

‘த்ரிஷ்யம் 2’ படத்தில் மோகன்லால் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்று (26.09.20) தொடங்கியது.
2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் 'த்ரிஷ்யம்' தான் என்பது குறிப்பிடத்தக்கது.
'த்ரிஷ்யம்' படத்துக்குப் பிறகு மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி 'ராம்' படத்தில் இணைந்து பணிபுரிந்தது. ஆனால், கரோனா ஊரடங்கினால் திட்டமிட்டபடி வெளிநாட்டுப் படப்பிடிப்புக்குச் செல்ல முடியவில்லை. 'ராம்' படத்தில் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில்தான் திட்டமிடப்பட்டன.
இதனைக் கருத்தில் கொண்டு 'ராம்' படத்துக்கு முன்னதாக மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் 'த்ரிஷ்யம் 2' படம் அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.
படப்பிடிப்பு தொடங்கியது முதல் இதுவரை மோகன்லால் காட்சிகளே படமாக்கப்படாத நிலையில், தற்போது ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்துள்ளார் மோகன்லால். இதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோகன்லால் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, ''கோவிட் -19க்கான அனைத்து விதமான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளுடனும் ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பில் இணைந்துள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.