Published : 25 Sep 2020 15:06 pm

Updated : 25 Sep 2020 15:22 pm

 

Published : 25 Sep 2020 03:06 PM
Last Updated : 25 Sep 2020 03:22 PM

'ஆயிரம் நிலவே வா’ என அழைத்த பாடும் நிலா  

spb

எல்லா நடிகர்களுக்கும் பொருந்துகிற குரல்... எல்லோருக்கும் பிடித்த குரல்... எல்லா மொழிகளிலும் பாடுகிற திறன்... இப்படி எல்லாப் பாடகர்களுக்கும் வாய்ப்பதில்லை. பாடகர்களாக இருப்பவர்கள் நடிக்க வந்துவிடுவதில்லை. இசையமைப்பிலும் ஈடுபட்டதில்லை. அவரின் குரல், எல்லா நடிகர்களுக்கும் பொருந்தியது. அவரின் குரல் எல்லோருக்கும் விருப்பமான குரலானது. பதினாறு மொழிகளில் பாடியிருக்கிறார். அவர் இசையமைத்த பாடல்கள் இன்றைக்கும் ஹிட் பாடல்கள் வரிசையில் இருக்கின்றன. அவர் நடித்த படங்களிலும் அவரைத் தவிர வேறு எவரையும் பொருத்திக் கற்பனை செய்யமுடியாது. இத்தனை புகழுச்சியில், விண்ணைத் தொடும் உச்சியில் இருந்ததால்தான் அவர் ‘பாடும் நிலா’ என்று அழைக்கப்பட்டார். அவர்... எஸ்.பி.பி. எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

ஆந்திரம்தான் பூர்வீகம். ஹரிகதைகள் சொல்லிப் பாடுகிற அப்பா சாம்பமூர்த்திதான் முதல் குரு. பின்னாளில் குருவாகத் திகழ்ந்த கோதண்டபாணிக்கு நன்றியும் மரியாதையும் தெரிவிக்கும் விதமாக ரிக்கார்டிங் ஸ்டூடியோ உருவாக்கினார். கோதண்டபாணி ஸ்டூடியோ என்றே பெயர் வைத்தார்.


1946ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி பிறந்தவர் எஸ்.பி.பி. 66ம் ஆண்டு 20வது வயதில் தெலுங்கில் ‘மர்யாத ராமண்ணா’ படத்தில் பாடகராக அறிமுகமானார். 69ம் ஆண்டில், தமிழில் எம்.எஸ்.வி.யால் ‘இயற்கை எனும் இளையகன்னி’ பாடலைப் பாடி அறிமுகமானார். கே.வி.மகாதேவனின் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற ‘அடிமைப்பெண்’ பாடலில் மிகப் பிரபலமானார்.

இந்த நடிகருக்கு இந்த பாடகர் குரல்தான் பொருத்தம் என்பதெல்லாம் எஸ்.பி.பிக்கு இல்லை. அவரின் குரலுக்கு எல்லைகளே இல்லை. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என்று தொடங்கி இன்றைய அஜித், விஜய்க்கும் கூட அவரின் குரல் அப்படிப் பொருந்திப்போனது.

முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ளாதவர் எஸ்.பி.பி. பள்ளிப்பருவத்தில் பாட்டுப் போட்டியில் எஸ்.பி.பிக்கு பரிசு வழங்கவில்லை. விழாவுக்கு வந்திருந்த எஸ்.ஜானகி, ‘இந்தப் பையந்தான் நல்லாப்பாடினான். இவனுக்குத்தான் பரிசு கொடுக்கணும்’ என்று வாதாடினார். பிறகு சுசீலா, ஜானகி, சித்ரா, சுவர்ணலதா என்று மட்டுமில்லாமல் லதாமங்கேஷ்கர் வரை எத்தனையோ பாடகிகளுடன் இணைந்து பாடியிருக்கிறார். கர்நாடக சங்கீதப் பாடலான ‘சங்கராபரணம்’ பாடல்தான் இவர் முதன் முதலாக தேசிய விருது வாங்கிய பாடல். பின்னர் ஆறுமுறை வாங்கியிருக்கிறார்.

எஸ்.பி.பி. பாடினால் பாட்டு ஹிட். குறிப்பாக கமல், ரஜினி முதலான எண்பதுகளின் ஹீரோக்களுக்கு இவர் ஓபனிங் பாடல் பாடினால்தான் அது பெரிய வரவேற்பைப் பெறும். இந்தியில் கமல் அறிமுகமான ‘ஏக் துஜே கேலியே’வில் எஸ்.பி.பியும் அறிமுகம். அந்தப் பாடல், இன்றைக்கும் காதலுக்கான உச்சபட்ச பாடல். இதற்கும் தேசிய விருது கிடைத்தது அவருக்கு.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பாடாத மொழிகளில்லை. எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன், வி.குமார், விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ், இளையராஜா என்று தொடங்கி இன்றைய அநிருத் வரை எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறார். இருபதாவது வயதில் பாடத்த் தொடங்கியவர் 74 வயது வரையும் பாடினார். திரைக்கு வந்து ஐம்பதாண்டுகளாகிவிட்டன. 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கிறார். இதுவரை இவ்வளவு பாடல்களை வேறு எவரும் பாடியதில்லை என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறார்.

தெலுங்கில் இசையமைக்கத் தொடங்கி, தமிழில் ‘துடிக்கும் கரங்கள்’, ‘சிகரம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’, வஸந்தின் ‘கேளடி கண்மணி’, குணா, காதலன், உல்லாசம் முதலான எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரேநாளில் 18 பாடல்களைப் பாடி ரிக்கார்டிங் செய்த பெருமையும் சாதனையும் கொண்ட எஸ்.பி.பி., பாடலுக்கு நடுவே சிரிப்பதையும் அழுவதையும் தடக்கென குரல் மாற்றிப் பாடுவதையும் என ஜாலங்கள் காட்டினார். தெலுங்கில் கமல், ரஜினி நடித்த படங்களுக்கு அவர்களுக்கு டப்பிங் கொடுத்தும் அசத்தினார். ‘சத்யா’ படத்தில் வில்லன் கிட்டிக்கு அத்தனை அமைதியாக, சாத்வீக வில்லனுக்குரிய குரலைக் கொடுத்திருப்பார் எஸ்.பி.பி.

எம்.எஸ்.வி.யின் இசையிலும் அவரின் இனிய நண்பர் இளையராஜா இசையிலும் ஏராளமான பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி.யை பாடகர் என்பதைக் கடந்து, நல்ல மனிதர் என்றும் இனிய நண்பர் என்றும் எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

‘நிலா’வை பெண்பாலாக, பெண்ணுக்கு உதாரணமாகத்தான் சொல்லுகிறது இலக்கியம். ஆனால் உலகளவில் முதன்முதலாக பாடும் நிலா என்று எஸ்.பி.பி.யை நிலா என்று வர்ணித்து மகிழ்ந்த ரசிகர் கூட்டம், இன்றைக்கு அவரின் மறைவால் நெகிழ்ந்து உருகி கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறது.

‘ஆயிரம் நிலவே வா’ வையும் ‘இளைய நிலா’வையும் ’வான் நிலா நிலா அல்ல’ என்றும் ‘நிலாவே வா’ என்றும் தன் குரல் வழியே பூமிக்கு அழைத்து வந்த எஸ்.பி.பி., நிலவுக்குள் ஐக்கியமாகிவிட்டார்.

வானம் எப்போதும் இருக்கும். நிலவும் அப்படித்தான். பாடும் நிலா பாலுவும் அப்படித்தான்!

காற்று உள்ளவரை... காற்றில் கலந்துவிட்ட எஸ்.பி.பி.யின் குரலும் மிதந்துகொண்டே இருக்கும்.

இந்தியாவில் எஸ்.பி.பி. யின் குரல் ஒலிக்காத, ஒலிப்பதிவுக்கூடங்களே இல்லை. அந்த ஒலிப்பதிவுக்கூடங்களெல்லாம்... மெல்லிய குரலோனின், மெல்லிசைக் குரலோனின் மறைவைக் கேட்டு மெளன அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும்.

தவறவிடாதீர்!

பாடும் நிலா... என்றும் தேயாத நிலா!எஸ்.பி.பி.எஸ்.பி.பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்இளையராஜாஆயிரம் நிலவே வாஇயற்கை எனும் இளைய கன்னிகே.பாலசந்தர்மனதில் உறுதி வேண்டும்கேளடி கண்மணிகுணாஎஸ்.பி.பி. மறைவுஎஸ்.பி.பி. காலமானார்SpbSp.balasunramaniamIlayaraaja'ஆயிரம் நிலவே வா’ என அழைத்த பாடும் நிலா

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x