

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. நிறைய நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால், இதன் படப்பிடிப்பை நவம்பரில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இதற்கிடையே குறுகிய காலத் தயாரிப்பாக உருவாகும் படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். சுசீந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் கதை முழுக்க கிராமத்துப் பின்னணியைக் கொண்டதாகும். இந்தக் கதையைக் கேட்டவுடனே ஒப்புக்கொண்டு தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடித்து வருகிறார்.
திண்டுக்கல்லில் இன்று (அக்டோபர் 5) படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இன்று பாரதிராஜா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். தற்போது கேரளாவில் இருக்கும் சிம்பு அக்டோபர் 8-ம் தேதி முதல் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிம்பு - சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக திரு பணிபுரிந்து வருகிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் சுசீந்திரன் தயாரித்து வருகிறார். சுசீந்திரன் படத்தை முடித்துவிட்டு, நவம்பர் முதல் வாரத்தில் 'மாநாடு' படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார்.