Published : 26 Sep 2020 07:19 AM
Last Updated : 26 Sep 2020 07:19 AM

3 நாட்களில் 42 பாடல்களைப் பாடி பிரமிக்க வைத்தவர்; பாலுவின் வேகமும் விவேகமும் அசாத்தியமானது: `இளையநிலா பொழிகிறதே..’ கிடாரிஸ்ட் சந்திரசேகரன் நெகிழ்ச்சி

நிலாவில் கால்பதித்த ஆம்ஸ்ட்ராங்கைவிட தன்னுடைய குரலால் நிலவைப் பாடி புகழ் பெற்றவர் உண்டென்றால் அது எஸ்.பி.பாலசுப்ரமணியம்தான். திரைப்படங்களில் அவரின் நிலா வரிசைப்பாடல்களால் பாடும் நிலா பாலு எனப் பெயரெடுத்த பாலுவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் கிடாரிஸ்ட் சந்திரசேகரன்.

எஸ்.பி.பி. பாடிய ‘இளையநிலா பொழிகிறதே’ பாடலுக்கு கிடார்வாசித்த சந்திரசேகரன், பாலுவைப் பற்றிய எண்ணங்களை மீட்டியதிலிருந்து…

முதன்முதலில் அவரைப் பார்த்தது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’ திரைப்படத்துக்காக ‘ஆயிரம் நிலவே வா..’ பாடலை பாடவந்த போதுதான். அந்தப் பாடலின் ரிகர்சல் சத்யா ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது நான் கே.வி.மகாதேவன் ஆர்கெஸ்ட்ராவில் வாசித்துக் கொண்டிருந்தேன். எப்போதுமே பிரபல நடிகருக்கு பின்னணி பாடுவதற்கு அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைக்காது. ஆனால் பாலுவுக்கு தமிழில் உச்ச நடிகராக இருந்த எம்.ஜி.ஆருக்கு பின்னணி பாடி அறிமுகமானவர். பாலுவின் தொடக்கப் பாடலே அபாரமானது. பாலு வந்ததும் பெரும்பாலான பாடல்களை பாலு, பி.சுசீலா கூட்டணி பாடத் தொடங்கியது.

எளிமையின் திருவுரு

பாலு என்னை ‘ஹேய் ஹாண்ட்சம்’ என்றுதான் கூப்பிடுவார். அவர் ஒரு பிறவிக் கலைஞன். பாடலின் சூழல், பாடலின் வரிகளுக்கு ஏற்ப அவர் சங்கதிகளை சேர்த்துக் கொள்வார். அதே சமயத்தில் இளையராஜா போன்றவர்கள் விரும்பும் சங்கதிகளை மட்டுமே கொண்டும் அவரால் சிறப்பாக பாடமுடியும். ஒரு பாடலை ஓர் இசையமைப்பாளரோ இயக்குநரோ ஒலிப்பதிவு நிபுணரோ எதிர்பார்க்கும் அளவுக்கு மேலாகவே ஒரே டேக்கில் பாடிவிடுவார். இசைக் கலைஞர்கள் முதல் இசையமைப்பாளர் வரை ஸ்தம்பித்து விடுவார்கள். அவ்வளவுதான் எதிர்பார்ப்புக்கு மீறிய திறமையை தன்னுடைய பாட்டில் வெளிப்படுத்துவார். பாலுவின் வேகமும் விவேகமும் அசாத்தியமானது. எவரையும் மறந்தும் கூட கடுமையாக பேசமாட்டார். எளிமைக்கு மிகச் சிறந்த உதாரணம் எஸ்பிபி தான்.

பாலுவிடம் நான் பார்த்து வியந்த இன்னொரு சிறப்பான விஷயம், பாடலை அவரே தன்னுடைய டைரியில் தன் கைப்பட எழுதிக் கொண்டு பாடுவார். இதற்கு அரைமணிநேரம் எடுத்துக் கொள்வார். ஆனால் ரிகார்டிங் ரூமுக்குள் சென்றால் ஒரே டேக்கில் பாடிமுடித்து விடுவார்.

ஒரேநாளில் பத்து, பன்னிரண்டு பாடல்களைப் பாலு பாடியதை எல்லாம் நான் கேட்டிருக்கிறேன். நான் கர்நாடகாவில் கன்னடப் படங்களுக்கு கிடார் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாலு பிஸி ஆர்டிஸ்ட். ஒன்றிரண்டுபாடலுக்காக அவர் மெட்ராஸிலிருந்து வரமாட்டார். அவருடைய அசிஸ்டென்ட் எந்தெந்த கம்பெனிக்கு என்னென்ன பாடல்களைப் பாடவேண்டும் என்ற லிஸ்டை அவரிடம் கொடுப்பார். இரண்டு மூன்று ஸ்டுடியோக்களில் மூன்று நாட்களில் 42 பாடல்களைப் பாடுவார். இருபது நிமிடத்தில் ஒரு பாடலை நேர்த்தியோடு பாடிவிடும் திறமைமிக்கவர்.

மகிழ்ச்சியும் வருத்தமும்

டிஜிட்டல் தொழில்நுட்பம் வருவதற்கு முன்பாக பாடலின் ஒலிப்பதிவுக்கு முன்பாக ஒரேகேலியும் கிண்டலும் வேடிக்கையாக இருப்பார் பாலு. டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தபிறகு கலைஞர்கள் நேருக்கு நேராகசந்தித்துக் கொள்வதே குறைந்துவிட்டது. அந்த விதத்தில் இந்ததொழில்நுட்பத்தின் மீது வருத்தம்இருந்தாலும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால்தான் என்னைப் போன்ற வாத்தியக் கலைஞர்களை உலகம் கண்டு கொண்டது.இசைக் கலைஞர்கள் மீது எப்போதும் அன்பும் கரிசனமும் மரியாதையும் கொண்டவர் பாலு. அவரின் மறைவு இசைத் துறைக்கு பேரிழப்பு.

இவ்வாறு உருக்கமாகத் தெரிவித்தார் சந்திரசேகரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x