

எஸ்பிபிக்கு இறப்பே இல்லை என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று (செப்டம்பர் 30) எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நடிகர் மயில்சாமி பேசியதாவது:
''இங்கே பலரும் அவரைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். நான் அவருடனே வாழ்ந்திருக்கிறேன். நான் அவரோடு உலகம் முழுவதும் பயணம் செய்துள்ளேன். 1993 முதல் 2003 வரை அவரோடு நான் போகாத நாடு கிடையாது. என் மீது அவருக்கு மிகுந்த பாசம் உண்டு. பாலு சாரை விதம் விதமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் கோபப்பட்டு நீங்கள் பார்த்திருக்கவே முடியாது.
அவருக்கு சரண், ஷைலஜா, சுபலேகா சுதாகர், நான் உட்பட மொத்தமே 13 பேர்தான். ஒரு முறை வெளிநாடு செல்லும்போது குடும்பத்தைப் பிரிந்திருக்கும் வலி தெரியாமல் எங்களைச் சிரிக்க வைப்பதே நீதான்டா என்று நெகிழ்ச்சியுடன் கூறி எனக்கு மாலை போட்டார்.
என் மகனின் திருமண அழைப்பிதழை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றேன். அந்தத் தேதியில் தான் ஊரில் இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். ஆனால், இன்று அவர் இந்த உலகத்தில் இல்லை என்பதைத் தாங்க முடியவில்லை. அவருக்கு இறப்பே இல்லை. அவரது பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் என் பாலு அண்ணன் என் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பார்''.
இவ்வாறு மயில்சாமி பேசினார்.