Last Updated : 06 Oct, 2020 01:11 PM

 

Published : 06 Oct 2020 01:11 PM
Last Updated : 06 Oct 2020 01:11 PM

’மலையாள சினிமாவின் மனோரமா’... சுகுமாரி!  - பண்பட்ட நடிகை, தனித்துவக் குரல்... சுகுமாரிக்கு பிறந்தநாள்

கொடுமைக்கார கேரக்டராக இருந்தாலும் சரி... அன்பும் வாஞ்சையுமான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி... எந்தவிதமாகவும் நடிப்பவர்கள் குறைவுதான். அப்படி நடிப்பவர்களை ஏற்றுக்கொள்வதும் அரிதுதான். ஆனால் தமிழிலும் மலையாளத்திலுமாக அந்த நடிகை ஏற்று நடித்த கேரக்டர்களை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை பச்சக்கென பொருத்திக்கொண்டு மனதில் நின்றுவிடுவார் அந்த நடிகை. அவர்... சுகுமாரி.

திருவிதாங்கூர் சகோதரிகள் என்று போற்றப்படுபவர்கள் லலிதா, பத்மினி, ராகினி. இவர்களுடைய அம்மா, நடிகை சுகுமாரியின் அத்தை. அதாவது, லலிதா, பத்மினி, ராகினி மூவரும் சுகுமாரியின் அத்தை மகள்கள். ஆக, கலையும் நடனமும் நாடகமும் சினிமாவும் இவர்களுக்கு தூரத்து சொந்தமெல்லாம் இல்லை. ரத்த சம்பந்தம்.
அத்தையின் அரவணைப்பில், சென்னையில் வளர்ந்த சுகுமாரிக்கு, கலைகளில் ஆர்வம் வருவதில் வியப்பென்ன இருக்கிறது.

1940ம் ஆண்டு பிறந்த சுகுமாரி, அண்ணாவின் திரைக்கதையில் உதித்த ‘ஓர் இரவு’ என்ற படத்தில், சிறுமியாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கினார். இதுதான் அவருக்கு முதல்படம். அப்போது சுகுமாரிக்கு 11 வயது. இதைத் தொடர்ந்து தமிழில் படங்கள் வந்தவண்ணம் இருந்தன.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என அன்றைய தேதியில் எல்லார் படங்களிலும் வலம் வந்தார். நல்ல அம்மாவாகவும் நடிப்பார். பணத்திமிர் கொண்ட மாமியாராகவும் நடித்தார். இந்த சமயத்தில் மலையாளப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன. நல்ல நல்ல கேரக்டர்களாக அமைந்தன.

தமிழில் நடிக்கும் போது, இயக்குநர் ஏ.பீம்சிங்குடன் ஏற்பட்ட அன்பு பலப்பட்டது. ஏற்கெனவே பீம்சிங்கிற்குத் திருமணம் நடந்திருந்த நிலையில், சுகுமாரியை மணம் புரிந்துகொண்டார் பீம்சிங். அதேசமயம் திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த சுகுமாரியிடம் ‘உங்கிட்ட நல்ல திறமை இருக்கு. பிரமாதமான நடிகை நீ. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால நீ நடிக்காம இருக்கக்கூடாது. தாராளமா நீ நடிக்கலாம்’ என்றார் பீம்சிங். தமிழ், தெலுங்கு, மலையாளம் முதலான ஆறு மொழிகளில் ரவுண்டு கட்டி வலம் வந்தார் சுகுமாரி. இதில் மலையாளப் படவுலகில், எந்த இயக்குநர் படமெடுத்தாலும் எந்த நடிகர் நடித்தாலும் எந்தத் தயாரிப்பாளர் நடித்தாலும், முதலில் புக் செய்வது சுகுமாரியைத்தான். கதை பண்ணும்போதே, சுகுமாரிதான் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து, அவரின் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். நம்மூரில் காமெடியாகவும், குணச்சித்திரமாகவும் பன்முகங்களுடன் நடித்த மனோரமா, எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தியது போல், அங்கே சுகுமாரியைச் சொல்லுவார்கள். அதனால்தான், ‘மலையாள சினிமாவின் மனோரமா’ என்று கொண்டாடியது கேரளத் திரையுலகம்.

பணத்திமிரும் அலட்டலும் கர்வமும் கொண்டு நடிப்பதற்கு அந்தக் காலத்தில் எஸ்.வரலட்சுமியைத்தான் சொல்லுவார்கள். அவருக்குப் பிறகு அப்படியொரு கேரக்டரில் ‘மாப்பிள்ளை’ படத்தில் ஸ்ரீவித்யா, ‘சகலகலா வல்லவன்’ படத்தில் புஷ்பலதா, ‘வான்மதி’ படத்தில் வடிவுக்கரசி என்று பலர் நடித்தார்கள். வரலட்சுமிக்குப் பின்னர் அந்த இடம், சுகுமாரிக்குக் கிடைத்தது. ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில், ஜெயலலிதாவின் அம்மாவாக, சிவாஜியின் மாமியாராக அலட்சியமாக, அட்டகாசமாக நடித்திருப்பார். ‘வசந்தமாளிகை’யில் முகத்தை வெடுக்கென்று திருப்பி, எள்ளும்கொள்ளுமாக வெடிக்கிற பார்வையில் கவனம் ஈர்த்தார்.

நடிகை லட்சுமி நடித்த ‘சட்டைக்காரி’ மலையாளப் படத்தில், ஆங்கில இந்தியப் பெண்மணியாக நடித்த சுகுமாரியின் நடிப்பு, எல்லோராலும் பாராட்டப்பட்டது. கொஞ்சம் மலையாளம், கொஞ்சம் ஆங்கிலம் என சுகுமாரி பேசும் ஸ்டைல் கண்டு பிரமித்தார்கள் கேரள ரசிகர்கள்.

அங்கே ப்ரியதர்ஷன், பாசில் என முன்னணி இயக்குநர்கள் படமென்றால், சுகுமாரியும் வி.கே.ராமசாமியும் நிச்சயம் இருப்பார்கள். சோவின் நாடகங்களிலும் சீரியல்களிலும் சுகுமாரிக்கு அப்படியொரு அட்டகாசமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டன. நகைச்சுவை கலந்த பாத்திரங்களிலும் நடித்துச் சிரிக்கவைத்தார்.
மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட்டடித்த ‘ராம்ஜிராவ் ஸ்பீக்கிங்’ படத்தில் முதியோர் இல்லத்தில் இருப்பார் சுகுமாரி. தன் மகனிடம் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, சட்டென்று குரல் தழுதழுக்க... ‘என்னை வீட்டுக்கே கூட்டிக்கிட்டு போயிடுறியா’ என்று குரல் உடைந்து கேட்கும்போது, பார்ப்பவர்களையும் அழவைத்த நடிப்பைக் கண்டு சிலிர்த்துப் போனார்கள் ரசிகர்கள்.

மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘தசரதம்’ படத்தில் மோகன்லால் ஹீரோ. அவர் வீட்டு வேலைக்காரப் பெண்மணி சுகுமாரி. க்ளைமாக்ஸில் பேசிக்கொண்டிருக்கும் போது, வேலைக்காரப் பணிப்பெண் போல் பாடி லாங்வேஜில் இருந்துகொண்டிருப்பார். ’என்னை உங்க பையனா ஏத்துக்குவீங்களா?’ என்று மோகன்லால் கேட்டதும், வேலைக்கார உடல்பாஷையில் இருந்து சட்டென்று விலகி, அம்மாவின் ஸ்தானத்துடன் ஒரு பார்வை பார்ப்பார்... இதை மோகன்லால் சொல்லிச் சொல்லி சிலாகித்திருக்கிறார்.

பாலசந்தரின் ‘நூற்றுக்கு நூறு’ படத்தில் ஜெய்சங்கர் ஆசிரியர். ஸ்ரீவித்யா மாணவி. ஆசிரியர் மீது காதல்வயப்படும் ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர் மீது அபாண்டமாக பழிபோடுவார். அதை நம்பி, ஜெய்சங்கரை தண்டிக்கவும் மகளுக்கு சப்போர்ட் செய்யும் அந்தக் கேரக்டரை அட்டகாசமாக பண்ணியிருப்பார் சுகுமாரி.

எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி, விஜய், தனுஷ் வரைக்கும் என ஆறு மொழிகளில் இரண்டாயிரத்து ஐநூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார் சுகுமாரி. எந்த வேடமாக இருந்தாலும் தன்னைப் பொருத்திக்கொள்கிற அற்புத நடிகை என்பதால்தான், மலையாள சினிமாவின் மனோரமா என்று புகழ்கிறது திரையுலகம். ‘சுகுமாரி அம்மாவுக்கு ஒரு செட்டு முண்டு டிரஸ் (கேரளப் பெண்கள் அணியும் உடை) வைச்சிகிட்டே, எல்லா படத்தோட செட்டுக்கும் போய் நடிச்சிட்டு வந்துருவாரு. அம்மா கேரக்டர்ல வெளுத்து வாங்கிருவாரு’ என்று கேரளத் திரையுலகில், சுகுமாரியைப் போற்றாதவர்களே இல்லை.

‘வருஷம் 16’ படத்தில் அந்தக் குடும்பத்தையும் குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருக்கும் பூர்ணம் விஸ்வநாதனையும் சுகுமாரியையும் யாரால்தான் மறக்கமுடியும்? நம் அத்தையைப் போல, சித்தியைப் போல், அம்மாவைப் போல, பாட்டியைப் போல் அப்படியொரு மனதுக்கு நெருக்கமானவராகப் பார்த்தார்கள் ரசிகர்கள்.

நடிகர்களின் குரலைப் போல் நடிகைகளின் குரல்களை நாம் பெரிதாக கவனிப்பதில்லை. கண்கள் மூடி சுகுமாரி நடிக்கும் காட்சியில், அவர் பேசுகிற வசனத்தைக் கேட்டுப் பாருங்கள்... அந்தக் குரல் ஆணவத்துக்கும் ஒத்துவரும். அன்பையும் உருக உருகச் சொல்லும். அப்படியொரு வசீகரக் குரல்... தனித்துவமான குரல்.

1940ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி பிறந்த சுகுமாரிக்கு, இன்று பிறந்தநாள். எண்பதாவது பிறந்தநாள்.

பண்பட்ட நடிகை... தனித்துவ குரல் கொண்ட நடிகை... மலையாள சினிமாவின் மனோரமா... சுகுமாரியைப் போற்றுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x