Last Updated : 04 Oct, 2020 10:22 AM

 

Published : 04 Oct 2020 10:22 AM
Last Updated : 04 Oct 2020 10:22 AM

போதைப் பொருள் விவகாரத்தில் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் குற்றம்சாட்ட வேண்டாம்- அக்‌ஷய் குமார் வேண்டுகோள்

போதைப் பொருள் விவகாரத்தில் ஒட்டுமொத்த பாலிவுட்டையும் பொதுமைப்படுத்தி குற்றம்சாட்ட வேண்டாம் என்று நடிகர் அக்‌ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாலிவுட்டில் போதை மருந்து மாஃபியா இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபர்த்தி போதை மருந்து பயன்பாடு, கடத்தல் ஆகியவற்றுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் பல பாலிவுட் நட்சத்திரங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை கங்கணா உள்ளிட்டோர் பாலிவுட்டுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்களும் மற்ற நடிகர்களின் சமூக வலைதளங்களுக்கே சென்று அவர்களை நேரடியாக சாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போதைப்பொருள் சர்ச்சை குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று நான் உங்களிடம் கனத்த இதயத்துடன் பேசுகிறேன். கடந்த சில வாரங்களாக, ஏராளமான விஷயங்கள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும், எதிர்மறை எங்கும் வியாபித்திருந்ததால் என்னால் எதுவும் கூற இயலவில்லை. நாங்கள் நட்சத்திரங்கள் அழைக்கபட்டாலும், இந்த பாலிவுட் உலகம் உங்கள் அன்பினாலேயே உருவானது. இது வெறும் துறை மட்டும் அல்ல. எங்களின் திரைப்படங்கள் மூலமாக நம் நாட்டின் கலாச்சாரத்தையும், மதிப்பீடுகளை உலகின் ஒவ்வொரு மூலைக்கும் கொண்டு சென்றுள்ளோம். எங்கள் படங்களின் மூலம் நம் நாட்டில் வாழும் சராசரி மக்களின் நம்பிக்கைகளை பல ஆண்டுகளாக பிரதிபலிக்க முயன்றுள்ளோம். இன்று உங்கள் கோபத்தையும் நாங்கள் புரிந்து கொண்டு அதனை மதிக்கிறோம்.

சுஷாந்த் மரணத்துக்கு பிறகு ஏராளமான பிரச்சினைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன, அவை உங்களைப் போலவே எங்களுக்கு வலியை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினைகள் சினிமாத் துறையின் சில குறைகளை அடிக்கோடிட்டு காட்டியுள்ளன. நிச்சயமாக அவை சரிசெய்யப்பட வேண்டும்.

இன்று போதைப் பொருள் என்பதுதான் அதிகம் விவாதிக்கப்படும் செய்தி. பாலிவுட்டில் இந்த பிரச்சினை இல்லை என்று நான் நெஞ்சில் கைவைத்து உங்களிடம் நான் பொய் சொல்லப்போவதில்லை. மற்ற துறைகளை போலவே இங்கும் அது உள்ளது. ஆனால் இங்குள்ள ஒவ்வொருவரும் அதில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று அதற்கு அர்த்தம் அல்ல. அது சாத்தியமே இல்லை.

போதைப் பொருள் என்பது சட்டரீதியான விவகாரம். நீதி மன்றமும், சட்டமும் நடத்தும் விசாரணையும், எடுக்கும் நடவடிக்கைகளும் சரியாக இருக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கு திரைத் துறையில் ஒவ்வொரு நபரும் ஒத்துழைப்பார்கள் என்பதையும் நான் அறிவேன்.

ஆனால் ஒட்டுமொத்த சினிமாத் துறையும் இதில் சம்பந்தப்படுத்தி குற்றம்சாட்ட வேண்டாம் என்று உங்களை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். இது சரியல்ல.

ஊடக சக்தியை எப்போதும் நம்புபவன் நான். அவர்கள் சரியான நேரத்தில் சரியான பிரச்சினைய பேசவில்லை என்றால் நம் நாட்டில் பல மக்களுக்கு நீதி கிடைக்காது. ஆனால் ஒரு எதிர்மறை செய்தி ஒருவரது பல வருட உழைப்பையும், நற்பெயரையும் நாசமாக்கி விடக்கூடாது என்பதையும் கவனத்தையும் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அக்‌ஷய் குமார் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x