

தம்பி பாலு முழுமையாக வாழ்ந்த ஒரு கலைஞன் என்று நடிகர் சிவகுமார் புகாழரம் சூட்டியுள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று (செப்டம்பர் 30) எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் சிவகுமார் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனினும், அவர் பேசிய வீடியோ பதிவு திரையிடப்பட்டது
அதில் சிவகுமார் பேசியதாவது:
''எஸ்பிபி என்னை விட ஐந்து வயது இளையவர். ‘பால்குடம்’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல்தான் அவர் எனக்காக முதன்முதலில் பாடிய பாடல். அதற்கு முன்பு இரண்டு பாடல்களை அவர் பாடியிருந்தாலும் 'பால்குடம்' படம்தான் முதன்முதலில் ரிலீஸ் ஆனது. அப்படிப் பார்த்தால் எஸ்பிபி தமிழில் முதன்முதலில் எனக்குத்தான் பாடியிருக்கிறார்.
என் தம்பி பாலு முழுமையாக வாழ்ந்த ஒரு கலைஞன். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தான் சுவாசித்த காற்றையே பாட்டாக மாற்றியவர். இல்லையெனில் 42,000 பாடல்களை ஒரு மனிதனால் பாடமுடியுமா?''.
இவ்வாறு சிவகுமார் பேசினார்.