Published : 17 Oct 2015 04:26 PM
Last Updated : 17 Oct 2015 04:26 PM

மனோரமாக்கள் உருவாக வித்திடுகிறதா சமகால தமிழ் சினிமா?

தமிழ் சினிமாவின் தீவிர ஆர்வலர்கள் பலருக்கும் மறைந்த 'ஆச்சி' மனோரமாவைப் பற்றிய நினைவுகள் இன்னமும் நிழலாடிக்கொண்டிருக்கின்றன. புகழஞ்சலிகள் தீராத நிலையில், ஆச்சியை முன்வைத்து தமிழ் சினிமா மீதான விமர்சனம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

"ஒரு பழம்பெரும் காமெடி நடிகை"

"கடின உழைப்பாளி"

"உறுதுணை நடிகைகளில் ஒன் உமன் ஆர்மி!"

இவை எல்லாமே உண்மைதான் என்றாலும் கடைசி விமர்சனம் மட்டும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. ஏன் மனோரமாவுக்கு ஈடான உறுதுணை நடிகைகளே இல்லை? மற்ற பெண் நடிகர்கள் எல்லாம் எங்கே போய்விட்டார்கள்? நாசர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ் ஆகிய நடிகர்களுக்கு இணையாகத் திரையுலகில் எந்தப் பெண் நடிகர்கள் இருக்கிறார்கள்? சொல்லக்கூடிய அளவில் இருக்கும் போட்டியாளர் கோவை சரளா மட்டும்தான். அவரும் உறுதுணைக் கதாபாத்திரங்களை விட நகைச்சுவை பாத்திரங்களில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்.

இன்னும் தீவிரமாக அலசினால், அப்பாவியான அம்மாவாக நடிக்கும் சரண்யா பொன்வண்ணன் கிடைப்பார். அவருக்கு வேலையில்லா பட்டதாரி படத்தின் அம்மா கதாபாத்திரத்துக்காக ஏராளமான விருதுகள் கிடைத்திருக்கின்றன. கதைக்குத் தேவைப்பட்ட பாத்திரத்தை சிறப்பாகச் செய்ததற்காகத்தான் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே நாம் எந்த அளவுக்கு அத்தகைய நடிகைகளுக்கான தேவையில் இருக்கிறோம் என்று கூற முடியும்.

தமிழ் சினிமாவில் உறுதுணை நடிகைகள் மற்றும் கதை இரண்டும் சுழற்சி நிலையில்தான் இருக்கின்றன. ஏன் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகள் அதிகம் எழுதப்படுவதில்லை? ஏனென்றால் அத்தகைய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஏற்றவர்கள் இங்கில்லை. திரும்பவும் ஆரம்பத்துக்கே வருவோம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என்று கேட்டால், அதுபோன்ற கதையே எழுதப்படுவதில்லை என்கின்றனர்.

பெக்டெல் (Bechdel) என்றொரு தேர்வு இருக்கிறது. இதில் இரண்டு பெண்கள் சேர்ந்து நடிக்க வேண்டும். அப்போது ஆணைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வேறு விஷயம் பேச வேண்டும். இதை முறையாகச் செய்தாலே அவர்கள் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். முதலில் நம்முடைய படங்களை அத்தகைய தேர்வுக்கு உட்படுத்த முடியுமா என்றெ தெரியவில்லை. இங்கே இரு பெண்களுக்கு இடையேயான பேச்சு பெரும்பாலும் அம்மா - மகள் இடையிலான உறவாகவே இருக்கிறது. அதிலும் அவர்கள் பேசுவது பெரும்பாலும் திருமணத்தைப் பற்றித்தான்.

கதாநாயகியை மையப்படுத்திய படமாகக் கருதப்படும் பார்த்திபன் கனவு படத்தில், இரண்டு பெண்கள் (இரண்டு கதாபாத்திரத்திலும் சினேகாவே நடித்திருந்தார்) சேர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் இருக்கும் மனைவி கதாபாத்திரம், படித்த பெண்ணிடம் சொல்கிறது. "ஒரு பெண்ணின் உண்மையான மகிழ்ச்சி, ஆணைச் சார்ந்திருப்பதிலும், அவர்களுக்குத் தொண்டு செய்வதிலும்தான் இருக்கிறது". இதே பதிலை, அவள் அப்படித்தான் பட ஸ்ரீபிரியா கதாபாத்திரம் கேட்டால் என்ன செய்திருக்கும்? சினேகா சொல்வதைக் கேட்கும் மற்றொரு சினேகா," சோ ஸ்வீட்!" என்பார். அந்த பதில், 'நானும் கல்யாணம் செய்துகொண்டு இதுபோலவே வாழ்வேன்' என்று சொல்வது போல இருக்கும். இது கதாநாயகியை மையப்படுத்திய படமாம்.

பொதுவாக, பெரும்பாலும் நமது கதாநாயகிகள், கதாநாயகனின் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்களாகவே வடிவமைக்கப்படுகின்றனர். பெண்களின் சுயமரியாதை பெரும்பாலும், ஆண்களின் பார்வை சார்ந்தே இருக்கிறது. சில சமயங்களில் பெண்ணை மையப்படுத்தியும் படம் எடுக்கிறார்கள். ஆனால் அவை அக்கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கிறதா? அப்படி அளித்தால் அதைத் தொடர்ந்து வரவேண்டிய படங்கள் எல்லாம் எங்கே மறைந்து போயின?

சமீபத்தில் வலிமையான பெண் கதாபாத்திர வடிவமைப்பு, பாபநாசம் படத்தில் இரக்கமற்ற காவல்துறை அதிகாரியான கீதா பிரபாகருக்கு(ஆஷா சரத்) இருந்தது. ஆனால் அதன் மூலம் மலையாளப் படமான 'த்ரிஷ்யம்'. இதுவே ஒரு தமிழ்ப் படமாக இருந்திருந்தால், அந்தப் பாத்திரம் ஓர் ஆணாக இருந்திருக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அப்போது பிரபாகர், காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடிக்க எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கும் வீரமான தகப்பனாக இருந்திருப்பார். கீதா பிரபாகர், தன் மகனை நினைத்து நினைத்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் வழக்கமான தாயாக இருந்திருப்பார்.

தமிழ் சினிமா படைப்பாளிகள் ஓர் ஆணுக்கும் மற்றொரு ஆணுக்கும் இடையிலான நவீனயுகச் சண்டையைத்தான் விரும்புகிறார்கள். பெண்கள் எப்போதும் பார்வையாளர்களாகவும், உணர்ச்சிகரமான காட்சிகளுக்கான தேவையாகவுமே காட்டப்படுகிறார்கள். இப்போது சொல்லுங்கள், மனோரமா தனது காலத்தில் சக உறுதுணை நடிகைகள் இல்லாமல் ஒன் உமன் ஆர்மியாக உறுதுணைப் பெண் கதாபாத்திரத்தைச் சுமந்து நடித்துத் தள்ளியதை எண்ணி வியக்க வேண்டுமா?

தமிழில்- க.சே.ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x