Last Updated : 13 Oct, 2020 05:20 PM

 

Published : 13 Oct 2020 05:20 PM
Last Updated : 13 Oct 2020 05:20 PM

’’பாக்யராஜுக்கு கங்கை அமரன் தான் குரல் கொடுத்தான்; சிம்புவின் அம்மா உஷா மிகச்சிறந்த நடிகை!’’ - இயக்குநர் பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’ நினைவுகள்

‘’பாக்யராஜுக்கு கங்கை அமரன் தான் குரல் கொடுத்தான். ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் உஷாவை அறிமுகப்படுத்தினேன். சிம்புவின் அம்மா உஷா மிகச்சிறந்த நடிகை’’ என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா ‘என் இனிய தமிழ் மக்களே’ எனும் இணையதள சேனலில் தொடர்ந்து தன் திரை அனுபவங்களையும் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்.

அதில், பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்’ பட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

‘’தொடர்ந்து மூன்று படங்கள் வெற்றி பெற்றுவிட்டன. ‘16 வயதினிலே’, அடுத்து ‘கிழக்கே போகும் ரயில்’. இதன் பிறகு ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம். மூன்றுமே மிகப்பெரிய வெற்றிப் படங்கள். நான்காவது படம் பண்ணவேண்டும். எனக்கு இந்த வியாபார யுக்தியெல்லாம் அதிகமாகத் தெரியாது. சினிமா என்பது தங்க முட்டை இடுகிற வாத்து என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

என்னுடைய முதலாளி கே.ஆர்.ஜி அவர்கள். அவர்தான் என்னுடைய காட்ஃபாதர். இப்போது அவரில்லை. அவர்தான் ‘டேய்... சொந்தமா ஒரு படம் எடுறா’ என்றார். ’சொந்தமா படம் எடுக்கறதா? நாட்ல இது நடக்கிற விஷயமா? நான் போய் சொந்தமா எப்படி படம் எடுக்கமுடியும்?’ என்று கேட்டேன். ’பேப்பர்ல ஒரு விளம்பரம் கொடுறா. அப்புறம் பார்றா’ என்றார்.

அந்தக் காலம், இந்தக் காலம் மாதிரி கிடையாது. செல்வராஜ் என்று என்னுடைய நண்பன்.மிகச்சிறந்த கதாசிரியன். பல படங்களுக்கு கதை எழுதியிருக்கிறான். ’புதிய வார்ப்புகள்’ கதையை என்னிடம் சொன்னான். இதை சொந்தப் படமாக விளம்பரப்படுத்த வேண்டும். கையில் காசு கிடையாது. என்னுடைய முதலாளி ஐயாயிரம் ரூபாய் கொடுத்தார். ’இதைவைச்சு பூஜை போடு’ என்று சொன்னார். ’இதை வைச்சு பூஜை போடுறதா? படம் எடுக்க பணம்?’ என்று கேட்டேன். ‘வரும்டா’ என்று உறுதியாகச் சொன்னார்.

எப்படி வரும்? பணம் என்ன, வானத்தில் இருந்து கொட்டுமா?

ஒரு கால்பக்க விளம்பரம் கொடுத்தேன். அதற்கு முன்னதாக என்ன பண்ணினேன் தெரியுமா? படத்தின் ஹீரோ. ஒரு வாத்தியார் கேரக்டர். வாத்தியார் கேரக்டருக்காக வந்தவர்களுக்கு என் அஸிஸ்டெண்டாக இருந்த பாக்யராஜ், டயலாக் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தான். அப்போது அவன் ஒல்லிக்குச்சியாக இருப்பான். ’ஏண்டா, இந்த வாத்தியார் கேரக்டரை நீயே பண்ணக்கூடாதா?’ என்று பாக்யராஜிடம் கேட்டேன். ‘சார்... என்ன சார்?’ என்று பதறினான்.

’வாத்தியார் இப்படித்தான் இருக்கணும்னு இலக்கணமாடா இருக்கு? நீ நடி’ என்று சொன்னேன். பக்கத்தில் கண்ணாடி போட்டுக்கொண்டிருந்தவரிடம் கண்ணாடியை வாங்கி பாக்யராஜுக்கு போட்டுவிட்டேன். அவன் ஷாக்காகிவிட்டான். ஏதோ கிண்டல் பண்ணுகிறேன் என்று நினைத்துக்கொண்டான். ஏற்கெனவே, ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் போதே பாக்யராஜிடமும் அஸிஸ்டெண்டாக இருந்த (நடிகர்) விஜயனிடமும் ’உங்க ரெண்டுபேரையும் நடிகனாக்கறேன்டா’ என்று சொல்லியிருந்தேன். அவர்கள் சிரிப்பார்கள். ‘யாரை வேணா நடிக்கவைக்க முடியும்டா’ என்று சொன்னேன்.

இப்போது திரும்பவும் சொன்னபோது பாக்யராஜ் ஷாக்காகிவிட்டான். சென்னை மியூஸிக் அகாடமி ஹாலில், ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அதில், பள்ளி மாணவிகளின் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் உயரமான பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண் மிக அழகாக இந்தியில் பாடினாள். ’ரொம்ப அழகா இருக்கே இந்தப் பொண்ணு. இது யாரு? விசாரி’ என்றேன். விசாரித்ததில்,. அந்தப் பெண் நார்த் இண்டியன் என்று தெரிந்தது. சரி கேட்போம் என்று போனால், அவர்கள் மிகப்பெரிய குடும்பம். நான் என்னைப் பற்றி, என் மூன்று படங்களின் விவரங்கள் பற்றி ஆங்கிலத்தில் சொன்னேன். அவர்களுக்கு சம்மதம். ஃபிக்ஸ் பண்ணிவிட்டேன்.

ஆனால், அந்தப் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரியும். இந்தி தெரியும். தமிழ் கொஞ்சம் கஷ்டம். நம்ம ஆளு பாக்யராஜுக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். பாக்யராஜ், கவுண்டமணி என எல்லோரையும் வைகை அணைக்கு அனுப்பிவிட்டேன். ‘புதிய வார்ப்புகள்’ படம் முழுக்க, என்னுடைய கிராமத்தைச் சுற்றித்தான் எடுத்தேன். ’ராஜன், அந்தப் பொண்ணுகிட்ட எதுவும் இப்ப பேசிக்கவேணாம். ரெண்டு மூணு நாளாகட்டும்’ என்றேன். அந்தப் பெண்ணிடம், ‘இது ராஜன். ஹீரோ. என் அஸிஸ்டெண்ட்.’ என்று சொன்னேன். அந்தப் பொண்ணு ரதி பார்த்தார்.

முதன் முதலில் ஷாட் வைத்து எடுத்தேன். சென்டிமென்டாக இருக்கவேண்டும் என்று சூரியகாந்தி பூவுக்குப் பக்கத்தில் நிற்கவைத்து எடுத்தேன். கண்டமனூர் செல்லும் வழியில் எடுத்தேன். பாக்யராஜும் சரி, ரதியும் சரி... மிகப்பெரிய உச்சத்தில் பெயரும் புகழும் பெற்றுவிட்டார்கள். இன்றைக்கும் அந்தப் பக்கம் செல்லும் போது,அந்த மண்ணை வணங்குவேன்.

படத்துக்கு கதை தந்த ரைட்டர் செல்வராஜ், அப்போது பிஸியாகிவிட்டார். அதனால், அவர் கொடுத்த வசனங்களுக்கு மேலே பாக்யராஜ் கொஞ்சம் சேர்த்தான். பாக்யராஜ் அழகான ரைட்டர். ’புதிய வார்ப்புகள்’ படத்தில் ஒரு கேரக்டர் வரும். உஷா. ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகப்படுத்தினேன். உஷா நினைவிருக்கிறதுதானே. இன்றைக்கு டி.ராஜேந்தரின் மனைவி. சிம்புவின் அம்மா. அக்காவுக்கு சான்ஸ் கேட்டுத்தான் வந்தார்கள். ஆனால், உஷாவைப் பார்த்துவிட்டு, ‘ நீ நடிக்கலாமே’ என்று சொல்லி நடிக்க வைத்தேன். நாவிதரின் மகளாக நடித்திருந்தார் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில்.

உஷாவுக்கு இயல்பான முகம். நேச்சுரல் முகம். ஆர்ட்டிஸ்ட் முகமெல்லாம் இல்லை. ஒன்றுமே தெரியாமல் வந்து, மிகச்சிறப்பாக நடித்தார். அப்போது ஒன்பதாவதோ பத்தாவதோ படித்துக்கொண்டிருந்தார். நல்ல நடிகை. அதனால், ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் ஒரு கேரக்டருக்கு உஷாவை தேர்வு செய்தேன். பாக்யராஜ், ரதி, கவுண்டமணி, உஷா என்று ஒவ்வொருவராக செலக்ட் செய்தேன்.

எப்போதுமே நான், முதலில் பாடலைத்தான் எடுப்பேன். இரண்டு பாடல்களை எடுத்துவிட்டுத்தான் காட்சிகளைப் படமாக்குவேன். ஏனென்றால், நடிப்பவர்களுக்கு எடுத்த உடனே காட்சிகளைக் கொடுக்காமல், பாடலுக்கு நடிக்கச் சொல்லிக் கொடுக்கும் போது அதில் இன்னும் இலகுவாக இணைந்துவிடுவார்கள். முகமும் நடிப்பதற்குப் பழகிவிடும். அதனால்தான் புதுமுகங்களுக்கு பாடல்களை முதலில் எடுப்பேன்.

ரொம்ப சிக்கனாமாகத்தான் படப்பிடிப்பு நடத்தினேன். ஒரு சமையற்காரரை வைத்துக்கொண்டு, எளிமையான முறையில் படப்பிடிப்பு நடத்தினேன். ரதிக்கு, தமிழில் பேசவே வரவில்லை. இங்கிலீஷிலேயே பேசு, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். படத்தை பார்த்தால், ரதி ஆங்கிலத்தில் வாயசைப்பார். அதற்கு தமிழில் பேசிய வசனத்தை டப் செய்து செருகியிருப்பேன். பிறகு மூன்றாவது நான்காவது கட்ட படப்பிடிப்பில், க்ளைமாக்ஸில் கொஞ்சம் தமிழ் தெரிந்தது அவருக்கு.
பாக்யராஜ் நல்ல நல்ல டயலாக்காக எழுதியிருந்தான். ‘என்ன சார்...’ என்பான். ‘டேய், பாத்துக்கலாம்டா’ என்று சொன்னேன். அப்போது நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டெல்லாம் இருந்தார்கள். பெயர் நினைவில் இல்லை. அதேபோல், பாக்யராஜுக்கு கங்கை அமரன் தான் டப்பிங் கொடுத்தான். ஆரம்பத்தில், கங்கை அமரனை நடிக்கவைக்கலாமா என்று கூட ஒரு டிஸ்கஷன் இருந்தது. அப்புறம்தான் பாக்யராஜை நடிக்கவைத்தேன்’’

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x