Published : 24 Sep 2020 03:47 PM
Last Updated : 24 Sep 2020 03:47 PM

படமாகும் பாலகோட் தாக்குதல்: அபிநந்தன் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா?

பாலகோட் தாக்குதலை மையப்படுத்தி படமொன்று உருவாகிறது. இதில் அபிநந்தன் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'அர்ஜுன் ரெட்டி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தை கரண் ஜோஹர் தயாரித்து வருகிறார். இந்தப் படம் இந்தியிலும் வெளியாகவுள்ளது.

இதைத் தவிர்த்து நேரடி இந்திப் படத்தில் நடிக்கக் கதைகள் கேட்டு வந்தார் விஜய் தேவரகொண்டா. இதில் 'ராக் ஆன்', 'கை போ சே' படங்களின் இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கவுள்ள படத்தில் நடிக்க விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கவுள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி - அபிஷேக் கபூர் இணையும் படம் பாலகோட் தாக்குதலை மையப்படுத்தி உருவாகிறது என்பதை முன்பே அறிவித்துவிட்டார். இதில் அபிநந்தன் கதாபாத்திரத்தில்தான் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது ஆயுஷ்மான் குரானா, வாணி கபூர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் அபிஷேக் கபூர். அதனை முடித்துவிட்டு பாலகோட் தாக்குதல் தொடர்பான படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.

பாலகோட் தாக்குதல் பின்னணி என்ன?

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல் இந்திய அளவில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா பகுதியில் உள்ள பாலகோட் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியது. பாலகோட் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டுகள் வீசி அழித்துத் திரும்பியது.

அதன்பின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ முகாம்களை அழிக்க பாகிஸ்தான் விமானப்படை முயன்றபோது இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் விமானங்களைத் துரத்தின. இந்தத் துரத்தலில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தானின் அதிநவீன எப்-16 விமானத்தைச் சுட்டு வீழ்த்தி விமானத்திலிருந்து குதித்தார்.

அபிநந்தன் வர்த்தமான் குதித்து உயிர் தப்பிய பகுதி பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்ததால், அவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து அழைத்துச் சென்றது. இரு நாட்டு அரசு உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாட்களுக்குப் பின் அபிநந்தன் வர்த்தமானை பாகிஸ்தான் ராணுவத்தினர் வாகா எல்லை வழியாகப் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். அபிநந்தனுக்கு இந்திய மக்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x