோட்டுசூட்டு, அம்பாசிடர் கார் என்றெல்லாம் காட்டி, இறுதியில் மாருதி கார் வரைக்கும் காலகட்டத்தைச் சொல்லி, ஒரு பீரியடு காலப் படத்தை, ஒரு மனிதரின் வாழ்க்கையுடன் அழகாக, உறுத்தாமல் செயற்கையே இல்லாமல் படைத்திருப்பார் மணிரத்னம்.
இரண்டரை மணி நேரமும் படம் நெடுக வந்து நம் மனதை ஆக்கிரமித்துவிடுகிற கேரக்டர்... இளையராஜா. அவரின் பின்னணி இசை, மற்றுமொரு ராஜ சரித்திரம். படம் போட்ட கால்மணி நேரத்தில், ‘தென்பாண்டிச் சீமையிலே’ என்று ஆரம்பிக்கும் போதே, அந்தப் பையன் வேலுவுடன் இரண்டறக் கலக்கச் செய்துவிடுவார் இளையராஜா. படம் முழுக்க ஆங்காங்கே வருகிற இசை, நம்மைக் கலங்கடித்துவிடும்.

‘நான் சிரித்தால் தீபாவளி’ அப்படியே அறுபதுகளின் ஸ்டைல் பாடல். ‘நீயொரு காதல் சங்கீதம்’ காதல் ப்ளஸ் கவிதை. காட்சியும் கவிதைதான். ‘என்னை விட்டுட்டு போயிருவியா’ என்று கேட்பதும் தாலியை எடுத்து ஒற்றிக்கொள்வதும் அழுவதும் அவளை தேற்றுவதும் என்று இருக்கும். அடுத்து, இங்கேதான் வந்து விழுந்து கிடந்தேன் என்று சொல்ல, அப்போ இந்த அளவுக்கு உயரமா இருப்பீங்களா என்று கேட்பதும் அவர் சரி செய்து விவரிப்பதும் பாடலுக்குள் வரும் மெளனக் காட்சிகள்.
‘நிலா அது வானத்து மேலே’ ஆரம்ப இசையும் பாடலும் குதூகலப்படுத்திவிடும். அந்தி மழை மேகம் பாடலும் கொண்டாட்டமும் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். முக்கியமான இடங்களில் வருகிற ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடல் இன்றைக்கும் எல்லோருக்குமான விருப்பப் பாடல். இளையராஜாவுக்கு இது 400வது படம்.

‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்ல’, ‘இது பயமில்லீங்க, பெருமை’, ‘நான் அடிச்சா நீ செத்துருவே’, ‘இனிமே இப்படித்தான்’, ‘நான் பாத்துக்கறேன் நான் பாத்துக்கறேன்’, ‘அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்’, ‘நமஸ்தே, மேரா பாவா மர்கயா’, ‘நாளைக்கு கணக்கு பரிச்சை. ஒரு ஒருமணிக்கு விட்டீங்கன்னாக் கூட போதும். எஸ்.எல்.சி... தாதாபாய் நெளரோஜி ஸ்கூல்’, ‘பயமா இருக்கு... அழுதுருவேனோன்னு பயமா இருக்கு’, ‘ஏழைங்க உசுருக்கு அவ்ளோதான் மதிப்பு’, ‘ஐயரே, அஞ்சு வாங்கறோம், தாராவிலதான் நிறுத்துறோம்’, ‘பணத்தை வச்சுட்டு சரக்கை எடுத்துக்கோ’, ‘யாரு... யாரு போன்ல... யார் கூட பேசிட்டிருந்தே...’, ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’ என்று படம் முழுக்க தன் வசனங்களால் இன்னும் கேரக்டர்களுக்கு உயிரூட்டியிருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். இது அவர் வசனத்தில் வந்த முதல் படம்.
‘நாயகன்’ படத்துக்கு முன், பின் என்று தமிழ் சினிமாவின் தொழில்நுட்பத்தையும் மேக்கிங் ஸ்டைலையும் பார்க்கவேண்டும். அப்படியொரு உலகத்தரம் வாய்ந்த படமாக அமைந்தது. இந்தியாவின் தலைசிறந்த நூறு படங்கள் பட்டியலில், ‘நாயகன்’ படமும் உண்டு.

எப்போது டிவியில் போட்டாலும் பார்க்கலாம் என்று எல்லோரும் நினைக்கிற படங்களில், ‘நாயகன்’ தனி நாயகனாக ஜொலித்து நிற்கிறான் எப்போதும்!
1987ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி தீபாவளியன்று வெளியானது ‘நாயகன்’. படம் வெளியாகி, 33 ஆண்டுகளாகின்றன. இன்னும் 330 ஆண்டுகளானாலும், ‘நாயகன்’ நாயகனாகவே மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பான். ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவும் தப்பில்ல’, ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்று டிரெண்டிங்கில் எழுதிக்கொண்டிருப்பார்கள்.

கமல், மணிரத்னம், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், முக்தா பிலிம்ஸ் மற்றும் குழுவிற்கு, ராஜ சல்யூட்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x