

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாடும் நிலா என்று அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் செப்டம்பர் 25-ம் தேதி சென்னையில் காலமானார். கடந்த செப்டம்பர் 26 அன்று அவருடைய உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்பிபி குறித்து இந்திய திரையுலகினர் பலரும் தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சன் எஸ்பிபி-க்கு தனது புகழாஞ்சலியை செலுத்தியுள்ளார்.
தனது வலைதளப்பக்கத்தில் அமிதாப் கூறியிருப்பதாவது:
வேலைப்பளுவின் நடுவே நம்மை விட்டு புறப்பட்டு விட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை நினைத்து மனம் அலைபாய்கிறது. கடவுள் பரிசளித்த அந்த குரல் அமைதியாகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல விசேஷமானவர்கள் நம்மை விட்டு வானுலகம் சென்று விடுகிறார்கள்.
இந்த கரோனா இன்னொரு நல்ல மனிதரை கொண்டு சென்றுவிட்டது. தெய்வீகம் மற்றும் ஆன்மாவின் குரல். பல வருடங்களுக்கு முன்னால் ஒரு விழாவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகப் பிரபலமானவராக இருந்தாலும் எளிமையும், பண்பும் கொண்ட மனிதர் அவர்.
இவ்வாறு அமிதாப் கூறியுள்ளார்.