Published : 18 Oct 2020 02:51 PM
Last Updated : 18 Oct 2020 02:51 PM

’லட்சுமி பாம்’ பெயர் வைத்தது ஏன்? - லாரன்ஸ் பேட்டி

சென்னை

'லட்சுமி பாம்' பெயர் வைத்ததன் பின்னணி குறித்து இயக்குநர் லாரன்ஸ் பேட்டியளித்துள்ளார்.

2011-ம் ஆண்டு தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த படம் 'காஞ்சனா'. தற்போது இந்தப் படம் 'லட்சுமி பாம்' என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிக்க, லாரன்ஸ் இயக்கியுள்ளார்.

கரோனா நெருக்கடியால் தற்போது இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் வெளியீடாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் நவம்பர் 9-ம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

தற்போது 'லட்சுமி பாம்' படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. 'காஞ்சனா' இந்தி ரீமேக் குறித்து லாரன்ஸ் அளித்துள்ள பேட்டி:

'காஞ்சனா' என்கிற பெயரை மாற்ற வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்?

படத்தின் பிரதான கதாபாத்திரத்தின் பெயர் 'காஞ்சனா' என்பதால் தமிழில் அந்தப் பெயர் வைக்கப்பட்டது. அதற்கு 'தங்கம்' என்று பெயர். லட்சுமி தேவியின் ஒரு வடிவம் அது. இந்தியில் ரீமேக் செய்யும் போது அதே பெயரை வைக்கலாம் என்று முதலில் யோசித்தேன். ஆனால் இந்தி ரசிகர்கள் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்பதால் லட்சுமி என்றே வைத்துவிட்டோம். கடவுளின் அருளால் படம் அற்புதமாக வந்திருக்கிறது. எனவே 'லட்சுமி பாம்' என்று பெயர் வைத்தோம். லட்சுமி வெடியைப் போல படத்தில் வரும் அந்தத் திருநங்கை கதாபாத்திரம் வலிமையானது. அதனால் இந்தப் பெயர் கச்சிதமாகப் பொருந்திவிட்டது.

படத்தின் ட்ரெய்லரில் பல நடிகர்கள் இருக்கின்றனர். ட்ரெய்லர் உற்சாகமான உணர்வைத் தந்தது. கதை குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் சொல்லுங்கள்

ரசிகர்களுக்கு நகைச்சுவை கலந்து திகில் அனுபவத்தைத் தர வேண்டும் என்ற முனைப்பில் தான் இந்தக் கதை உருவாக்கப்பட்டது. முதல் முறையாக ஒரு திகில் நகைச்சுவைக் கதையில் திருநங்கைகளைப் பற்றிய முக்கியமான சமூகக் கருத்தைச் சொல்ல முயற்சித்திருக்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வெவ்வேறு தன்மைகளை ரசிகர்கள் ரசிக்கும்படி தான் அந்த கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

திருநங்கைகள் சமூகத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கதை உருவாக்க எது உங்களைத் தூண்டியது?

நான் ஒரு அறக்கட்டளையை நடத்துகிறேன். ஒரு திருநங்கை உதவி கோரி எங்கள் அமைப்பை நாடினார். அவரது கதையைக் கேட்டபோது இந்தக் கதையை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். முதலில் 'காஞ்சனா' மூலமாக, இப்போது லட்சுமி மூலமாக. படம் பார்த்தபிறகு நான் எதைப் பற்றிப் பேசுகிறேன் என்பது ரசிகர்களுக்குப் புரியும்.

ஒரு ஜனரஞ்சகமான பாலிவுட் நட்சத்திரம் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை, இது பற்றி உங்கள் கருத்து என்ன?

'காஞ்சனா' தமிழில் வெளியான பிறகு திருநங்கை சமூகத்தினரிடமிருந்து பெரிய வரவேற்பைப் பெற்றது. என் வீட்டுக்கே வந்து என்னை ஆசிர்வதித்தார்கள். இந்தியில் அக்‌ஷய் சார் நடிக்கும் போது படத்தின் கருத்தும் இன்னும் பெரிய ரசிகர்கள் கூட்டத்துக்குப் போய் சேரும் என்று நம்புகிறேன். இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அக்‌ஷய் சாருக்கு என் விசேஷமான நன்றிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x