Published : 30 Sep 2020 19:38 pm

Updated : 30 Sep 2020 22:28 pm

 

Published : 30 Sep 2020 07:38 PM
Last Updated : 30 Sep 2020 10:28 PM

’சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..’, ’மாம்பூவே  சிறுமைனாவே’, ‘பூஞ்சிட்டுக் குருவிகளா’, ’ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’, ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’  - இசையமைப்பாளர் சந்திரபோஸ் 10ம் ஆண்டு நினைவுதினம்

music-director-chandra-bose

முதலில் அவரின் குரல்தான் பரிச்சயமானது. அந்தப் பாடலைப் பாடியவர் யாரென்றாலும் கூட பலருக்கும் தெரியாது. எம்.எஸ்.வி. இசையமைத்த அந்தப் படத்தின் இந்தப் பாடலும் எம்.எஸ்.வி. பாடுவது போலவே இருந்தது. ஆனாலும் குரல் மட்டும் வேறுமாதிரி. பிறகு அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். குரல் வழியே நம்மை அவர் வந்தடைந்தது... ‘ஆறு புஷ்பங்கள்’ படத்தில். அந்தப் பாடல்... ‘ஏண்டி முத்தம்மா... எது புன்னகை’ என்ற பாடல். பிறகு இசையமைப்பாளரானதும் நம் உள்ளம் தொட்ட பாடல்... ‘மாம்பூவே சிறு மைனாவே’ பாடல். அந்தக் குரலுக்கும் இந்த இசைக்கும் சொந்தமானவர்... சந்திரபோஸ்.

ஆரம்பகாலத்தில் இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து இசைக்கச்சேரிகளை நடத்திக்கொண்டிருந்தார். 77ம் ஆண்டு ‘மதுரகீதம்’ எனும் படத்தில்தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அடுத்து ‘மச்சானைப் பாத்தீங்களா’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். தொடர்ந்து ‘சரணம் ஐயப்பா’, ‘தரையில் வாழும் மீன்கள்’, ‘ஆடுகள் நனைகின்றன’ என்று தொடர்ந்து இசையமைத்து வந்தார்.


ஆனாலும் எண்பதுகளின் மத்தியில்தான் சந்திரபோஸ் இசை வாழ்வில் ஏற்றம் வந்தது. கே.பாலாஜி தயாரித்த ‘விடுதலை’ படத்தில் சிவாஜி, ரஜினி, விஷ்ணுவர்த்தன் முதலானோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு சந்திரபோஸ் இசையமைத்தார். ‘நீலக்குயில்கள் ரெண்டு’ உள்ளிட்ட பாடல்கள் வெற்றி பெற்றன. இந்தசமயத்தில்தான் ஏவி.எம். படத்தின் வாய்ப்பு சந்திரபோஸுக்குக் கிடைத்தது.

’சரணம் ஐயப்பா’ படத்தில் ‘பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டுபோனால் ஐயனை நீ காணலாம்’ பாடல் ஐயப்ப பக்தர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல், ‘அண்ணா வாடா ஏய் தம்பி வாடா’ என்ற பாடலும் ஹிட்டடித்தது. இந்தப் பாடலை பாடியவர்... கமல்ஹாசன்.

ஏவி.எம் தயாரித்த ரஜினியின் ‘மனிதன்’ திரைப்படமும் அர்ஜுன் நடித்த ‘சங்கர் குரு’ படமும் வெற்றிபெற்றன. இரண்டு படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. சத்யராஜின் ‘அண்ணாநகர் முதல்தெரு’ படத்தின் ‘மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு’ என்ற மெலடியைக் கொடுத்து இசை ரசிகர்களை முணுமுணுக்க வைத்தார்.
ஏவி.எம்மின் ‘வசந்தி’, ‘பாட்டி சொல்லைத்தட்டாதே’, ‘தாய்மேல் ஆணை’, ‘மாநகர காவல்’ என்று பிரமாண்டமான படங்களுக்கு இசையமைத்து பாடல்களையும் முணுமுணுக்கச் செய்தார்.

‘ஒரு தொட்டில் சபதம்’ படத்தின் ‘பூஞ்சிட்டுக்குருவிகளா’ பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ’ஏண்டி முத்தம்ம்மா’ போலவே இவர் பாடிய இந்தப் பாடலும் ஹிட்டடித்தது. ‘வசந்தி’ படத்தின் ‘ரவிவர்மன் எழுதாத கலையோ’ பாடலும் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தின் பூ பூப்போல் சிரிப்பிருக்கு’ பாடலும் ‘சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும்’ பாடலும் ‘மனிதன்’ படத்தின் ‘வானத்தைப் பாத்தேன் பூமியைப் பாத்தேன்’, ‘காளை காளை முரட்டுக்காளை’ என்று எத்தனையோ பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

பாடல்களில் கச்சேரிக்கு உரிய இசைக்கோர்ப்பு இருப்பது இவரின் ஸ்டைல். அதனால்தானோ என்னவோ, அந்தக் காலத்தில் பாட்டுக் கச்சேரிகளில் இவரின் பாடல்கள் தவறாமல் இடம்பெற்றன. 'ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’ என்ற பாடலும் மெலடி ஹிட்.

பின்னர், சீரியல்களுக்கு இசையமைத்தார். நடிகர் அவதாரமும் எடுத்தார். பல சீரியல்களிலும் நடித்தார் சந்திரபோஸ்.

76ம் ஆண்டு இளையராஜா ‘அன்னக்கிளி’யில் அறிமுகமாகி தன் கொடியை நாட்டிய பிறகு 27க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் வந்ததாகச் சொல்லுவார்கள். அப்படி வந்தவர்களில், குறிப்பிடத் தகுந்த இசையை வழங்கியவர்களில், சந்திரபோஸுக்கு தனியிடம் உண்டு.

இசையமைப்பாளர் சந்திரபோஸ் கடந்த 2010ம் ஆண்டு, செப்டம்பர் 30ம் தேதி காலமானார். அவரின் பத்தாம் ஆண்டு நினைவுதினம் இன்று.


மெல்லிசையால் இதயம் தொட்ட சந்திரபோஸை நினைவுகூர்வோம்.

தவறவிடாதீர்!

’சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..’’மாம்பூவே  சிறுமைனாவே’‘பூஞ்சிட்டுக் குருவிகளா’’ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே’‘டெல்லி ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே’  - இசையமைப்பாளர் சந்திரபோஸ் 10ம் ஆண்டு நினைவுதினம்சந்திரபோஸ்ஏவி.எம்மின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்திரபோஸ்ஏண்டி முத்தம்ம்மாபூஞ்சிட்டு குருவிகளாபொய்யின்றி மெய்யோடுசூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டாவானத்தைப் பாத்தேன் பூமியைப் பாத்தேன்மாம்பூவே சிறு மைனாவேசந்திரபோஸ் நினைவுதினம்இசையமைப்பாளர் சந்திரபோஸ்ChandraboseMusic director chandra bose’மாம்பூவே  சிறுமை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x