Published : 17 Sep 2020 02:26 PM
Last Updated : 17 Sep 2020 02:26 PM

பெண்களுக்குக் கால்கள் உண்டு: ஆடை பற்றிய விமர்சனத்துக்கு மலையாள நடிகைகளின் பதிலடி

திருவனந்தபுரம்

நடிகை அனஸ்வரா ராஜனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மலையாள திரைப்பட நடிகைகள் பலர் தங்கள் கால்கள் தெரியும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகின்றனர். பெண்களுக்குக் கால்கள் உண்டு #womenhavelegs என்கிற ஹேஷ்டேக் மூலம் இதை ஒரு இயக்கமாக மாற்ற முயற்சி செய்துள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது நடிகையாக இருக்கும் 18 வயதான அனஸ்வரா ராஜன், நவீன உடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இதற்காக அவரைக் கிண்டல் செய்து, ஆபாசமாக அவதூறு பேசி பலர் பதிவிட்டனர்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அனஸ்வரா, "நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நான் செய்யும் விஷயத்தைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்பது பற்றி கவலைப்படுங்கள்" என்று பகிர்ந்திருந்தார்.

தொடர்ந்து, பெண்கள் என்ன உடை அணிகிறார்கள் என்பதை வைத்து அவரது குணத்தைத் தீர்மானிக்கும், அவருக்கு அறிவுரை சொல்லும் மனப்பான்மைக்கு எதிராகவும், பெண்களின் உடலைக் காட்சிப்பொருளாகச் சித்தரிப்பதற்கு எதிராகவும் பல நட்சத்திரங்கள் அனஸ்வராவுக்கு ஆதரவாகப் பதிவிட ஆரம்பித்தனர்.

நடிகை ரீமா கல்லிங்கல், தான் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, "ஆச்சரியம், ஆச்சரியம், பெண்களுக்குக் கால்கள் இருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தார்.

நடிகைகள் நஸ்ரியா, அன்னா பென், அனஸ்வராவைப் போலவே குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது நடிகையாகியிருக்கும் எஸ்தர் அனில், ரஜிஷா விஜயன், பார்வதி திருவோத்து, அனார்கலி மரிகார், க்ரேஸ் ஆண்டனி, அபூர்வ போஸ், அஹானா கிருஷ்ணா, அர்ச்சனா கவி ஆகியோரும் தங்கள் கால்கள் தெரியும் புகைப்படங்களை #womenhavelegs என்கிற ஹேஷ்டேகின் கீழ் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

நடிகைகள் மட்டுமல்லாது, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பெண்களும் அனஸ்வராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் தங்களின் கால்கள் தெரியும் புகைப்படங்களை இந்த ஹேஷ்டேகின் கீழ் பதிவிட்டுள்ளனர்.

இந்த விஷயம் குறித்துப் பேசியிருக்கும் அனஸ்வரா, "எனக்குப் பிடித்த உடையை அணிந்து ஒரு புகைப்படம் பதிவிட்டேன். யாரையும் கோபப்படுத்துவது, தூண்டுவது என் நோக்கமல்ல. இப்படி இணையத்தில் ஆபாசமாகக் கருத்துப் பதிவிடுபவர்கள் பெண்களின் ஆடை சுதந்திரத்தைக் கேள்வி கேட்கின்றனர்" என்றார்.

- சரஸ்வதி நாகராஜன் (தி இந்து ஆங்கிலம்), தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x