

எஸ்பிபியின் திறமையும் பண்பும் இனி யாருக்கும் வரப்போவதில்லை என்று இசையமைப்பாளர் வித்யாசாகர் கூறியுள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர், இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று (செப்டம்பர் 30) எஸ்பிபியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான நடிகர்கள் கலந்துகொண்டு எஸ்பிபி பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசியதாவது:
50 ஆண்டுகாலம் ஒரு மூன்றெழுத்து நம் சமூகத்தில் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. அந்த குரல் உதயமானது முதல் இன்று வரைக்கும் பல தலைமுறைகளாக அதை ஒரு குரலாக பார்க்காமல், தங்கள் ஒரு குடும்பத்தில் ஒரு அங்கமாக மக்கள் வைத்துள்ளனர். தன் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டோமே என்ற சோகம்தான் இன்று ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
பாட்டு பாடி மட்டுமே ஒரு மனிதனால் அதை சாதிக்க முடியாது. அவருடைய பண்பு, பழகிய விதம், அனைவரின் மீது அவர் காட்டிய பாசம், பரிவு இவை யாவற்றையும் அவரை தெரிந்தவர்களால் மறக்கவே முடியாது. அவருடைய திறமையும் பண்பும் இனி யாருக்கும் வரப்போவதில்லை. நாம் இப்போது இவ்வளவு சோகத்தில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் அவருடைய பண்பும், மனிதத்தன்மையுமே. என்னுடைய நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் அவர். பாடல் பதிவு நேரங்களை விட நாங்கள் பல விஷயங்களை அதிகமாக பகிர்ந்து கொண்டிருக்கிறோம். அனைத்து இசையமைப்பாளர்களுமே இதை உணர்வார்கள் என்று நினைக்கிறேன்.
பிரபலமான பாடகர்கள் அனைவருமே நான் பாட வேண்டும், பாடலில் என் குரல் பிரதானமாக கேட்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் பாலு சார் மட்டுமே இசையமைப்பாளர் என்ன விரும்புகிறார் என்பதை உள்வாங்கி அதை வெளிப்படுத்துபவர். அதனால்தான் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.
இவ்வாறு வித்யாசாகர் பேசினார்