Last Updated : 24 Sep, 2020 07:05 PM

 

Published : 24 Sep 2020 07:05 PM
Last Updated : 24 Sep 2020 07:05 PM

மிருதங்க நடிப்பிலும் சக்கரவர்த்தி... சிவாஜி!  - 37 ஆண்டுகளானாலும் கம்பீரம் காட்டும் ‘மிருதங்க சக்கரவர்த்தி’

’புதுசாப் பொறந்தது போல இருக்கு’ என்று வாய்வார்த்தையாகச் சொல்லுவோம். ஆனால், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு முறை பிறந்தவர் சிவாஜி கணேசன். நடிகர் சிவாஜிகணேசனாகத்தான் இருப்பார். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டாரென்றால், அந்தப் படத்தின் படப்பிடிப்பில், கேமிராவுக்கு எதிரே நிற்கும் போது புதிதாகவே பிறந்திருப்பார். விஞ்ஞானியாக, பெருநோய் வந்தவராக, பிரஸ்டீஜ் பத்மநாபனாக, மாதா கோயில் ஆன்டனியாக, மதுவில் திளைக்கும் ஜமீனாக, கை ரிக்‌ஷா இழுக்கும் பாபுவாக, போலீஸ் அதிகாரியாக, வக்கீல் பாரீஸ்டர் ரஜினிகாந்தாக... என்று ஒவ்வொரு முறையும் அந்தப் படத்துக்காகப் பிறப்பார். அதுதான் சிவாஜி.

எண்பதுகளில், போலீஸ் அதிகாரியாகவும் பாதிரியாராகவும் இரண்டு வேடங்களில் நடித்த ‘வெள்ளை ரோஜா’ படம் வந்தது. பாரதிராஜாவின் ‘முதல்மரியாதை’ கிராமத்துப் பெரியவராக நடித்த படம் வெளியானது. பாக்யராஜின் ‘தாவணிக்கனவுகள்’ படத்தில், ஓய்வுபெற்ற மிலிட்டிரிக்காரராக நடித்த படம் வெளியானது. இந்தப் படங்களெல்லாம் சிவாஜியின் நடிப்பை வெளிப்படுத்தின.

1952ம் ஆண்டில் இருந்து நடித்து வரும் சிவாஜி கணேசன், 30 ஆண்டுகள் கழித்தும் திரைத்துறையில் இயங்கிக் கொண்டே இருந்தார். எண்பதுகளில், கமலும் ரஜினியும் எம்ஜிஆர் சிவாஜி இடங்களைப் பிடித்துவிட்டிருந்தார்கள். அடுத்து, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, மோகன் என பலரும் வந்திருந்தனர். ஆனாலும் சிவாஜி தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருந்தார்.

பல படங்கள் ஓடவில்லை. சில படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனாலும் எந்தப் படங்களாக இருந்தாலும் சிவாஜி, தன் முத்திரையைக் காட்டத் தவறியதே இல்லை.

அப்படித்தான்... 83ம் ஆண்டு கலைஞானம் தயாரிப்பில், கே.சங்கர் இயக்கத்தில், ‘மிருதங்க சக்கரவர்த்தி’ வெளியானது. படத்தின் தலைப்பே, சிவாஜியின் கேரக்டரைச் சொல்லிவிடும். மிருதங்க வித்வானாக, மிருதங்க சக்கரவர்த்தியாக நடித்திருந்தார்.

சிவாஜி -பத்மினி ஜோடிக்குப் பின்னர், சிவாஜிக்குப் பொருத்தமான ஜோடியாக கே.ஆர்.விஜயா பேசப்பட்டார். இருவரும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார்கள். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களில் ‘மிருதங்க சக்கரவர்த்தி’யும் முக்கியமான படம்.

கலைஞானம் கதை எழுத, பனசை மணி திரைக்கதை எழுத, ஏ.எல்.நாராயணன் வசனம் எழுத, கே.சங்கர் இயக்கத்தில் வெளியானது இந்தப் படம். சிவாஜியும் பிரபுவும் இணைந்து நடித்திருந்த படங்களில், இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த படம்.

குமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தான் கதைக்களம். படத்தின் பல காட்சிகள், சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், கோயிலின் குளம், சுற்றியுள்ள வீடுகள், தெருக்கள் என எடுக்கப்பட்டிருந்தன. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

வ.உ.சி.யாகவே வாழ்ந்தார், கட்டபொம்மனாகவே தெரிந்தார், ‘ராஜராஜ சோழனாகவே நடந்தார், வீர சிவாஜியாகவே கர்ஜித்தார், சிவபெருமானாகவே அவதரித்தார், நாகஸ்வர வித்வான் சண்முகசுந்தரமாகவே வாசித்தார் என்று சொல்லிப் பெருமிதம் கொண்டது போலத்தான், இதிலும் மிருதங்கச் சக்கரவர்த்தியாகவே அவதாரம் எடுத்திருந்தார் சிவாஜி.

வாலியும் புலமைப்பித்தனும் பாடல்கள் எழுதினார்கள். நம்பியார், வி.கே.ராமசாமி, சுலக்‌ஷணா முதலானோர் நடித்திருந்தார்கள். டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா இதிலொரு பாடல் பாடியிருந்தார். அதேபோல், சீர்காழி கோவிந்தராஜனின் மைந்தன் சிவசிதம்பரமும் அற்புதமான பாடலைப் பாடியிருந்தார்.

’ஓங்கார நாதம்’ என்றொரு பாடல். ’அபிநய சுந்தரி’ என்றொரு பாடல். ’இது கேட்க திகட்டாத கானம்’ என்று பாலமுரளி கிருஷ்ணாவின் பாடல். ‘சுகமான ராகங்களே’ எனும் வாணி ஜெயராமின் பாடல் என அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. முணுமுணுக்கவைத்தன. திரும்பத் திரும்பக் கேட்க வைத்தன. திருமுருக கிருபானந்த வாரியாரும் படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

தந்தைக்கும் மகனுக்கும் பிணைப்பு பிறகு பிணக்கு, புகழுச்சியில் இருந்து கீழே விழுவது, ஏழ்மைக்குச் செல்வது பிறகு தந்தையை உணருவது, தந்தைக்கு கலைவாரிசென மகன் நிரூபிப்பது என அட்டகாசமான கதையும் திரைக்கதையும் கொண்டிருந்தது. ஆனாலும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையவில்லை ‘மிருதங்க சக்கரவர்த்தி’.
பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், சிவாஜியின் மிருதங்க நடிப்புக்கு வாத்தியம் இசைத்திருந்தார். அதாவது உமையாள் சிவராமனின் மிருதங்க இசைக்கு, சிவாஜி கணேசன் மிருதங்க வித்வான் போல் நடித்திருந்தார்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் எப்படி, நாகஸ்வர வித்வானாகவே வாழ்ந்தாரோ, அதேபோல், இதிலும் மிருதங்க சக்கரவர்த்தியாகவே அவதாரம் எடுத்திருந்தார் சிவாஜி. மிருதங்கத்தை வைத்துக்கொள்வதும் ஒரு காலை மடக்கி இன்னொரு காலை லேசாக தூக்கிக் கொள்வதும் இரண்டு கைகளும் மிருதங்கத்தில் பட்டு விளையாடுவதும் அப்படி வாசிக்கும் போது தலை ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதும், முகத்தில் ஒவ்வொரு கோணங்கள் ஜாலம் காட்டுவதும் என சிவாஜி சிறப்பாக நடித்தார் என்று சொன்னால், சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொல்வதாகத்தான் இருக்கும்.

ஆனால், ‘மிருதங்க சக்கரவர்த்தி’ வெளியான சமயத்தில், ஒரு வாரப் பத்திரிகை, சிவாஜியின் மிருதங்க நடிப்பை, கேலி செய்து விமர்சனம் செய்திருந்தது. இதை, திரையுலகத்தினரும் சிவாஜி ரசிகர்களும் தாங்கிக்கொள்ளமுடியாமல் கொந்தளித்தார்கள்.

இந்த எதிர்ப்பை அறிந்த பத்திரிகை, மிருதங்க வித்வான்களிடம் ‘மிருதங்க சக்கரவத்தி’யில் சிவாஜி மிருதங்கம் வாசிக்கும் நடிப்பும் பாவமும் குறித்துக் கேட்டறிந்தது. அந்த வித்வான்கள் அனைவரும் மிகப்பெரிய மேதைகள். பிரபலமானவர்கள். அந்த மிருதங்க மேதைகள் ஒட்டுமொத்தமாகச் சொன்ன பதில்... ‘சிவாஜியின் நடிப்பு அத்தனை தத்ரூபம். அவரே மிருதங்கம் வாசித்தால் என்னென்ன பாவங்கள் ஏற்படுமோ அதை அப்படியே செய்திருந்தார். மிருதங்கக் கலைஞர்களை அப்படியே திரையில் காட்டியிருந்தார் சிவாஜி’ என்றார்கள்.

படம் பெரிதாக ஓடியதோ இல்லையோ... சிவாஜியின் இன்னொரு பிறப்பு... மற்றுமொரு அவதாரமாக வந்தது ‘மிருதங்க சக்கரவர்த்தி’.

1983ம் ஆண்டு, செப்டம்பர் 24ம் தேதி வெளியானது ‘மிருதங்க சக்கரவர்த்தி’. படம் வெளியாகி 37 வருடங்களாகிவிட்டன. நடிப்பிலும் மிருதங்க நடிப்பிலும் சக்கரவர்த்தி சிவாஜிதான் என்று இன்னும் நூறாண்டுகளானாலும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் தமிழக மக்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x