Published : 28 Sep 2020 03:35 PM
Last Updated : 28 Sep 2020 03:35 PM

சசிகுமார் பிறந்த நாள் ஸ்பெஷல்: ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான திரைச் சாதனையாளர் 

சென்னை

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் சசிகுமார் இன்று (செப்டம்பர் 28) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

மதுரையில் பிறந்து வளர்ந்தவரான சசிகுமார் இயக்குநர் பாலாவின் 'சேது', அமீரின் 'மெளனம் பேசியதே', 'ராம்' ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 2008-ல் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடித்தந்த 'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகராக அறிமுகமானார்.

சசிகுமாரின் அறிமுகப் படமே ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 1980-களின் மதுரையை அப்படியே திரையில் மறு உயிர் கொடுத்திருந்தார். அதோடு அரசியல் அதிகாரப் போட்டி, நட்பு, காதல், குடும்ப கெளரவம், அதுசார்ந்த வன்மம், துரோகம் ஆகியவற்றை வைத்து மனத்தைப் பதைபதைக்கச் செய்யும் கதையைக் கூறியிருந்தார். தமிழ் சினிமாவில் தலைசிறந்த படங்களில் ஒன்று என்று கொண்டாடப்பட்டது 'சுப்பிரமணியபுரம்'. மிகப் பெரிய வணிக வெற்றியையும் ட்ரெண்ட் செட்டர் அந்தஸ்தையும் பெற்றது. அதன் பிறகு பல படங்கள் மதுரையைக் கதைக்களமாக வைத்து உருவாக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. முதல் படத்திலேயே மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகிவிட்டார் சசிகுமார். அதோடு அந்தப் படத்தில் கிட்டத்தட்ட நாயகனுக்கு இணையான வேடத்தில் அவருடைய நடிப்பும் கவனத்தை ஈர்த்தது.

அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த 'பசங்க' சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதையும் சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் விருதையும் வென்றது. அதே ஆண்டில் சசிகுமார் தயாரித்த மற்றொரு படம் 'நாடோடிகள்'. சமுத்திரக்கனி இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமார் முதன்மை நாயகனாக நடித்திருந்தார். நட்பின் மேன்மையைக் கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் சித்தரித்த இந்தப் படம் தமிழகத்தின் அனைத்து சென்டர்களிலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, பல மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தப் படத்தின் வெற்றி சசிகுமாரை ஒரு நாயக நடிகராக நிலைநிறுத்தியது.

அடுத்த ஆண்டில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்க 'ஈசன்' என்னும் திரைப்படத்தை இயக்கினார் சசிகுமார். இதில் அவர் நடிக்கவில்லை. 'சுப்பிரமணியபுரம்' அளவுக்கு இல்லை என்றாலும் இந்தப் படமும் பரவலான விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இதற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக சசிகுமார் படம் எதுவும் இயக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.

'நாடோடிகள்' வெற்றிக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கத்தில் 'போராளி' படத்தில் மீண்டும் நடித்தார் சசிகுமார். அறிமுக இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனின் 'சுந்தரபாண்டியன்' படத்தைத் தயாரித்து அதில் நாயகனாகவும் நடித்தார். மதுரை அருகில் உள்ள உசிலம்பட்டி உள்ளிட்ட சிற்றூர்களைக் கதைக்களமாகக் கொண்ட அந்தப் படம் அந்தப் பகுதி மக்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் ஜனரஞ்சக அம்சங்கள் நிரம்பிய திரைக்கதையுடன் பதிவு செய்து வணிக வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக முத்தையா இயக்குநராக அறிமுகமான 'குட்டிப்புலி' திரைப்படம் தாய்ப்பாசத்தையும் ஆண் வீரத்தையும் முன்னிலைப்படுத்தி வெற்றி பெற்றது.

2013-ல் இயக்குநர் பாலுமகேந்திராவின் 'தலைமுறைகள்' படத்தைத் தயாரித்தார் சசிகுமார். அதுவே அந்த மகத்தான படைப்பாளியின் கடைசிப் படமாக அமைந்தது. பாலுமகேந்திராவே முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்தப் படத்தை எந்த வணிக சமரசமும் இல்லாத தரமான படைப்பாகத் தயாரித்திருந்தார் சசிகுமார். தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த படம் என்கிற தேசிய விருது 'தலைமுறைகள்' படத்துக்குக் கிடைத்தது.

2016-ல் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்தார் சசிகுமார். இது இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படமாகும். பாலாவின் பி ஸ்டுடியோஸ், சசிகுமாரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தன. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில் நாதஸ்வர இசைக் கலைஞராக வழக்கத்துக்கு மாறான கதாபாத்திரத்தில் மிக முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருந்தார் சசிகுமார்.

அதே ஆண்டு வெளியான 'வெற்றிவேல்', 'கிடாரி' ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் சிற்றூரைச் சேர்ந்த இளைஞராக நடித்திருந்த சசிகுமார் முன்னதில் குடும்பப் பாசம் மிக்கவராகவும் பின்னதில் வீரம் மிக்க சண்டியராகவும் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே தரமானவை. குறிப்பாக 'பிரசாத் முருகேசன் இயக்கி சசிகுமார் தயாரித்திருந்த 'கிடாரி' கதை சொன்ன விதம், உருவாக்கம் ஆகியவற்றின் தரத்துக்காகப் விமர்சகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

மருதுபாண்டியன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்த 'அசுரவதம்' குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறையை முன்வைத்து உருவாக்கப்பட்ட பரபரப்பான த்ரில்லர் படம் என்று பாராட்டப்பட்டது.

2019-ல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நண்பராக 'பேட்ட' படத்திலும், கெளதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தில் தனுஷின் அண்ணனாகவும் கெளரவ வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்தார் சசிகுமார்.

இந்த ஆண்டு சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள் 2' திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் சென்டிமென்ட் காட்சிகளில் அவருடைய நடிப்பு மேலும் மெருகேறியிருப்பதை உணர முடிந்தது. சுசீந்திரன் இயக்கத்தில் 'கென்னடி கிளப்' திரைப்படத்தில் மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகச் சிறப்பாக நடித்திருந்தார். தற்போது 'கொம்பு வெச்ச சிங்கமடா', 'ராஜவம்சம்', 'பரமகுரு', 'எம்ஜிஆர் மகன்' எனப் பல படங்களில் நாயகனாக நடித்துவருகிறார் சசிகுமார்.

பல்வேறு கதைக்களங்களைக் கொண்ட வெவ்வேறு வகைமைகளைச் சேர்ந்த தரமான திரைப்படங்களின் தயாரிப்பாளராக நற்பெயர் பெற்றிருக்கும் சசிகுமார் ஒரு நடிகராக தமிழ் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான இடத்தைப் பெற்றிருக்கிறார். காதல், சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்‌ஷன் என அனைத்துக்கும் பொருத்தமான நடிப்பை வழங்கும் திறமைபெற்றவர் தொடக்கத்தில் தான் தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடித்துவந்தவர் மற்ற தயாரிப்பாளர்கள், புகழ்பெற்ற இயக்குநர்கள், முதன்மை நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கத் தொடங்கியிருப்பதிலிருந்து ஒரு நடிகராக சசிகுமாருக்கான மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது என்பதை உணரலாம்.

நாயகனாகவும் சரி துணைக் கதாபாத்திரமாகவும் சரி அவரை இன்னும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் புதிய கதைக்களங்களில் பயன்படுத்தலாம். அதற்கான திறமையும் உழைப்பும் அவரிடம் இருக்கின்றன. மாறுபட்ட கதாபாத்திரங்களில் அவர் மென்மேலும் சிறப்பாக வெளிப்படக்கூடும். அவர் நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படங்களும் வருங்காலத்தில் அவர் நடிக்கவிருக்கும் படங்களும் ஒரு நடிகராக அவருடைய மதிப்பை இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதே நேரம் இயக்குநராகவும் அவர் இயங்கத் தொடங்க வேண்டும். தயாரிப்பாளராகவும் நல்ல திரைப்படங்களைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ரசிகர்கள் பலரின் இந்த ஆசைகள் நிறைவேறவும் சசிகுமார் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவும் அவருடைய பிறந்த நாளில் மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x