Last Updated : 23 Sep, 2020 04:13 PM

 

Published : 23 Sep 2020 04:13 PM
Last Updated : 23 Sep 2020 04:13 PM

’கோழி கூவுது’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘வண்டிச்சக்கரம்’, ‘சகலகலாவல்லவன்’;  சில்க் ஸ்மிதா... ஆச்சரிய அதிசயம்! - சில்க் ஸ்மிதா நினைவுதினம்

அறுபதுகளின் இறுதியில் இருந்தே சினிமாவில் கிளப் டான்ஸ் முக்கியத்துவம் பெறுகிறது. கொள்ளைக் கும்பலை குஷிப்படுத்துவதற்காக, கொள்ளைக் கும்பலை நாயகன் பிடிக்க வரும் வேளையில், ஹீரோவின் காதலி, அம்மா முதலானோரை கைது செய்துவைத்துக்கொண்டிருக்கும் வேளையில், போலீஸ் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்க வரும் நேரத்தில், வைரமோ தங்கமோ கடத்தும் தருணத்தில்... என கிளப் டான்ஸ்கள் இடம்பெற்றுவிடும். இப்படி அறுபதுகளில் இருந்தே இருந்தாலும் அந்த நடிகைகளை ரசித்துவிட்டு, விசிலடித்து மறந்துவிடுவார்கள் ரசிகர்கள். ஆனால் அப்படி கவர்ச்சி டான்ஸ் ஆடிய நடிகைக்கு, அப்படியொரு கிரேஸ் இருந்தது ஒரேயொரு நடிகைக்குத்தான். அவர்... சில்க் ஸ்மிதா

கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி மார்க்கெட் வேல்யூ உண்டு. நாயகிக்கு இணையாக சம்பளம் வாங்கும் கவர்ச்சி நடிகைகள், படத்தில் ஒரு பாடலுக்கோ, அல்லது கிளாமராகவோ வில்லனுக்கு அருகில் நின்றுகொண்டிருப்பார்கள். ஆனாலும் சில்க் ஸ்மிதாவுக்கு இவ்வளவு பெரிய மரியாதையும் கெளரவமும் கொடுத்துக் கொண்டாடினார்கள்... இன்னமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

சில்க் ஸ்மிதாவுக்கு வீட்டில் வைத்த பெயர் விஜயலட்சுமி. விஜயலட்சுமிக்கு ஆந்திராதான் சொந்த ஊர். ஆனாலும் கரூர்தான் பூர்வீகம். சிறுவயதிலேயே அப்படியொரு அழகு. அளவெடுத்த உடல். ஆனால் அழகை விட, உடல் வனப்பை விட, ,எல்லோருக்கும் பிடித்தது... அவர் கண்களைத்தான்! அந்தக் கண்கள்... என்னென்னவோ பேசும். பக்கம்பக்கமான வசனங்கள் சொல்லாததை, சில்க்கின் கண்கள் சொல்லிவிடும். கண்ணழகி என்று டி.ஆர்.ராஜகுமாரியைச் சொல்லுவார்கள். அதற்கு அடுத்து, சில்க்கின் கண்களில் காந்தம் இழையோடியிருக்கும் என்பார்கள்.

மேக்கப் கலைஞராகத்தான் திரையுலகிற்கு வந்தார் விஜயலட்சுமி. கடைசி வரை முகத்துக்கு மூடியெல்லாம் போட்டுக்கொள்ளாமல்தான் வாழ்ந்தார். ஒப்பனைகளின்றி யதார்த்தமாக இருந்ததுதான் அவரின் இயல்பு. மனசு. பண்பு.

எத்தனையோபேரை அழகுப்படுத்திய மேக்கப் வுமன் விஜயலட்சுமியின் அழகையும் வசீகரத்தையும் அவருக்குள் இருக்கிற திறமையையும் நடிகர் வினுசக்ரவர்த்தி அடையாளம் கண்டுகொண்டார். தன் கதையின் முக்கியமான பாத்திரமான ‘சில்க்’ எனும் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். ‘வண்டிச்சக்கரம்’ என்ற படம்தான் அவருக்கு முதல் படம். விஜயலட்சுமி ஸ்மிதாவானார். மேக்கப் வுமன் நடிகையானார். அந்தப் படத்தின் வாயிலாக, ஸ்மிதா... சில்க் ஸ்மிதா என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

இந்தப் படத்தின் ‘வா மச்சான் வா, வண்ணாரப்பேட்டை’யும் ஹிட்டு. படமும் ஹிட்டு. முக்கியமாக சில்க் ஸ்மிதாவும் உயரத் தொடங்கினார். பிறகு வரிசையாகப் படங்கள்.பல படங்களில் ஒரு பாட்டுக்கு டான்ஸ். காபரே டான்ஸ். பிறகு கமர்ஷியல் படங்களில் முதலில் ஹீரோவை தேர்வு செய்வதற்கு முன்னதாக, ஹீரோயினைத் தேர்வு செய்வதற்கு முன்னதாக, சில்க் ஸ்மிதாவை ஒரு பாட்டுக்கு புக் செய்துவிடுவார்கள் என்பதெல்லாம் நடந்தது. அடுத்தகட்டத்தில், படத்தின் தயாரிப்பாளர்கள், ‘படத்துல சில்க்குக்கு ஒரு பாட்டு சேத்துருங்க’ என்றார்கள். டைரக்டர், தயாரிப்பாளர், ஹீரோ என யாராக இருந்தாலும் சொல்லும் முதல் விஷயம்... ‘எப்படியாவது சில்க்கோட கால்ஷீட்டை வாங்கிடணும்’ என்பதாகத்தான் இருந்தது.

இரண்டரை மணி நேர சினிமாவில், நாலரை நிமிடப் பாட்டுக்கு வரும் சில்க் ஸ்மிதாவுக்கு, போஸ்டரிலும் பேப்பர் விளம்பரத்திலும் பேனரிலும் தனியிடம் கொடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு சில்க்கிற்கு மார்க்கெட் வேல்யூ இருந்தது. ரசிகர் கூட்டம் இருந்தது. அந்த ரசிகர் கூட்டத்தில், பெண்களும் இருந்தார்கள்.
இந்த காலகட்டத்தில்தான் கேபரே டான்ஸ் நடிகை மட்டும் அல்ல சில்க்... மிகச்சிறந்த நடிகையும் கூட என்பது நிரூபணமாகும் வகையில் ஒரு வாய்ப்பு. பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிக்க, பாரதிராஜாவின் இயக்கத்தில், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் தியாகராஜனின் மனைவியாக, ராதாவின் அண்ணியாக நடித்தார் சில்க் ஸ்மிதா. முதலில், இந்தக் கேரக்டர்களில் தியாகராஜனுக்கு பதிலாக சந்திரசேகரும் சில்க்கிற்கு பதிலாக வடிவுக்கரசியும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்கவேண்டும் என்றிருந்திருக்கிறது. அந்த வகையில், ‘அலைகள் ஓய்வதில்லை’ சில்க் ஸ்மிதாவின் திரை வாழ்வில், மிக முக்கியமான படமாக அமைந்தது.

ஒவ்வொரு படத்திலும் குறைந்த ஆடையுடன் ஆடிப்பாடி நடித்த சில்க் ஸ்மிதா, இந்தப் படத்தில் புடவை கட்டிக்கொண்டு, இழுத்துப் போர்த்திக்கொண்டு, கணவனுக்கு அடங்கிப் புழுங்கிப் போகிற மனைவியாக மிகச்சிறப்பாக நடித்திருந்தார். அறிமுகங்களான கார்த்திக், ராதாவைக் கடந்து சில்க் ஸ்மிதா ரொம்பவே பேசப்பட்டார்.
இதன் பின்னர், மீண்டும் இளையராஜாவின் தயாரிப்பில், கங்கை அமரன் இயக்கத்தில் ‘கோழி கூவுது’ படத்தில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வெளுத்து வாங்கினார். ‘பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே’ என்ற பாடல், இன்றைக்குமான ஹிட் லிஸ்ட் பாடல்.

அசோக்குமாரின் ‘அன்று பெய்த மழையில்’, பிரதாப் போத்தனின் ‘ஜீவா’ முதலான படங்களில் தேவதை மாதிரி இருப்பார் சில்க்.

அடுத்து, கங்கை அமரனின் ‘கொக்கரக்கோ’விலும் சூப்பர் கேரக்டர் சில்க்கிற்கு. ஒருவேளை... இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றிருந்தால், சில்க்கின் திறமை சொல்லும் கதாபாத்திரங்கள் அவருக்குக் கிடைத்திருக்குமோ என்னவோ?

இருந்தும் கூட, ‘சகலகலா வல்லவன்’, ‘மூன்று முகம்’, ‘மூன்றாம் பிறை’ என பல படங்கள் கிடைத்தன. ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தினார். ‘மூன்றாம் பிறை’யில் இவரின் கேரக்டரும் ’பொன்மேனி உருகுதே’ பாடலும் ஆடலும் காலத்துக்கும் நிற்கும்.

சில்க்கின் கண்கள் எப்படியோ... அவரின் குரலும் மேஜிக்கான ஐஸ்க்ரீம் குரல். குழையும். கொஞ்சும். கெஞ்சும். இழையும். அப்படியொரு குரல் வசீகரமும் சில்க்கின் ஸ்பெஷல்.

பாலுமகேந்திராவின் ‘நீங்கள் கேட்டவை’யிலும் அப்படியொரு அற்புத கேரக்டர். ஹீரோயின். ‘அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி’ என்ற பாட்டுக்கு தியாகராஜனுக்கு தக்கபடி ஆடியிருப்பார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, கே.பாக்யராஜின் ‘அவசர போலீஸ் 100’ படத்தில், இரண்டு பாக்யராஜ். ஒரு பாக்யராஜுக்கு, அப்பாவி போலீஸ் பாக்யராஜுக்கு மனைவியாக அதகளப்படுத்தியிருப்பார் சில்க் ஸ்மிதா. கிளாமர், கேரக்டர், ஹீரோயின் என்றெல்லாம் வந்தவர், காமெடியிலும் புகுந்து விளையாடினார்.

கமலுடன் ஆடிய ‘நேத்து ராத்திரி யம்மா’வைப் போலவே, ‘பொன்மேனி உருகுதே’ பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. ரஜினியுடன் ‘ஆடிமாசம்’, ‘அடுக்குமல்லி’ என்று பல பாடல்கள் ஹிட்டாகின. திரையுலகில் 17 வருடங்களில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் நடித்தார். விதம்விதமான ரோல்களில் நடித்தார். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

1960ம் ஆண்டு பிறந்த சில்க் ஸ்மிதா, 96ம் ஆண்டு இறந்தார். தமிழகத்தின் காற்று, அந்தச் சேதியைக் கேட்டு, ஒருநிமிடம் அதிர்ந்து நின்றது. அஞ்சலி செலுத்தியது. கண்ணீர்விட்டது.

96ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி காலமானார். ஆனால் இன்னமும் சில்க் ஸ்மிதாவின் நினைவுகளில் இருந்து மீளவில்லை தமிழ்த்திரையுலகம்.
சில்க்... இப்போதும் எப்போதும் ஆச்சரிய அதிசயம்.

இன்று செப்டம்பர் 23ம் தேதி சில்க் ஸ்மிதா நினைவுநாள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x