Published : 05 Oct 2020 04:20 PM
Last Updated : 05 Oct 2020 04:20 PM

கிரிக்கெட் வர்ணனையில் நான் மக்களின் பிரதிபலிப்பே: ஆர்.ஜே. பாலாஜி 

ஐபிஎல் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும், வர்ணனையாளர்களுக்கு என ஒரு கேள்வி வரும். அந்த ஆட்டத்தைப் பற்றி, அணிகள் பற்றி, திட்டம் பற்றி, ஆடும் விதம் பற்றி எனப் பல்வேறு கேள்விகள் கேட்கப்படும்.

கடந்த ஞாயிறு மாலை சென்னை பஞ்சாப் அணிகள் மோதிய ஆட்டத்தின்போது ஒரு கேள்வி வந்தது. ஆனால் அது கிரிக்கெட்டைப் பற்றியதல்ல. "பாலாஜி அண்ணா, உண்மையாகவே சில வாரங்கள் நீங்கள் இருக்க மாட்டீர்களா?" என்று கவலையோடு கேட்கப்பட்டிருந்தது.

கரோனா நெருக்கடி, ஊரடங்கு காலத்தில் பல மாதங்கள் கழித்து ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில், ஆர்.ஜே. பாலாஜியின் ஜாலி, நையாண்டி, நகைச்சுவை பன்ச்சுகளுக்கு நடுவே கிரிக்கெட்டையும் ரசிப்பது ரசிகர்களுக்கு வாடிக்கையாகி வருகிறது. பாலாஜியின் வர்ணனை போரடிக்கும் ஆட்டங்களையும் சுவாரசியமாக்குகிறது.

மும்பையில் கிரிக்கெட் வர்ணனைக்காக முகாமிட்டிருக்கும் ஆர்.ஜே. பாலாஜி இது குறித்துப் பேசுகையில், "தமிழ் வர்ணனைக்கு இந்த வருடம் மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு மக்களை உற்சாகமிழக்கச் செய்திருக்கும் நேரத்தில் ஐபிஎல் மூலம் அவர்களை உற்சாகப்படுத்த நினைத்தோம். அது நடந்துள்ளது..

எனது மிகப்பெரிய வலிமையாக நான் நினைப்பது, நான் யாரையும் போல இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. மேலும், கடந்த 15 வருடங்களாக நான் ஊடகத்துறையில் இருந்திருப்பதால் மக்கள் என்னை ஏற்றுக் கொண்டுள்ளனர். கிரிக்கெட் ஆட்டமும் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. அது குடும்பத்துக்கான பொழுதுபோக்காக மாறியிருக்கிறது. இங்குதான் என் பணி சிறக்கிறது.

ஆட்டத்துக்கு முன் எங்களுக்கு தயாரிப்புக்கான தரவுகள் தரப்படும். அதனால் அடிப்படையில் சில விஷயங்கள் எனக்குத் தெரியும். ஆனால், கிரிக்கெட் பற்றிய விஷயங்களை நிபுணர்கள் பேசவிட்டுவிட்டு நான் நகைச்சுவையில் இறங்கிவிடுவேன். அதில் எந்த முன் தயாரிப்பும் கிடையாது" என்கிறார் பாலாஜி.

இவரது பல நகைச்சுவை வர்ணனைகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. பால் தொலைந்துபோனால், "தொலைந்து போன பந்தின் விலை ரூ.15,000. அதை வைத்து நான் ஒரு மாத மின்சாரக் கட்டணம் செலுத்திவிடுவேன்" என்று பாலாஜி பேசியது பெரிய வரவேற்பைப் பெற்றது.

மேலும், பல கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சொல்லத் தெரியாமல் அதை வைத்தும் நகைச்சுவை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். தினசரி வாழ்க்கையையே கிரிக்கெட் வர்ணனையிலும் எதிரொலிப்பதாக, தன்னை மக்களின் பிரதிபலிப்பாகவே பார்ப்பதாக பாலாஜி கூறுகிறார்.

பாலாஜி எங்கு சென்றாலும் அந்த இடத்தை நகைச்சுவையால் நிரப்புபவர். ஆனால் ஒரு சம்பவம் அவரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால் அது முன்னாள் கிரிக்கெட் வீரர், சக வர்ணனையாளர் டீன் ஜோன்ஸின் மரணம்தான்.

"அவர் இறந்த முன்னாள் இரவுதான் 2021 ஆம் வருடம் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் இருப்பது பற்றியும், எப்படி தனது பொறுப்புகளைக் கையாள்வது என்பது குறித்தும் டீன் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு நான், ‘அடுத்த சில நாட்கள் என்ன நடக்கும் என்றே உங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்கும்போது எப்படி அடுத்த வருடத்துக்குத் திட்டமிட முடியும்’ என்று சொன்னேன். அடுத்த நாள் காலை நான் கண்விழிக்கும் போது அவர் காலமானதாகச் சொன்னார்கள். உடைந்து போய்விட்டேன்" என்கிறார் பாலாஜி.

அதே போல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மரணமும் பாலாஜியை வெகுவாகப் பாதித்திருக்கிறது. ஆனால், பல லட்சம் மக்கள் பார்க்கும் ஆட்டத்தின்போது சோகத்தைக் காட்டாமல் அப்படியே வேலையைத் தொடர வேண்டும் என்று கூறும் பாலாஜியுடன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஹேமங் பதானி, அபினவ் முகுந்த், முத்து, பத்ரிநாத் ஆகியோரும் தமிழ் வர்ணனைக் குழுவில் இருக்கின்றனர்.

பாலாஜி இயக்கி நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் தீபாவளி அன்று நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்று தெரிகிறது. இந்த வெளியீடு குறித்து இறுதி செய்யவே பாலாஜி சில வாரங்கள் வர்ணனையில் இருக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

- ஸ்ரீனிவாச ராமானுஜம் (தி இந்து, ஆங்கிலம்) | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x