Published : 26 Sep 2020 07:43 AM
Last Updated : 26 Sep 2020 07:43 AM

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்!

சிறு வயது முதலே இசையுடன் வளர்ந்தார் எஸ்பிபி. பொது நிகழ்ச்சிகளிலும் பாடி பரிச்சயம் பெற்றார். முறையான சாஸ்திரீய சங்கீதம் கற்கவில்லை என்றாலும் இசையில் அபரிமித ஞானம் பெற்றிருந்தார். பொறியியல் படிப்பு முடித்து அரசு வேலை பெறுவதே அவரது லட்சியமாக இருந்தது. இசைத் துறையில் நுழையும் எண்ணம் அப்போது அவருக்கு இல்லை. கல்லூரியில் படிக்கும்போது, நண்பர் ஒருவர், அவரது பெயரை இசைப் போட்டியில் கொடுக்க, அதில் கலந்துகொண்டு பரிசும் பெற்றார். அந்தப் போட்டிக்கு நடுவராக வந்திருந்தவர் பாடகர், இசையமைப்பாளர் எஸ்.பி.கோதண்டபாணி.

பாடகராக அறிமுகமான தருணம்

எஸ்பிபியின் திறமையை பார்த்த அவர், தான் இசையமைத்த ‘ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமண்ணா’ என்ற தெலுங்கு படத்தில் பாடகராக அறிமுகம் செய்தார். பிறகு கன்னட மொழியிலும் பாடகராக அறிமுகமானார். 3 ஆண்டுகள் கழித்து 1969-ல் தமிழில் பாட ஆரம்பித்தார். தமிழில் இவர் முதலில் பாடியது ‘ஹோட்டல் ரம்பா’ என்ற திரைப்படத்துக்காக, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து ‘அத்தானோடு இப்படி இருந்து’ என்ற பாடலே. ஆனால் இந்தத் திரைப்படம் வெளியாகவே இல்லை.

தொடர்ந்து ‘சாந்தி நிலையம்’ திரைப்படத்தில் ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ பாடலை பாடினார். ஆனால், எம்ஜிஆரின் ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தில் வரும் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலே எஸ்பிபியின் பெயரை தமிழகமெங்கும் பிரபலமாக்கியது. இத்தனைக்கும், அந்த பாடல் பாட ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு டைபாய்டு காய்ச்சல் வந்து ஒரு மாதம் ஓய்வில் இருந்தார் எஸ்பிபி. ‘‘பட வேலைகள் தாமதம் ஆகிறதே, பாடகரை மாற்றிவிடலாமா?’’ என்று எம்ஜிஆரிடம் படக் குழுவினர் கேட்டதற்கு, ‘‘வேண்டாம். அவர் இந்த பாடலுக்கு ஒத்திகை பார்த்த பிறகு தன் கல்லூரியில், நண்பர்களிடம் எல்லாம் சந்தோஷமாகப் பாடிக் காட்டியிருப்பார். திடீரென அவரை மாற்றிவிட்டு, வேறொருவரை பாடவைத்தால், எம்ஜிஆருக்கு அந்த பையனின் குரல் பிடிக்கவில்லை போல என்று பேசுவார்கள். அது அவரது எதிர்காலத்துக்கு நல்லதல்ல. பொறுமையாக குணமாகி வந்து அவரே பாடட்டும். அதுவரை காத்திருப்போம்’’ என எம்ஜிஆர் கூறியுள்ளார். இதை நெகிழ்ச்சியோடு எஸ்பிபியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதற்கேற்ப, ‘ஆயிரம் நிலவே’ பாடலும் சூப்பர்ஹிட்டாக அமைந்தது.

1982-ல் குடியரசுத் தலைவர் சஞ்சீவரெட்டியிடம் தேசிய விருது.

மொழிகளைக் கடந்து பயணம்

தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாக, முக்கிய தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தொடர்ந்து பாட ஆரம்பித்தார் எஸ்பிபி. திரைப்பட இசையமைப்பாளர்கள் அனைவருக்கும் பிடித்தமான, அனைவரும் விரும்பி கேட்கக்கூடிய பாடகராக குறுகிய காலத்திலேயே உருவெடுத்தார். தாய்மொழி தெலுங்கைவிட கன்னடத்தில் எஸ்பிபி மிக பிரபலம். ஒரே நாளில் கன்னடத்தில் 17 பாடல்களை எஸ்பிபி பாடி பதிவு செய்திருப்பதாக செய்தி உண்டு. படகா, கொங்கணி, துளு உள்ளிட்ட 14 இந்திய மொழிகளில் மொத்தம் 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்பிபி.

குவிந்த விருதுகள்

1980-ல் ‘சங்கராபரணம்’ திரைப்படத்தில் கர்னாடக இசையை மையமாகக் கொண்ட பாடல்களைப் பாடி முதல்முறையாக சிறந்த பாடகர் என்ற தேசிய விருதை ‘ஓம்கார நாதானு’ பாடலுக்காக பெற்றார். அடுத்த ஆண்டே ‘ஏக் துஜே கே லியே’ இந்தி படத்தின் ‘தேரே மேரே பீச் மே’ பாடலுக்காக தேசிய விருதை மீண்டும் வென்றார். அதுமுதல் இந்தியிலும் எஸ்பிபி குரலுக்கு வரவேற்பு கூடியது. தேசிய அளவில் முக்கியமான பாடகர் என்ற அந்தஸ்துக்கும் உயர்ந்தார். சல்மான் கானின் ஆரம்பகால காதல் படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். ‘சாகர சங்கமம்’, ‘ருத்ரவீணா’ (தெலுங்கு), ‘சங்கீதசாகர கனயோகி பஞ்சாக்‌ஷர கவை’ (கன்னடம்), 'மின்சார கனவு' படத்தின் ‘தங்கத் தாமரை மகளே’ பாடல்களுக்கும் எஸ்பிபிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. மொத்தம் 6 தேசிய விருதுகள், பத்ம, பத்ம பூஷண் என தேசிய அளவில் உயரிய அங்கீகாரங்களை பெற்ற எஸ்பிபி 6 முறை ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றவர்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ வெற்றி விழாவில் எம்ஜிஆரிடம் விருது.

இதுதவிர, சிறந்த பாடகர், டப்பிங் கலைஞர், இசையமைப்பாளர், உறுதுணை நடிகர் என பல்வேறு பிரிவுகளில் ஆந்திர மாநில அரசின் ‘நந்தி’ விருதுகளை 25 முறை பெற்றுள்ளார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ பட்டத்தோடு சேர்த்து 4 முறை சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் மாநில விருது, 3 முறை கர்நாடக அரசின் மாநில விருதுகளை பெற்றுள்ளார். கவுரவ டாக்டர் பட்டம், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் என எண்ணற்ற விருதுகள் எஸ்பிபியை தேடி வந்துள்ளன.

திரைப் பாடல்கள் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்கள், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், தொலைக்காட்சித் தொடர் முகப்பு இசைப் பாடல்கள் என அதிலும் தனக்கென தனியொரு இடத்தைப் பிடித்துள்ளார் எஸ்பிபி. மொத்தம் 45 படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பங்காற்றியுள்ளார். சில தமிழ், தெலுங்கு படங்களை தயாரித்தும் வெற்றி கண்டுள்ளார். பல நாடுகளில் ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர், நடிகர், டப்பிங் கலைஞர்

‘மன்மத லீலை’ தெலுங்கு டப்பிங்கின்போது நாயகன் கமல்ஹாசனுக்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் கலைஞராகவும் மாறினார். அன்றுமுதல் இன்று வரை, தெலுங்கில் டப்பிங் செய்யப்படும் பெரும்பாலான கமல் படங்களில் அவருக்கு பின்னணி பேசியிருப்பது எஸ்பிபிதான். இதுதவிர இன்னும் பல படங்களில் பல நடிகர்களுக்கு, 100 படங்களுக்கும் மேல் பின்னணி பேசியுள்ளார். தமிழில் வெளியான ‘ராமராஜ்யம்’ படத்தில் நாயகன் பாலகிருஷ்ணாவுக்கு பின்னணி குரல் கொடுத்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ளார். ‘மனதில் உறுதி வேண்டும்’, ‘கேளடி கண்மணி’, ‘சிகரம்’, ‘குணா’, ‘திருடா திருடா’, ‘ரட்சகன்’, ‘நாணயம்’ என பல படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ஈநாடு தொலைக்காட்சியில் ‘பாடுதா தீயகா’ என்ற என்ற பாட்டுப் போட்டி நிகழ்ச்சியை 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுத்து வழங்கினார். இந்தியாவில் ஒரே தொகுப்பாளரால் அதிக ஆண்டுகள் நடத்தப்பட்ட 2-வது நிகழ்ச்சி என்ற பெருமையும் இந்த நிகழ்ச்சிக்கு உண்டு. தமிழிலும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கவுரவ நடுவராக பங்கேற்றுள்ளார்.

கரோனா காலத்தில் உதவிய உள்ளம்

எஸ்பிபி தனது தந்தையின் நினைவாக எஸ்பிஎஸ் அறக்கட்டளை தொடங்கி அதன்மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இதுதவிரவும், பல்வேறு அமைப்புகளுக்கு, நற்செயல்களுக்கு தன்னால் இயன்ற பொருள், பண உதவிகளையும் செய்து வந்தார். கரோனா பரவல் அதிகமான நேரத்தில், அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்கள் கேட்கும் பாடல்களை தனது முகநூல் பக்கத்தில் பாடி, பாதிக்கப்பட்ட இசைக் கலைஞர்களுக்கு உதவிகள் செய்து வந்தார். பி.எம்.கேர்ஸ் (பிரதமர் நிவாரண நிதி) திட்டத்துக்கும் ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். பல மாநிலங்களை சேர்ந்த எஸ்பிபி ரசிகர்கள் ஒன்றிணைந்து தொடங்கிய அறக்கட்டளை சார்பிலும் உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள வீட்டில் எஸ்பிபி உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததால், நேற்று இரவே அவரது உடல் திருவள்ளூர் தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பாடகர், நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக ஆர்வலர் என்பதை எல்லாம் தாண்டி, பண்பாளர், மரியாதை மிக்கவர், மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் என்றும் பெயரெடுத்ததன் மூலம் இசை உலகில் மாபெரும் வெற்றிடத்தையும், ரசிகர்கள் நெஞ்சில் மாபெரும் சோகத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் எஸ்பிபி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x