

எஸ்பிபியின் குரல் வளம், கம்பீரம், அழகு, இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்துப் போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்று நடிகர் விக்ரம் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதியாகி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு உடல்நிலை தேறி வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக விக்ரம் வெளியிட்ட இரங்கல் செய்தி:
''மொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரைப் பிடிக்கும். இவரது குரல் வளம், கம்பீரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்துப் போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். எஸ்பிபி மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்''.
இவ்வாறு விக்ரம் தெரிவித்துள்ளார்.