Last Updated : 18 Oct, 2020 03:40 PM

 

Published : 18 Oct 2020 03:40 PM
Last Updated : 18 Oct 2020 03:40 PM

'தாய்மாமா எம்ஜிஆர்’, ‘சின்னப்பாப்பு சில்க் ஸ்மிதா’, அப்பாவி போலீஸ் வீராச்சாமி நாயுடு’,  எம்ஜிஆரின் ‘அண்ணா நீ என் தெய்வம்’ , பாக்யராஜின் ‘அவசர போலீஸ் 100’ - பாக்யராஜின் மேஜிக் திரைக்கதையில் எம்ஜிஆர் படம் வெளியாகி 30 ஆண்டுகள் 

ஒரு படத்தை எடுப்பார்கள், எடுப்பார்கள், எடுத்துக்கொண்டே இருப்பார்கள். பல வருடங்கள் கழித்து படம் வெளிவரும். தயாரிப்பாளருக்கு பணப்பிரச்சினை, நடிகரின் கால்ஷீட் சிக்கல், திடீரென படத்தில் நடித்தவர்களில் ஒருவர் இறந்துவிட்டார் என்று ஏதேனும் ஒரு காரணத்தால் படம் தள்ளிப் போகும். தள்ளிக்கொண்டே போய் ஒருகட்டத்தில் முடியும். பல படங்கள் பாதியிலேயே நின்றுவிடும். நின்றது நின்றதுதான். அவ்வளவுதான் என்று எத்தனையோ படங்கள் கால்வாசியிலேயே முடிந்திருக்கின்றன. அப்படி வேறொரு காரணத்தால் நின்று விட்ட படத்தை, பல வருடங்கள் கழித்து, வேறொரு கதையை செருகி, வேறொரு இயக்குநர் இயக்கி புதியதொரு சாதனையைத் தொட்டது அந்தப் படம். அப்படி நின்று போன படம் ‘அண்ணா நீ என் தெய்வம்’. மீண்டும் புத்துயிர் பெற்று வந்த படம் ‘அவசர போலீஸ் 100’.
புதுமை இயக்குநர் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீதர், எழுபதுகளுக்குப் பிறகு எம்ஜிஆரை வைத்து ‘உரிமைக்குரல்’ எடுத்தார். மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் பின்னர் ‘மீனவ நண்பன்’ எடுத்தார். அதுவும் வெற்றியைப் பெற்றது.

இதன் பிறகு எம்ஜிஆர், லதா, நம்பியார், சங்கீதா முதலானோர் நடிக்க, ‘அண்ணா நீ என் தெய்வம்’ என்ற படத்தை எடுத்தார். அறிஞர் அண்ணாவைக் குறிப்பது போல் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்தப் படம் அண்ணன், தங்கை பாசத்தைக் கொண்ட கதையாகவும் பழிவாங்கும் கதையாகவும் சேர்த்துப் பின்னப்பட்டிருந்தது.

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து அரசியலில் முழு மூச்சாக இறங்கியிருந்தார். அதேசமயம் படங்களிலும் நடித்து வந்தார். தன் படங்களிலும் கட்சிக் கொடியைக் காட்டி வந்தார். இந்த சமயத்தில்தான் ஸ்ரீதரின் இயக்கத்தில் ‘அண்ணா நீ என் தெய்வம்’ படத்தில் நடிக்க முடிவு செய்தார். பட பூஜை போடப்பட்டது. படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழகமெங்கும் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கினார். தேர்தல் வந்தது. எம்ஜிஆர், ஆட்சியைப் பிடித்தார்.

’மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ தான் எம்ஜிஆர் நடித்து கடைசியாக வந்த படம். இதன் பின்னர், ‘அண்ணா நீ என் தெய்வம்’ வந்திருக்க வேண்டியது. கால்வாசி அளவு எடுத்த வகையில், அப்படியே நின்று போனது. இது 77ம் ஆண்டு நிகழ்ந்த விஷயங்கள்.

திரைக்கதையின் மன்னன் என்று இந்தியாவெங்கும் புகழப்படுபவர் பாக்யராஜ். இந்த 77ம் வருடத்தில்தான், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் உதவி இயக்குநராக திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்திருந்தார். 79ம் ஆண்டு, ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரமெடுத்தார். பின்னர் இயக்குநர் பாக்யராஜ், நடிகர் பாக்யராஜ், திரைக்கதை வசனகர்த்தா பாக்யராஜ் என்று அறியப்பட்டார். கொண்டாடப்பட்டார்.

‘மெளன கீதங்கள்’, ‘இன்று போய் நாளைவா’, ‘விடியும் வரை காத்திரு’, ‘அந்த ஏழு நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘முந்தானை முடிச்சு’ என்று தன் ஒவ்வொரு படங்களிலும் உச்சம் தொட்டார் பாக்யராஜ்.

இந்தசமயத்தில்தான், ‘அண்ணா நீ என் தெய்வம்’ படம் குறித்தும் அந்தப் படம் சுமார் 4 ஆயிரம் அடி வரை மட்டுமே எடுக்கப்பட்டிருப்பது குறித்தும் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்றும் பேசப்பட்டது. எம்ஜிஆர் நடித்திருந்த காட்சிகளையும் ‘அண்ணா நீ என் தெய்வம்’ படத்தின் மற்ற காட்சிகளையும் பார்த்தார் பாக்யராஜ்.
இதையடுத்து, ஒரு கதையை ரெடி செய்தார். அந்தக் கதைக்குள் ‘அண்ணா நீ என் தெய்வம்’ படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சிகளைச் சேர்த்தார். ‘அண்ணா நீ என் தெய்வம்’ படத்தில் எம்ஜிஆர் நாயகன். அவரை தாய்மாமனாக்கினார். எம்ஜிஆரின் தங்கை சங்கீதாவின் மகனாக பாக்யராஜ் நடித்தார்.

அதுமட்டுமா? இரண்டு வேடங்களில் பாக்யராஜ் நடித்தார். எம்ஜிஆர் பாணியில், வீரமான எம்ஜிஆர். அப்பாவி எம்ஜிஆர் போல, பயந்தாங்கொள்ளியாக ஒரு பாக்யராஜ். வீரத்துடன் இன்னொரு பாக்யராஜ். இரண்டு பேரில், அப்பாவித்தனமான பாக்யராஜ், போலீஸ். அந்த பாக்யராஜுக்கு கவுதமி ஜோடி. இந்த போலீஸ் பாக்யராஜுக்கு, சில்க் ஸ்மிதா.

‘வண்டிச்சக்கரம்’ படத்தில் இருந்து அறிமுகமாகி நடிக்கத் தொடங்கிய சில்க் ஸ்மிதாவுக்கு, குருநாதர் பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ எப்படி அட்டகாசமான கேரக்டர் கொண்ட படமாக அமைந்ததோ, சிஷ்யர் பாக்யராஜின் ‘அவசர போலீஸ் 100’ படத்திலும் அற்புதமான கேரக்டராக அமைந்தது.

கங்கை அமரனின் ‘கோழி கூவுது’ போல, பாலுமகேந்திராவின் ‘மூன்றாம் பிறை’ போல, ‘அவசர போலீஸ் 100’ படத்திலும் மிகப்பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சில்க் ஸ்மிதா. ‘இது நம்ம ஆளு’ சோமயாஜுலு, ‘முந்தானை முடிச்சு’ தீபா, ‘ஆராரோ ஆரிரரோ’ ஜெய்கணேஷ், ‘ராசுக்குட்டி’ கல்யாண்குமார், ‘எங்க சின்ன ராசா’ குலதெய்வம் ராஜகோபால்’ போல் அருமையான கேரக்டரை இதில் சில்க்கிற்குக் கொடுத்திருந்தார் பாக்யராஜ்.

எம்.எஸ்.விஸ்வநாதன், ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி முதலானோரின் கூட்டணியை வைத்துக்கொண்டு, அசத்தியிருந்தார் பாக்யராஜ்.

''77ம் ஆண்டு படத்துக்குப் பூஜை போடப்பட்டு, பாதியில் நின்றுவிட்ட ‘அண்ணா என் தெய்வம்’ படத்தை எம்ஜிஆர் மறந்தேபோனார். ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். எந்தக் குறையும் எவருக்கும் வைக்காத எம்ஜிஆர், இப்படியொரு குறை வைத்துவிட்டார் எனும் பேச்சு வந்தது. என்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. ‘நான் வேறொரு கதை பண்றேன். அதுக்குள்ளே எம்ஜிஆர் அவர்கள் நடிச்சதை இணைக்கற மாதிரி ஸ்கிரிப்ட் ரெடி பண்றேன்’ என்று சொன்னேன்.

இதை அறிந்த எம்ஜிஆர் என்னை அழைத்தார். ‘ஏன் இந்த வேலை, வேணாமே’ என்றார். ‘பண்றேன் சார்’ என்று உறுதியாகச் சொன்னேன். அதன் பிறகு இந்தப் படத்துக்கு கதை முழுவதையும் ரெடி பண்ணி, அவரிடம் சொன்னேன். ‘இதில் நீ எப்படி நடிக்கப் போகிறாய்?’ என்று கேட்டார். ‘உங்க தங்கச்சிக்கு பையன் பொறக்கிறான். அந்தப் பையனா, டபுள் ஆக்ட் பண்றேன்’ என்று கதையைச் சொன்னதும் வியந்து போனார். பாராட்டினார். ஆனால், அவர் உயிருடன் இருக்கும்போதே இந்தப் படத்தை வெளியிட முடியாமல் போனதே என்கிற வருத்தம் இன்றைக்கும் உண்டு’ என்று பாக்யராஜ் தெரிவித்தார்.

77ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர், 87ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அந்த வருடம் காலமானார். அதன் பின்னர் 90ம் ஆண்டில்தான் ‘அவசர போலீஸ் 100’ படம் வெளியானது. மிகப்பெரிய அளவில் வெற்றியைச் சுவைத்திருக்க வேண்டிய படம் இது. வீராசாமி நாயுடு எனும் போலீஸ் கதாபாத்திரத்தில் கலகலப்பூட்டியிருப்பார் பாக்யராஜ்.

இன்னொரு விஷயம்... பாக்யராஜ் படங்களுக்கு இந்தியிலும் தெலுங்கிலும் மிகப்பெரிய மார்க்கெட் வேல்யூ உண்டு. பாக்யராஜின் பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன. ‘அவசர போலீஸ் 100’ திரைப்படமும் 94ம் ஆண்டு இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ’கோபி கிருஷன்’ என்ற பெயரில் சுனில் ஷெட்டி எடுத்து, செம ஹிட்டைக் கொடுத்தது அங்கே!

‘என் கலையுலக வாரிசு’ என்று பாக்யராஜை அறிவித்தார் எம்ஜிஆர். பாக்யராஜின் படங்களில் எம்ஜிஆரின் புகைப்படங்கள், பாடல்கள், வசனங்கள் என்று இடம் பெறுவது வழக்கம். 4000 அடி வரை எடுத்து நிறுத்தப்பட்டிருந்த படச்சுருளை வைத்துக்கொண்டு, ‘அண்ணா நீ என் தெய்வம்’ படத்தை ‘அவசர போலீஸ் 100’ என்று படமெடுத்த பாக்யராஜ்... ‘எம்ஜிஆர் நீ என் தெய்வம்’ என்பதை நிரூபித்திருந்தார்.

90ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெளியானது ‘அவசர போலீஸ் 100’. நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவில், திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நிகழ்த்திய மேஜிக் படமான இதுவும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x