Last Updated : 14 Oct, 2020 06:48 PM

Published : 14 Oct 2020 06:48 PM
Last Updated : 14 Oct 2020 06:48 PM

’கங்கை அமரன் லவ் பண்றதுக்கு என்னை பீச்சுக்கு கூட்டிட்டுப் போனான்’;‘நான் பெண் பார்த்த கதையைச் சொல்லுகிறேன்...’ - இயக்குநர் பாரதிராஜாவின் சுவாரஸ்ய அனுபவங்கள்

‘’கங்கை அமரன் லவ் பண்ணினான். அதற்காக என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்வான். அதெல்லாம் பிறகுதான் எனக்குத் தெரிந்தது. டைரக்டரானதும்தான் திருமணம் செய்துகொள்வேன் என்கிற வைராக்கியத்தை உடைத்தேன். அதற்காக, பெண் பார்க்கச் சென்ற கதை தெரியுமா?’’ என்று இயக்குநர் பாரதிராஜா தன் வாழ்வின் அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் பாரதிராஜா, ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதள சேனலில், தன் வாழ்க்கை அனுபவங்களை, திரையுலக அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

’’அப்போது இளையராஜா ரிக்கார்டிங்கில் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தான். அவன் தான் சம்பாதித்தான் அப்போது. அவனுக்கு ஒரு பாடலுக்கு இசைக்குழுவில் அவன் வாசித்தால் அறுபது ரூபாய் சம்பளம். நான் அந்த சமயத்தில், கிருஷ்ணாவிடம் சேர்ந்தேன். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் நான், இளையராஜா எல்லோரும் குடியிருந்தோம். எல்லையம்மன் காலனி வீட்டில் இருந்து உடுப்பி லாட்ஜுக்கு போகவேண்டும். அங்கேதான் அவர் தங்கியிருந்தார்.

அந்த லாட்ஜில் எனக்குத் தெரிந்தவர் இருந்தார். அவர் மூலமாக அவரைச் சென்று பார்த்தேன். எம்ஜிஆர் படங்களையெல்லாம் இயக்கியவர் அவர். ‘ரிக்‌ஷாக்காரன்’, ‘அன்னமிட்ட கை’ என பல படங்களை இயக்கியிருக்கிறார். அவரிடம் சென்றேன். யார், என்ன என்று விவரங்களையெல்லாம் கேட்டார். ‘போயிட்டு இன்னொரு நாளைக்கு வாங்க’ என்றார்.

ஒருவாரம் கழித்துச் சென்றேன். ’சரி, வாங்க’ என்று சேர்த்துக்கொண்டார். இதிலென்ன பியூட்டி என்றால், என்னுடைய முதலாளி கே.ஆர்.ஜி. முதலீடு செய்ய, ‘தலைப்பிரசவம்’ என்று ஒரு படம் எடுத்தார்கள். அந்தப் படத்தில் நான் அஸிஸ்டெண்ட் டைரக்டர். பொள்ளாச்சி ரத்னம் மற்றும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சிலர், தயாரிப்பாளர்கள்.

புட்டண்ணா கனகலிடம் இருந்ததால், கொஞ்சம் எளிமையாகவே இவரிடம் சென்று சேர்ந்தேன். இவரும் இனிமையானவர். அணுகக்கூடியவர். ’தலைப்பிரசவம்’ படத்தில், முத்துராமன், லட்சுமி நடித்தார்கள். மேட்டுப்பாளையத்தில் ஷூட்டிங். இதில் நிறைய அனுபவங்கள் எனக்கு.

இந்தப் படத்தில்தான் முதலாளி கே.ஆர்.ஜி அறிமுகமானார். என் முதல் படமான ‘16 வயதினிலே’ தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவும் படப்பிடிப்புக்கு அடிக்கடி வருவார். அவரும் பொள்ளாச்சிக்காரர். என்னைப் பார்ப்பார்கள். நான் வேலை செய்யும் விதத்தையெல்லாம் பார்த்தார்கள். படம் முடிந்தது. வெளியானது. அதன் பிறகு வேலை இல்லை.

நான் கம்பெனி அஸிஸ்டெண்ட். அதனால், அதன் பிறகு அவினாசியிடம் வேலை பார்த்தேன். அதற்குப் பிறகு சங்கரய்யா (ரா.சங்கரன்) அவரிடம் வேலை பார்த்தேன். இதன் பிறகு கடைசியாக இன்னொரு டைரக்டரிடம் வேலை பார்த்தேன். அதுதான் கடைசி. அதன் பிறகு டைரக்டராகிவிட்டேன். அந்த டைரக்டரிடம் நான் சண்டைபோட்டுவிட்டு வந்துவிட்டேன்.

அந்தப் படத்தில் செளகார் ஜானகி அம்மா நடித்தார்கள். என்னை, ஒளிப்பதிவாளரை எல்லோரும் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார்கள். மிகப்பெரிய அந்தஸ்து கொண்ட பெண்மணி அவர். அப்போது செளகார் ஜானகியம்மா சொன்னார்... ‘தலைநிறைய பூ வைச்சிக்கிட்டு, வெள்ளிக்கிழமை அதுவுமா உனக்கு ரிங் (மோதிரம்) மாட்டிவிடுறேன். சீக்கிரமே நீ பெரிய டைரக்டராவே’ என்று சொன்னார்.

அந்த அம்மா சொன்ன வாய்முகூர்த்தமோ என்னவோ தெரியவில்லை... எனக்கும் அந்த டைரக்டருக்கும் தகராறு வந்துவிட்டது. ’இந்தப் படத்துல உதவி டைரக்டர்னு எம்பேரை போடக்கூடாது’ என்று சொல்லிவிட்டேன். காரணம் படம் நன்றாக இல்லையாம். அந்த டைரக்டருக்கு கோபம் வருமா வராதா? ‘இவனை வெளியே போகச்சொல்லுங்கய்யா’ என்று சொல்லிவிட்டார். அப்போது வெளியே வந்தவன் தான் நான். அப்போது சொன்னேன்... ‘இனிமே நான் டைரக்டராவேனே தவிர, இனி யார்கிட்டயும் உதவி டைரக்டரா வேலை செய்யமாட்டேன்’ என்று சொன்னேன். ’இல்லேன்னா... ஊர்ல போய் ஆடு மாடு மேய்ப்பேன்’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அடுத்த மூன்றே மாதத்தில்... ஒருநாள்... ஒரு பொழுதில்... என்னுடைய காட்ஃபாதர், எஸ்.ஏ.ராஜ்கண்ணு, வந்து என்னைப் பார்த்தார். ’இங்கே வா, ஒரு கதை சொல்லு’ என்றார். மூன்று கதை வைத்திருந்தேன். ‘சிகப்பு ரோஜாக்கள்’, ’16 வயதினிலே’, ‘ஒரு மியூஸிஸியன் கதை’. இவர் எப்படி படம் எடுப்பார்? யோசனையிலேயே இருந்தேன்.
இந்த என் முதல் படத்தைச் சொல்லுவதற்கு முன்பு, என் கல்யாணக் கதையைச் சொல்லவேண்டும். முதல் பட சமயத்திலெல்லாம் எனக்குக் கல்யாணமாகிவிட்டது. இளையராஜா கொஞ்சம் சம்பாதிக்கத் தொடங்கினான். அப்போது ஊரிலிருந்து அம்மாவை அழைத்துவந்துவிட்டான். காரணீஸ்வரர் கோயில் தெருவில் இருந்தோம். இளையராஜா அம்மாதான் எங்களுக்குச் சமைத்துப் போடுவார்கள்.

கொஞ்சகாலம் கழித்து, நான் என் அம்மாவைக் கூட்டி வந்தேன். நான் ஒரு தனி வீடு, இளையராஜா எல்லோரும் தனி வீடு. இப்படி இருந்த காலகட்டத்தில், நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில், மனோரமா ஆச்சி நடித்த படத்தில் வேலை பார்த்தேன். அவர், எனக்காக காரைக்குடியில் பெண் பார்த்தார். ’இல்லீங்கம்மா. எங்க ஊர்க்காரய்ங்க வெட்டிப்புடுவாய்ங்க. பரவாயில்லம்மா’ என்றேன். இது அப்படிப் போச்சு.

அடுத்ததாக, இளையராஜா மற்றும் அவன் சகோதரர்கள் எல்லோரும் பம்பாய்க்கு கச்சேரிக்குச் சென்றார்கள். கம்யூனிஸ்ட் பார்ட்டி இல்லையா. அப்படிக் கச்சேரிக்குச் சென்றார்கள். அங்கே இளையராஜாவின் சகோதரர் பாஸ்கருக்கு, அங்கே கல்யாணம் செய்துவைத்தார்கள். இன்றைக்கு வாசுகி பாஸ்கர் இருக்காளே... அவருடைய அம்மா சுசீலா. கல்யாணம் செய்துகொண்டு சென்னைக்கு வந்தார்கள். எனக்கு ஷாக். ‘என்னடா, கச்சேரி பண்ணப் போனீங்க. கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கீங்க’ என்றேன்.
இதற்குப் பிறகு ‘கல்யாணம் பண்ணு கல்யாணம் பண்ணு’ என்று என்னை தொந்தரவு செய்துகொண்டே இருந்தார்கள். ஆனால் நான், ‘டைரக்டராகாமல் கல்யாணம் பண்ணமாட்டேன்’ என்று சொல்லிவிட்டேன். அந்த வைராக்கியத்திலேயே இருந்தேன். என் அம்மாவும் சொன்னார்கள். ஆனால் உறுதியாக இருந்தேன்.

இந்த சமயத்தில், இளையராஜா, அவனுடைய அக்கா மகள் ஜீவாவை கல்யாணம் செய்துகொண்டான். அவனும் கல்யாணம் செய்துகொண்டான். அடுத்து கங்கை அமரன். இவன் என்ன பண்ணினான் தெரியுமா?

என்னை பீச்சுக்குக் கூட்டிப்போவான். ‘இவன் ஏன் நம்மளை கூட்டிட்டுப் போறான்?’ என்று குழப்பமாக இருக்கும். பார்த்தால் அங்கே ஒரு பெண் உட்கார்ந்துகொண்டிருப்பார் (வெங்கட்பிரபுவின் அம்மா). என்னிடம் பேசுவது போல், அங்கே அந்தப் பெண்ணிடம் ஜாடையாகப் பேசிக்கொண்டிருப்பான்.

ஒருநாள் கங்கை அமரனிடம் ‘ஏண்டா, பெரிய இடத்துப் பொண்ணுடா. லவ்வுகிவ்வுன்னு இருக்கியே. ஏதாவது ஆகிடப்போவுதுடா’ என்று சொன்னேன். அப்புறம் அவர்கள் வீட்டுக்குத் தெரிந்து, இவர்கள் வீட்டுக்குத் தெரிந்து காம்ப்ரமைஸ் ஆகி, இரண்டுபேருக்கும் கல்யாணம் செய்து வைத்தோம்.

அப்புறம் நான் மட்டும்தான் கல்யாணம் செய்துகொள்ளாமலே இருந்தேன். எல்லோரும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ‘சரி, என்னிக்கி நாம டைரக்டராகறது. கல்யாணம் பண்ணிருவோம்’ என்று வைராக்கியத்தை உடைத்தேன்.

நான்கைந்து இடத்தில் பெண் பார்த்தார்கள். அதில் கோகிலாபுரம் என்று ஒரு ஊர். உத்தமபாளையத்துக்கு அருகில் உள்ள ஊர். ’நாங்களாம் போய் பொண்ணைப் பாத்துட்டு சம்மதம் சொல்லிட்டு வந்துட்டோம்டா’ என்று வீட்டில் சொன்னார்கள். நான் என்ன பண்ணினேன்... சேகர் என்று எங்கள் சின்னம்மா பையன்... இப்போது அவன் இல்லை. முதன்முதலில் அவனிடம் ‘16 வயதினிலே’ கதையெல்லாம் சொல்லியிருக்கிறேன். ’டேய் சேகரு... அவய்ங்களா பாத்துட்டு வந்துருக்காய்ங்கடா. நாம ஒரு எட்டு போய், பொண்ணைப் பாத்துருவோம்டா’ என்றேன். ‘அண்ணே, அப்படிலாம் போக முடியாதுண்ணே. வெட்டிப்புடுவாய்ங்கண்ணே’ என்றான். ’வாடா’ என்று அழைத்துச் சென்றேன். அவன் அந்தப் பெண்ணை பார்த்திருந்தான். தெரியும் அவனுக்கு.

நாங்கள் யாருக்கும் தெரியாமல், யாருக்கும் சொல்லாமல், பஸ் ஏறி, கோகிலாபுரம் போனோம். அந்தப் பெண், வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டு பேன் பார்த்துக்கொண்டிருந்தது. ‘அண்ணே, அதோ பேன் பாத்துட்டிருக்கிற பொண்ணுதாண்ணே உனக்குப் பாத்திருக்கு’ என்றான். பேண்ட், சட்டை போட்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ஊருக்குப் புதிதாக வந்திருக்கிறான் என்று என்னைப் பார்த்ததும் உள்ளே ஓடிவிட்டது.

அப்புறம் எதிரில் இருக்கும் கடைக்குப் போவது மாதிரி போக்குகாட்டினேன். அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்து ஒரு பெண்மணி வந்தார். ‘ஏம்மா, இதானே இவங்க வீடு’ என்றேன். என்னை விசாரித்தார். விஷயம் சொன்னதும் ‘வாங்க வாங்க’ என்று வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்தார். அந்தப் பெண்மணி, வேலைக்காரப் பெண்மணி. ‘பெண்ணைப் பெத்தவங்க தோட்டத்துல வேலை பாத்துக்கிட்டிருக்காங்க. இதோ சொல்லிவிடுறேன்’ என்றார். ’என்னடா இது, இப்படி ஒரு ஊர்ல பொண்ணை எடுக்கறாங்களே’ என்று யோசனை. ’நாம மெட்ராஸ்ல போய் வாழணுமே’ என்கிற கவலை எனக்கு.

அப்புறம் பெண்ணின் அம்மா, அப்பாவெல்லாம் வந்துவிட்டார்கள். அதற்கு முன்பு, பெண்ணைப் பார்க்கவேண்டுமே என்று ‘குடிக்க தண்ணி வேணும்’ என்று கேட்டேன். அந்தப் பெண், சொம்பில் தண்ணி எடுத்து, லேசாகக் கதவைத் திறந்து ‘டங்... டங்...’ என்று வைத்துவிட்டு கதவை சார்த்திக்கொண்டது’’

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x