Published : 09 Oct 2020 02:48 PM
Last Updated : 09 Oct 2020 02:48 PM

நவம்பர் 22-ல் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை

நவம்பர் 22-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரைத் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி அதிகாரியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

ஆனால், தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஜூலை 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால், கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் வந்தவுடன், ஊரடங்கைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி கடந்த மே மாதம் தயாரிப்பாளர் சங்கம் அவசர வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து அறிக்கையை சிறப்பு அதிகாரி அக்டோபர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி செப்.30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடக்கவில்லை. இந்நிலையில், நீதிமன்றம் ஏற்கெனவே அளித்த காலக்கெடுவுக்குள் திட்டமிட்டபடி தேர்தல் நடத்தி முடிக்கப்படாததால், தேர்தலை நடத்தி முடிக்க மேலும் கால அவகாசம் வழங்கக் கோரி ராதாகிருஷ்ணன் என்பவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி பி.டி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிசம்பர் 31-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனக் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும், தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையை 2021 ஜனவரி 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22-ம் தேதி நடைபெறும் என உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி எம்.ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார். சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலைக் கல்லூரியில் நவம்பர் 22 அன்று காலை 8 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 12-ம் தேதி வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரிந்து பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிர்வாகிகள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவார்களா என்று விசாரித்தபோது, "நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் யாருமே தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுவதாக இல்லை. ஆனால், உறுப்பினர்கள் யாராவது போட்டியிடுவது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம்" என்று தெரிவித்தார்கள்.

தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடும் எனத் தெரிகிறது. தாணு தலைமையில் ஒரு அணியும், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தலைமையில் ஒரு அணியும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x