Published : 15 Sep 2020 06:44 PM
Last Updated : 15 Sep 2020 06:44 PM

ரம்யா கிருஷ்ணன் பிறந்த நாள் ஸ்பெஷல்: தடைகளைத் தகர்த்த சாதனை நடிகை 

சென்னை

தென்னிந்திய சினிமாவில் நடிப்புத் துறையை நாடி வரும் பெண்களுக்குப் பல முன்னுதாரணங்களை ஏற்படுத்தியிருப்பவரும் சினிமாவில் பெண்களுக்கு குறிப்பாக நடிகைகளுக்கு என்று வரையறுக்கப்பட்ட எல்லைகளை அவை விதிக்கும் தடைகளை உடைத்துத் தொடர்ந்து முன்னேறிச் செல்பவருமான ரம்யா கிருஷ்ணன் இன்று (செப்டம்பர் 15) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

35 ஆண்டுப் பயணம்

1970-ல் சென்னையில் பிறந்தார் ரம்யா கிருஷ்ணன். இன்றோடு அவருக்கு 50 வயது நிறைவடைகிறது. இதில் 35 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்,. தெலுங்கு, மலையாளம்., கன்னடம். இந்தி என ஐந்து மொழிப் படங்களில் நடித்துவருகிறார்.

1983-ல் வெளியான 'வெள்ளை மனசு' திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்தார். அதுவே அவர் நடித்த முதல் படம். அந்தப் படம் கவனம் ஈர்க்கத் தவறியது. 1985இல் வெளியான ரஜினிகாந்தின் 'படிக்காதவன்', 1987-ல் கமல்ஹாசனின் 'பேர் சொல்லும் பிள்ளை' உள்ளிட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

'படிக்காதவன்' திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தம்பியாக நடித்த விஜய் பாபுவின் மனைவியாக நடித்தார். அதே ஆண்டு நடிகர் நாகேஷ் இயக்கிய 'பார்த்த ஞாபகம் இல்லையோ' திரைப்படத்தில் இரட்டை வேட நாயகியாக நடித்தார். மணிவண்ணன் இயக்கிய 'முதல் வசந்தம்' திரைப்படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படியாக 80-கள் முழுவதும் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் மாறி மாறி நடித்துக்கொண்டிருந்தார்.

கவனம் ஈர்த்த கதாபாத்திரங்கள்

தமிழைப் பொறுத்தவரை 1990-களின் முதல் பாதியிலும் அவருக்கு இந்த நிலை தொடர்ந்தது. 1991-ல் பாலசந்தர் தயாரிப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கதையின் நாயகனாக நடித்த 'சிகரம்' படத்தில் நவீன சிந்தனைகள் கொண்ட இளம் பெண்ணாகத் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்தார். அவருக்குப் புகழ் ஈட்டித் தந்த படமாக அது அமைந்தது. அடுத்த ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'வானமே எல்லை' படத்தில் ஐந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்றாக நடித்திருந்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது. விஜயகாந்தின் மெகா ஹிட் திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' படத்தில் ஒரு சின்ன துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் அவர் நடனமாடிய 'ஆட்டமா தேரோட்டமா' பாடலும் பட்டிதொட்டி எங்கும் அவரைக் கொண்டு சேர்த்தது.

தெலுங்கில் முன்னணி நாயகி

தொடக்கம் முதலே தமிழைத் தவிர மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடிக்கத் தொடங்கிவிட்டார் ரம்யா கிருஷ்ணன். அவருடைய முதல் தெலுங்குப் படம் 'கஞ்சு கடகா' 1984-ல் வெளியானது. மலையாளத்தில் 1986-ல் வெளியான 'நேரம் புலரும்போள்' திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால் இருவருடனும் இணைந்து முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

1990-களில் தெலுங்கில் முன்னணிக் கதாநாயகியரில் ஒருவராகத் திகழ்ந்தார் ரம்யா கிருஷ்ணன். சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, மோகன்பாபு. நாகர்ஜுனா. ராஜசேகர், ராஜேந்திர பிரசாத் என முன்னணி நாயக நடிகர்கள் அனைவருடனும் நடித்தார். நாகார்ஜுனாவுடன் அவர் நடித்த பல படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக, அன்னமாச்சார்ய சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எடுக்கப்பட்ட 'அன்னமய்யா' திரைப்படம் தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தது. இதில் ரம்யாவின் நடிப்பும் பெரிதாகப் பாராட்டப்பட்டது.

இவற்றுக்கிடையில் 1995-ல் தெலுங்கில் வெளியான 'அம்மோரு' என்ற பக்திப் படம் மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'அம்மன்' என்கிற தலைப்பில் வெளியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் அம்மனாக நடித்திருந்தார் ரம்யா கிருஷ்ணன்.

பாலிவுட் பயணம்

90-களில் மலையாளம், இந்தி, கன்னடப் படங்களிலும் தொடர்ந்து நடித்துவந்தார். இந்தியில் 'கல்நாயக்', முக்கியமான படமாக அமைந்தது. அதுவரையிலான இந்தி சினிமா வரலாற்றில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இரண்டாம் இடம் பெற்றது. அமிதாப் பச்சனுடன் அவர் நடித்த 'படே மியான் சோட்டே மியான்' 1998-ல் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்றது.

மறுவருகைக்கு வித்திட்ட நீலாம்பரி

தமிழில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு 1999-ல் வெளியாகி 275 நாட்கள் திரையரங்குகளில் ஓடி மிகப் பெரிய பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற ரஜினிகாந்தின் 'படையப்பா' படத்தின் மூலம் மறுவருகை புரிந்தார். அந்தப் படத்தில் தன் காதலை மறுத்த நாயகனைப் பழிவாங்கும் நீலாம்பரி என்னும் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் ரம்யா நடித்திருந்த விதம் அனைவரையும் வியந்து பாராட்ட வைத்தது. ஆணவத்தின் மொத்த உருவமாக அந்தப் படத்தில் வெளிப்பட்டிருந்தார். அந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நீலாம்பரி கதாபாத்திரமும் அதில் ரம்யாவின் நடிப்பும் முக்கியப் பங்களித்தன என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை.

நடிப்பில் .அனைத்தும்

இதைத் தொடர்ந்து 'பாட்டாளி', 'பட்ஜெட் பத்மநாபன்', 'அசத்தல்' ஆகிய படங்களில் முறையே சரத்குமார். பிரபு, சத்யராஜுடன் நாயகியாக நடித்தார். 'அசத்தல்' படத்தில் மூதாட்டி வேடத்தில் இருக்கும் இளம் பெண்ணாகச் சிறப்பாக நடித்திருந்தார். அடுத்ததாக 'கமல்ஹாசனுடன் 'பஞ்ச தந்திரம்' படத்தில் பாலியல் தொழிலாளியாக எதிர்மறை குணாம்சங்களும் நகைச்சுவை அம்சமும் கூடிய கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இந்த ஐந்து படங்களும் தமிழ்த் திரையுலகில் ரம்யா கிருஷ்ணனின் நீண்ட இரண்டாம் இன்னிங்க்ஸுக்கு வலுவான அடித்தளம் இட்டன. பாலுமகேந்திரா இயக்கிய 'ஜூலி கணபதி' திரைப்படத்தில் கடத்தப்பட்ட நாயகனின் மனைவியாக முதன்மைக் கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்திருந்தார்.

அதே நேரத்தில் 'ரிதம்' படத்தில் 'ஐயோ பத்திகிச்சு', 'காக்க காக்க' படத்தில் 'தூது வருமா' போன்ற பாடல்களில் தன்னுடைய அசாத்திய நடனத்தாலும் விரகதாபத்தை வெளிப்படுத்தும் உடல் மொழியாலும் பாவங்களாலும் புதிய ஐட்டம் (கவர்ச்சி) பாடல்களுக்கு வேறு இலக்கணம் வகுத்தார்.

2000-க்குப் பிறகு பல படங்களில் வலுவான துணைக் கதாபாத்திரங்களில் சற்று முதிர்ச்சியான முதன்மைக் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார் 'ராஜகாளி அம்மன்' உள்ளிட்ட சில படங்களில் அம்மனாக நடித்தார். அதே நேரம் ஒரே ஒரு பாடலில் தோன்றி நடனமாடும் வாய்ப்புகளையும் மறுக்காமல் நடித்தார். 'குத்து' திரைப்படத்தில் 'போட்டுத் தாக்கு' என்னும் பாடலுக்கு சிலம்பரசனுடன் அவர் ஆடிய அதிவேக நடனம் பல இளம் நடிகைகளால் கூட நினைத்துப் பார்க்க முடியாதது. 'பார்த்தாலே பரவசம்', 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க' போன்ற பல படங்களில் சிறப்பு அல்லது கெளரவத் தோற்றத்தில் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்து முத்திரை பதித்தார்.

சின்னதிரையில் வெற்றிப் பயணம்

2006 முதல் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் 2008 முதல் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர் மற்றும் நாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். இதனால் 2009 முதல் 2015 வரை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் படங்களில அவ்வப்போது நடித்து வந்தார். 2016-ல் சுந்தர் சி இயக்கிய 'ஆம்பள' திரைப்படத்தின் மூலம் அவருடைய இரண்டாம் மறு வருகை நிகழ்ந்தது.

சிகரமாக அமைந்த சிவகாமி

2015-ல் வெளியான அரசர் காலப் புனைவுத் திரைப்படமான 'பாகுபலி'யில் அன்பும், வீரமும் விவேகமும் கம்பீரமும் நிறைந்த ராஜமாதா சிவகாமி கதாபாத்திரம் ரம்யா கிருஷ்ணனின் திரைவாழ்வின் உச்சம் என்று சொல்லத்தக்கது. அவர் பல திரைப்படங்களில் பல வகையான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும் அவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்ததுபோல் இந்தக் கதாபாத்திரமும் இதில் அவருடைய நடிப்பும் அமைந்தன. 2017-ல் வெளியான 'பாகுபலி 2' படத்தில் சிவகாமி கதாபாத்திரம் இன்னும் வலுவானதாகவும் உள்முடிச்சுகள் நிறைந்ததாகவும் அமைந்திருந்தது. அந்தச் சவாலிலும் மிகச் சிறப்பாக வெற்றிபெற்றிருந்தார் ரம்யா கிருஷ்ணன். உலகின் பல நாடுகளில் பல மொழிகளில் மிகப் பெரிய வெற்றிபெற்ற ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலித்த இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் சர்வதேச அளவில் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றார் ரம்யா கிருஷ்ணன்.

அரிதான கதாபாத்திரம்

கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் பாலியல் திரைப்படங்களில் நடிப்பவராக நடித்தார். ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் புகழ்பெற்ற மையநீரோட்ட நடிகைகளில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான துணிச்சல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். பாலியல் தொழிலாளியாக பல முன்னணி நடிகைகள் நடித்திருக்கிறார்கள். ஆனால் பாலியல் படங்களில் நடிப்பவர் முதன்மைக் கதாபாத்திரமாக நடிப்பதும் அதில் ஒரு புகழ்பெற்ற நடிகை நடிப்பதும் இந்திய சினிமாவுக்கே புதிது. ஆனால் அப்படி ஒருவர் மனிதராக எப்படி வாழ்கிறார் அவருடைய மனித முகம் என்ன என்பதையே அந்தப் படம் காண்பித்தது. அதை முழுமையாக உள்வாங்கி நடித்திருந்தார் ரம்யா. அவருடைய ஆகச் சிறந்த நடிப்பு என்றே சொல்லலாம்.

திரையில் ஒரு அரசி

கடந்த ஆண்டு வெப் சீரீஸிலும் கால் பதித்துள்ளார் ரம்யா. முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'குயின்' என்னும் இணையத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா நடித்திருந்த விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து திரைப்படங்கள். இணையத் தொடர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று தன்னுடைய வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

நடிகைகளுக்கு முன்னோடி

ஒரு நடிகைக்கு விதிக்கப்பட்ட இலக்கணங்களையும் எல்லைகளையும் மீறி சாதனைகளை நிகழ்த்தியவர் ரம்யா கிருஷ்ணன். அவருடைய முதல் சில படங்கள் தோல்வி அடைந்தன. அதனால் முடங்கிவிடாமல் தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களிலும் ஒரு பாடலிலோ ஒரு சில காட்சிகளிலோ தோன்றும் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்தார். அடுத்து கதாநாயகியாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் மாறி மாறி நடித்து வந்தார். எதிர்மறைக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். அம்மனாகவும் நடித்தார், பாலியல் தொழிலாளியாகவும் நடித்தார்.

அனைத்திலும் வெவ்வேறு பரிணாமங்களை அந்தந்தக் கதாபாத்திரங்களுக்குத் தேவையானவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தினார். எந்த பிம்பத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்தார். குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்தாலோ ஐட்டம் (கவர்ச்சி) பாடல்களில் ஆடினோலோ, அப்படியே முத்திரை குத்திவிடுவார்களே என்ற பயம், ராசி, சகுனம் பார்ப்பது என ஒரு நடிகைக்கு விதிக்கப்பட்ட அனைத்து எல்லைகளையும் தடைகளையும் உடைத்தெறிந்தவர் ரம்யா கிருஷ்ணன். அந்த விஷயத்தில் சினிமாவில் குறிப்பாக நடிப்புத் துறையில் சாதிக்க விரும்பும் பெண்கள் முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்றத்தக்கவர் அவர்.

பன்மொழி விருதுகள்

தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது, சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஆந்திர அரசின் நந்தி விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றிருக்கும் ரம்யா கிருஷ்ணன் விரைவில் தேசிய விருதையும் வெல்வார் என்று உறுதியாக நம்பலாம்.

ரம்யா கிருஷ்ணன் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும் நடிப்பில் இன்னும் பல பரிணாமங்களை வெளிப்படுத்தவும் புதிய சாதனைகளைப் படைக்கவும் மனதார வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x