ட்விட்டரில் சாதனை புரிந்துள்ள விஜய் செல்ஃபி

ட்விட்டரில் சாதனை புரிந்துள்ள விஜய் செல்ஃபி
Updated on
1 min read

நெய்வேலியில் ரசிகர்களுடன் விஜய் எடுத்துக் கொண்ட செல்ஃபி, ட்விட்டரில் சாதனை புரிந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இதன் படப்பிடிப்பு டெல்லி, சென்னை, நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது. நெய்வேலி படப்பிடிப்பின்போதுதான், விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தது.

இதன் விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் விஜய். இது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. வருமானவரிச் சோதனை முடிந்து, நெய்வேலியில் நடந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய்.

தினமும் மாலையில் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடும். வருமானவரிச் சோதனைக்குப் பிறகு, விஜய்யைப் பார்க்க அதிக அளவில் கூட்டம் கூடியது. அப்போது படப்பிடிப்புத் தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது ஏறி ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் விஜய்.

இந்த செல்ஃபி விஜய் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டது. பின்னர், அது பெரும் வைரலானது. ரசிகர்கள் பகிர்ந்தது மட்டுமன்றி, பிரபலங்கள் பலரும் பகிர்ந்தார்கள். இந்த செல்ஃபிதான் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேர் ரீ-ட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்னதாக ஷாரூக் கான் வெளியிட்ட ட்வீட்தான் முதலிடத்தில் இருந்தது. தற்போது அதைப் பின்னுக்குத் தள்ளி விஜய் வெளியிட்ட ட்வீட் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேகில் ட்விட்டர் தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in