Last Updated : 20 Oct, 2020 06:12 PM

 

Published : 20 Oct 2020 06:12 PM
Last Updated : 20 Oct 2020 06:12 PM

’மயக்கமா கலக்கமா?’, ‘மனிதன் என்பவன்...’, ‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘பூமாலையில் ஓர் மல்லிகை’, ‘அசோகர் உங்க மகருங்களா?’, ‘ஒரு கண்ணு அவளுக்கு ஒரு பொண்ணா?’ - ’நினைவெல்லாம் ஸ்ரீதர்’, ‘நெஞ்சிருக்கும் வரை ஸ்ரீதர்’ நினைவு தினம்

மாற்றங்களைப் பின் தொடர்வது என்பதே சவாலான ஒன்றுதான். அப்படியெனில் மாற்றங்களை உண்டாக்குவது என்பது சவாலுக்கு சவால். அந்த சவால்களை தமிழ் சினிமாவுக்குள் கொண்டு பல புதுமைகளை வெள்ளித்திரையில் உலவ விட்டவர் என்பதில் முதலாமவரும் முதன்மையானவரும் அவரே என்று இன்றைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது தமிழ்த் திரையுலகம். அவர்... இயக்குநர் ஸ்ரீதர். தமிழ் ரசிகர்களால் மறக்கவே முடியாத மூன்றெழுத்து ஜாம்பவான்!

எழுத்தின் மீது ஆர்வம், கலையின் மீது பிரியம், சினிமாவின் மீது மோகம் என்றிருந்த ஸ்ரீதரின் சிந்தனையில் உதித்தவை எழுத்துகளாக காகிதத்தில் இறங்கிப் பதிவாகியிருந்தன. ஆனால், அவை எதையுமே பார்க்காமல் புறந்தள்ளியதற்குக் காரணம்... ஸ்ரீதரின் வயது. ‘இவ்ளோ சின்னப்பையனா இருக்கானே’ என்றுதான் யோசித்தார்கள். இதே சந்தேகம், டி.கே.சண்முகம் அண்ணாச்சிக்கும் வந்தது. ‘இந்தக் காட்சியை வேற விதமா எழுதிக்கொடு தம்பி. மாடியிலேயே உக்கார்ந்து எழுதிக்கொடு’ என்று சொல்ல, அடுத்த இரண்டு மணி நேரத்தில், எழுதிக்கொடுத்தார் ஸ்ரீதர். படித்து வியந்தார் சண்முகம் அண்ணாச்சி. அந்தக் கதை நாடகமாக அரங்கேறியது. காட்சிக்குக் காட்சி கரவொலி கிளம்பின. ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள்.

நாடகம் முடிந்ததும், ‘இந்தக் கதை எழுதிய பையனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். தம்பி வாங்க’ என்று ஸ்ரீதரை மேடைக்கு அழைத்தார் அண்ணாச்சி. இன்னும் பலமாக கைதட்டினார்கள். முதல் படைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.

இதையடுத்து, நாடகங்கள். பின்னர் சினிமாக்கள். பல படங்களுக்கு கதை எழுதினார். வசனம் எழுதினார். கதை, வசனம் எழுதினார். சிவாஜி இரட்டை வேடங்களில் ஸ்டைலால் அசத்திய ‘உத்தமபுத்திரன்’ படத்துக்கு வசனம் எழுதினார். ராஜாக்கள் காலத்துக் கதையில், நாம் பேசுவது போலவே வசனங்கள் எழுதினார். சினிமா பிரமாண்ட எல்லைகளைக் கடந்து யதார்த்தம் உணர்ந்து இன்னும் நெருக்கமானார்கள் ரசிகர்கள்.

‘வீனஸ் பிக்சர்ஸ்’ எனும் பிரமாண்டமான நிறுவனத்தில் பங்குதாரர்களில் ஒருவரானார். ஒவ்வொரு படைப்பிலும் வித்தியாசம் காட்டினார். பின்னர், காதலைப் போற்றிக் கொண்டாடும் வகையில் ‘கல்யாண பரிசு’ தந்தார். ஸ்ரீதர் இயக்கிய முதல் படம். காதலை கவிதையாகவும் சொன்னார். தியாகமாகவும் உணர்த்தினார். நடுவே தங்கவேலுவைக் கொண்டு ‘மன்னார் அண்ட் கம்பெனி’ காமெடியையும் கொடுத்தார். எவரிடமும் உதவி இயக்குநராக இல்லாமல், அந்தக் காலத்தில் ஸ்ரீதர் நிகழ்த்திய ஆகப்பெருஞ்சாதனை இது.

அதுமட்டுமா? முதல் படத்துக்கு பலம் சேர்க்க, உச்ச நட்சத்திரங்களை அணுகவில்லை. இசையில் கோலோச்சுகிறவர்களை அழைக்கவில்லை. அதுவரை நமக்கெல்லாம் பாடகராகத் தெரிந்த ஏ.எம்.ராஜாவை இசையமைப்பாளராக்கினார்.

ஒரு படத்துக்கு கதை முக்கியம். கதை மட்டுமே முக்கியமில்லை என்பதை உணர்ந்திருந்தார் ஸ்ரீதர். கதையில் கவனம் செலுத்தினார். திரைக்கதையாக விரித்தார். வசனங்கள் இயல்பாக எழுதினார். ஒளிப்பதிவிலும் கோணங்களிலும் கவனம் செலுத்தினார். இசையில் தனிக்கவனம் செலுத்தினார். நடிகர்களிடம் போதுமான நடிப்பையும் உணர்வையும் வாங்கினார். ஒரு இயக்குநர் என்ன செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் செய்தார். அதனால்தான் நடிகர்களின் படம், தயாரிப்பு நிறுவனத்தின் படம் என்று பேசி வந்த ரசிகர்கள், இயக்குநரின் படம், ஸ்ரீதரின் படம் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள். அதைத் தொடக்கி வைத்தவர்... ஸ்ரீதர்.
தோற்றுப்போனவனின் கதையை, வலியை கதையாக்க மாட்டார்கள் என்பார்கள். ஆனால், ‘சுமைதாங்கி’ தோற்றதன் வலியைச் சொன்னது. ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’, ‘மயக்கமா கலக்கமா’ பாடல்களெல்லாம் இன்றைக்கும் என்றைக்குமான பாடல்களாக அமைந்தன.

மருத்துவமனை. டாக்டர், நர்ஸ், நோயாளிகள். இப்படியொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, காதல் காவியமே படைத்தார் ஸ்ரீதர். அதுதான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. நோயாளியையும் காதலியையும் காதலையும் காப்பாற்றிவிட்டு, மடிந்து போகிற டாக்டர் என்று ஸ்ரீதர் வைத்த ட்விஸ்ட்டுதான், நெஞ்சங்களில் இன்றைக்கும் பதித்துவிட்டது அந்தப் படத்தை. முழுக்க முழுக்க ஒரே களத்தில், ஆஸ்பத்திரியில் படம் என்பதும் புதுசு. ’நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ பாடலும் ‘எங்கிருந்தாலும் வாழ்க’ பாடலும் பாடாதவர்களே இல்லை. முக்கியமாக, ‘சொன்னது நீதானா’ பாடலைப் பார்த்தால் மிரண்டு போவோம். படுக்கையில் முத்துராமன். படுக்கைக்கு பக்கத்தில் தேவிகா. இவர் படுத்திருப்பார். அவர் சிதார் வாசிப்பார். இருவரும் பாட்டு முடியும் வரை எழுந்திருக்கமாட்டார்கள். ஆனால், நண்பரும் ஒளிப்பதிவாளருமான வின்சென்டை வைத்துக்கொண்டு, கேமிராவில் வித்தை காட்டி ஜாலம் செய்திருப்பார் ஸ்ரீதர்.

முன் ஜென்மக் கதை என்பது ரிஸ்க். ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். அதற்கு முன்பு அப்படி ஏற்றதுமில்லை. ஆனால், சரியான லாஜிக், காட்சிப்படுத்துதல், அந்தக் கால ஆணவக் கொலை, காதல் என்பதைக் கொண்டு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தந்தார்.

தடக்கென ரூட் மாற்றினார். சீரியஸ் படங்களில் இருந்து அப்படியே விலகி, முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம் தந்தார். அந்தப் படம்தான் தமிழ் சினிமாவின் டாப் லிஸ்ட் காமெடிப்படங்களில் மிக முக்கியமான படம். அந்த ‘செல்லப்பா’, ‘விஸ்வநாதன் வேலை வேணும்’, ‘உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா’, ‘அசோகர் உங்க மகருங்களா?’ என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்தப் படம் ‘காதலிக்க நேரமில்லை’.

வேலையில்லா இளைஞர்களை ‘நெஞ்சிருக்கும் வரை’யில் காட்டுவார். வேலையில்லா இளைஞர்கள், விலை உயர்ந்த ஷூ, பேண்ட் என்றிருப்பார்களா என்ன? இதையெல்லாம் யோசித்த ஸ்ரீதர், மேக்கப் கூட போடாமல், சிவாஜியை நடிக்க வைத்தார். ’சிவந்த மண்’ படத்திலும் அப்படித்தான். ‘சிவந்த மண்’ முதன் முதலாக வெளிநாட்டில் சென்று எடுக்கப்பட்ட படம் என்றால், ஸ்ரீதரின் ‘தேன் நிலவு’ காஷ்மீருக்குப் போய் எடுக்கப்பட்ட படம்.

ஜெமினியை வைத்து எடுப்பார். கல்யாண்குமாரை வைத்து எடுப்பார். சகஸ்ரநாமத்துக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுத்து எடுப்பார். சிவாஜியை ரசித்து ரசித்து எடுப்பார். முத்துராமனை வைத்து நகாசு பண்ணுவார். முழுக்க முழுக்க புதுமுகங்களைக் கொண்டு வண்ணத்தில் ஜாலம் காட்டுவார். அப்படி ‘வெண்ணிற ஆடை’யில் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ரவுண்டு வந்தார்கள். ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா, ஜெயலலிதா என்பதெல்லாம் தெரியும்தானே!

‘சிவந்த மண்’ படத்தில், ‘ஒரு ராஜா ராணியிடம்’ பாடலும் ‘பட்டத்து ராணி பார்க்கும் பார்வை’ பாடலும் இன்றைக்குக் கேட்டாலும் அசந்துதான் போவோம். இந்தப் பக்கம் கண்ணதாசன். அந்தப் பக்கம் மெல்லிசை மன்னர். நடுவே அமர்ந்துகொண்டு, இருவரிடம் இருந்து என்னென்ன தேவையோ, அவற்றையெல்லாம் அள்ளியெடுத்து நமக்குத் தந்த மகா ரசிகன், மகா கலைஞன் ஸ்ரீதர்.

’கலைக்கோவில்’, ’கொடிமலர்’ மாதிரியான தோல்விப்படங்கள் உண்டுதான். ஆனாலும் புதுமை இயக்குநர் எனும் பேருக்கேற்ப, அவற்றிலெல்லாம் தன் முத்திரையைப் பதிக்க தவறவே இல்லை ஸ்ரீதர்.

எழுபதுகளின் தொடக்கத்தில் இவர் இயக்கிய ‘அவளுக்கென்று ஓர் மனம்’ படமும் நாயகியின் மன ஓட்டமும் பார்த்து, அதிர்ந்து போனார்கள் ரசிகர்கள். ‘உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ பாடலை மறக்கவே முடியாது.

கருப்பு வெள்ளைக் காலம் கலருக்கு முழுக்கவே மாறியது. எழுபதுகளில் எம்ஜிஆரை இயக்கினார். அப்போது, இருவருமே ‘உரிமைக்குரல்’ மூலம் வெற்றியைச் சுவைத்தார்கள். எழுபதுகளின் நிறைவுக்கு முன்னதாக, கமல், ரஜினியை வைத்து இளையராஜாவுடன் சேர்ந்து ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தை வழங்கினார். இந்தப் படத்தில், ஸ்ரீதருக்கே உண்டான 'டச்' கள் ஏராளம். ஸ்ரீப்ரியாவின் கேரக்டர் ஒருவிதம். ஜெயசித்ராவின் கேரக்டர் இன்னொரு விதம். கமலின் கேரக்டர் அப்படி. ரஜினியின் கேரக்டர் இப்படி. ‘ஸ்லிப்’ என்றொரு விஷயத்தை வைத்துக்கொண்டு நவீனத்துக்குள்ளும் புகுந்து விளையாடினார் ஸ்ரீதர்.

‘ஊட்டி வரை உறவு’ம் ‘பூமாலையில் ஓர் மல்லிகை’யும் ‘தேடினேன் வந்தது’ பாடலும் ‘ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’யும் என்றைக்கும் நம்மோடு உறவாடிக்கொண்டிருக்கும். இளையராஜாவுடன் இணைந்து ‘தென்றலே என்னைத் தொடு’ தந்தார். எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. வெற்றிப்படமாகவும் அமைந்தது. அதேசமயம் ‘நினைவெல்லாம் நித்யா’ தோல்விப்படமானது. ஆனால் என்ன... மறக்கவே மறக்கமுடியாத அளவுக்கு அத்தனைப் பாடல்களையும் அமைத்திருந்தார் ஸ்ரீதர். ‘தோளின் மேலே பாரமில்ல’, ‘ரோஜாவை தாலாட்டும் தென்றல்’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘பனிவிழும் மலர்வனம்’ என்று நினைவெல்லாம் இந்தப் படத்தின் பாடல்கள்தான்!

வில்லன், கொடூர வில்லன் என்றெல்லாம் காட்டுகிற நிலையில் கதை பண்ணாமல், கதையின் சூழலையே வில்லனாக்கி விடுவதுதான் ஸ்ரீதர் கையாண்ட யுக்தி. தமிழ் சினிமா எனும் புள்ளிக்குள் பிரமாண்ட மார்கழிக் கோலங்களை இட்டு நிரப்பியவர் ஸ்ரீதர் என்று காலம் இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. என்றைக்கும் கொண்டாடிக்கொண்டே இருக்கும்.

33ம் ஆண்டு பிறந்த இயக்குநர் ஸ்ரீதர், 2008ம் ஆண்டு, அக்டோபர் 20ம் தேதி காலமானார். 75வது வயதில் காலமானார். இன்று ஸ்ரீதரின் 12வது நினைவு தினம்.
புதுமை ப்ளஸ் இளமை இயக்குநர் ஸ்ரீதரைப் போற்றுவோம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x