Published : 21 Sep 2020 05:47 PM
Last Updated : 21 Sep 2020 05:47 PM

இயக்குநர்  அட்லி பிறந்த நாள் ஸ்பெஷல்: வெற்றிகரமான வெகுஜனப் படங்களின் வித்தகர் 

சென்னை

தமிழ் சினிமாவில் இளம் தலைமுறை இயக்குநர்களில் மிகவும் வெற்றிகரமானவரும் இதுவரை இயக்கிய அனைத்துத் திரைப்படங்களிலும் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியவருமான இயக்குநர் அட்லி இன்று (செப்டம்பர் 21) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

இயக்குநர் ஷங்கரிடம் 'எந்திரன்', 'நண்பன்' ஆகிய இரண்டு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். அட்லி இயக்கிய முதல் படம் வெளியாவதற்கு முன்பே ஷங்கர் ஒரு பேட்டியில் இவர் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார் என்று நம்பிக்கையுடனும் பெருமிதத்துடனும் கூறினார். அந்த அளவு இயக்குநர்களில் சூப்பர் ஸ்டாரான ஷங்கரைக் கவர்ந்தவர் அட்லி. இது மட்டுமல்ல அட்லி இயக்கிய முதல் படமான 'ராஜா ராணி'யைத் தயாரித்தவர். இன்னொரு வெற்றிகரமான புகழ்பெற்ற இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ்.

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்திருந்த 'ராஜா ராணி' 2013-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியையும் ரசிகர்கள், விமர்சகர்களின் பெரும் பாராட்டுகளையும் பெற்றது. காதலில் தோற்றவர்கள் அதைக் கடந்து சென்று அந்தத் தோல்வியின் வலியிலிருந்து மீண்டு. புதிய வாழ்க்கைத் துணையையும் அவருடனான வாழ்வையும் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதை முதிர்ச்சியான அணுகுமுறையுடன் கூறிய அந்தப் படம் திரைக்கதை அளவில் இளமைத் துள்ளலையும் தக்க வைத்திருந்தது. காதல் காட்சிகளையும் நகைச்சுவையையும் கையாள்வதில் தன் அபாரத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் அட்லி. மேலும் அந்தப் படத்தில் அட்லியின் அழுத்தமான வசனங்களும் கவனம் பெற்றன. சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றார் அட்லி.

முதல் பட வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணுவும் நட்சத்திர நடிகர் விஜய்யும் இணைந்த 'தெறி' படத்தை இயக்கினார் அட்லி. குழந்தை வளர்ப்பு, குடும்பப் பாசம் ஆகியவற்றின் மேன்மையையும் பெண்களுக்கெதிரான வன்முறைக்கெதிரான அறச்சீற்றத்தையும் பதிவு செய்த அதே வேளையில் விஜய் படங்களில் எதிர்பார்க்கப்படும் அனைத்து ஜனரஞ்சக அம்சங்களையும் உள்ளடக்கி சிறப்பான திரைக்கதையை உருவாக்கியிருந்தார் அட்லி.

விஜய் இந்தப் படத்தில் புத்திசாலித்தனமும் பணிவும் துணிவும் வீரமும் மிக்க காவல்துறை அதிகாரியாக அன்புமிக்க மகனாக, கனிவான காதல் கணவனாக பாசம் மிக்க தந்தையாக மிகவும் ரசிக்கும்படியாக வெளிப்பட்டார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ரசிகர்கள். விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது.

அடுத்த இரண்டு படங்களையும் விஜய்யையே இயக்கியதன் மூலம் தொடர்ந்து மூன்று படங்களில் விஜய்யுடன் பணியாற்றிய பெருமையைப் பெற்றிருக்கிறார் அட்லி. இவற்றில் 'மெர்சல்' படத்தில் முதல் முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடித்தார் . ஜனரஞ்சகமான திரைக்கதையுடன், அரசுகளை விமர்சித்தும் மீதும் மருத்துவத் துறை ஊழல்களை அம்பலப்படுத்துவதாகவும் பல காட்சிகளும் வசனங்களும் அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதே நேரம் அவை சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைப் பெற்று சர்ச்சையாகின. வசூல்ரீதியாக 'மெர்சல்' படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

அட்லி இயக்கிய நான்காவது படமான 'பிகில்' கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி ரூ.300 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விஜய் தந்தையாகவும் மகனாகவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்தப் படம் கால்பந்தை முன்வைத்து மகளிர் முன்னேற்றத்தையும் மையப்படுத்தி ஜனரஞ்சக அம்சங்களுடன் கூறிய விதம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

விஜய்யை வைத்து அட்லி இயக்கிய மூன்று படங்களும் விஜய்யின் பிம்பத்துக்கும் ஆளுமைக்கும் நியாயம் செய்யும் வகையிலும் அவருடைய பெருந்திரள் ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தன. விஜய் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த இயக்குநராக ஆகியிருக்கும் அட்லி பொதுவான ரசிகர்களின் மதிப்பைப் பெற்றவராகவும் இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் ஒரு இயக்குநராக வெகுஜன ரசனைக்கேற்ற திரைக்கதை அமைப்பதில் வித்தகராகவும் சமூகப் பிரச்சினைகளை இதுபோன்ற படங்களில் இணைத்துப் பேசுவதில் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பது அட்லியின் வெற்றி ரகசியங்கள். அதோடு ஒரு இயக்குநராக பாடல்கள் படமாக்கம், செட்கள், வண்ணமயமாகவும் பிரம்மாண்டமாகவும் காட்சிகளை அமைப்பது எனத் தன்னுடைய தனித்துவம் மிக்க முத்திரையை வெளிப்படுத்துகிறார்.

மிக இளைய வயதில் குறுகிய காலத்தில் நான்கு மிகப் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ்த் திரைப்படத் துறையில் ரசிகர்களின் அன்புக்குரியவராக ஆகியிருக்கும் அட்லி இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தப் பிரம்மாண்ட வெற்றிகளை அடைய அவருடைய இந்தப் பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x