

அப்பாவுக்கு அஞ்சலி செலுத்த அஜித் வராதது எல்லாம் ஒரு பிரச்சினையா என்று சரண் கேள்வி எழுப்பினார்.
சென்னையில் செப்.25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார். இது இந்தியத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமிதாப் பச்சன், ஷாரூக் கான், சல்மான் கான், ரஜினி, கமல், சிரஞ்சீவி, மகேஷ் பாபு என ஒட்டுமொத்த திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்தார்கள்.
எஸ்பிபி உடல் நல்லடக்கம் செய்யப்படும் முன்பு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் விஜய். மகன் சரணுக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்தார். ஆனால், எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்த அஜித் நேரில் வரவுமில்லை, இரங்கல் அறிக்கை கொடுக்கவுமில்லை. இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.
அஜித் நாயகனாக அறிமுகமாகக் காரணமே எஸ்பிபி தான். அவருடைய மறைவுக்குக் கூட அவரால் வர இயலாதா என்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வந்தார்கள்.
இதனிடையே, இன்று (செப்டம்பர் 28) மருத்துவமனை கட்டண சர்ச்சை தொடர்பாக மருத்துவர்கள் குழுவினருடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் எஸ்பிபி சரண்.
அவரிடம் அஜித் இரங்கல் தெரிவிக்காதது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு எஸ்பிபி சரண் பதில் அளித்துப் பேசியதாவது:
"அஜித் வீட்டிலிருந்து வருத்தப்படட்டுமே. அவர் வர வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அஜித் எனக்கும் அப்பாவுக்கும் நல்ல நண்பர்தான். அவர் வந்தால் என்ன, வரவில்லை என்றால் என்ன. எங்கிருந்து மரியாதை செலுத்தினால் என்ன. இப்போது இதெல்லாம் ஒரு பிரச்சினையா?
அஜித் எனக்கு போனில் பேசினாரோ, இல்லையோ அதெல்லாம் ஒரு விஷயமாக ஆக்க வேண்டிய அவசியம் கிடையாது. என் அப்பா இப்போது இல்லை. இந்த உலகத்தில் இப்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இல்லை. அனைவருமே இந்த வருத்தத்திலிருந்து மீண்டு வர நேரம் தேவைப்படுகிறது.
இதுவல்ல இப்போது பிரச்சினை. எங்கள் குடும்பத்தினருக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள். எங்கள் குடும்பத்தினர் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள்".
இவ்வாறு எஸ்பிபி சரண் தெரிவித்தார்.