Published : 14 Sep 2020 05:14 PM
Last Updated : 14 Sep 2020 05:14 PM

சினிமாவுக்கென ஆலோசனை அமைப்பு தொடக்கம்: இந்தியாவில் முதல் முறை

சென்னை

இந்தியாவில் முதன்முறையாக முழுமையான, ஒருங்கிணைந்த, திரைத்துறை தொடர்பான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய திரைத்துறை வல்லுநர்களின் ஆலோசனை அமைப்பு இன்று சென்னையில் தொடங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 200 படங்களுக்கு மேல் வெளியாகின்றன. அதில் 160க்கும் மேற்பட்ட படங்கள் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் அதாவது ரூ.8 கோடிக்குள் எடுக்கப்பட்டவை. இதில் 10 சதவீதத்திற்கு மேல் படங்கள் வெற்றி பெறுவதில்லை. மீதி 90 சதவீதம் வணிகரீதியில் தோல்வியடைந்து, அப்படங்களின் தயாரிப்பாளர்களைப் பெரும் சோதனையில் ஆழ்த்தியவை. இப்படி தோல்வி அடைந்த படங்களில் அதிகமானவை சரியான புரிதல் இல்லாமல் எடுக்கப்பட்டதால், அவற்றின் தோல்விகள் தவிர்க்க முடியாதவை.

மேலும் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 125 முதல் 130 புதிய தயாரிப்பாளர்கள் தமிழில் திரைப்படம் எடுக்கவருகிறார்கள். அவர்களில் 2 அல்லது 3 பேர் கூட வெற்றி பெறுவதில்லை. மீதம் அனைவரும் பெரும் வணிக தோல்விகளைச் சந்தித்து திரும்புகிறார்கள்.

தயாரிப்புத் துறையில் நுழைய சினிமா மீது அதீத ஆர்வம் மட்டுமே போதாது. எப்படி எந்த ஒரு துறையிலும் நுழைய அதைப் பற்றிய சரியான புரிதலும், அனுபவமும் தேவைப்படுகிறதோ, அதேபோல சினிமா தயாரிப்புத் துறையில் பயணிக்க நுண்ணறிவும், முன் அனுபவமும் தேவைப்படுகிறது. அத்தகைய அனுபவமும், அறிவும் கொண்டவர்களின் துணையுடன் தயாரிப்புத் துறையில் இறங்கும்போது, வெற்றிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தோல்விகள் தவிர்க்கப்படவும் முடியும்.

அத்தகைய ஓர் வாய்ப்பை உருவாக்க வந்திருக்கிறது CEAD திரைத்துறை ஆலோசனை அமைப்பு.

இந்தியாவில் முதன்முறையாக ஓர் முழுமையான திரைத்துறை சம்பந்தப்பட்ட ஆலோசனை அமைப்பு. திரைப்படத் துறையில் 15 முதல் 20 வருட அனுபவமும், நுண்ணறிவும் கொண்ட 10 வல்லுநர்கள் கொண்ட குழுவுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த CEAD திரைத்துறை ஆலோசனை அமைப்பு, ஒரு திரைப்படத்தின் கதை தொடங்கி, அதன் பட்ஜெட், நிதி நிர்வாகம், நடிகர்கள்-தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு, வியாபாரக் கணிப்பு, தயாரிப்பு நிர்வாகம், விநியோகம், விளம்பரம், வியாபாரம் மற்றும் ஒரு தயாரிப்பாளருக்குத் தேவைப்படும் அனைத்து ஆலோசனைகளையும், முழுமையாகத் தரத் தயாராக உள்ளது.

CEAD திரைத்துறை ஆலோசனை சேவைக் குழுவில் அனுபவம் வாய்ந்த, தயாரிப்பாளர்கள் Dr.G. தனஞ்ஜெயன், C.V. குமார், ரகுநாதன் P, நடிகர் ஜெகன் P., நடிகர்-விமர்சகர் வெங்கட் சுபா, திரைக்கதை வல்லுநர் ‘கருந்தேள்’ ராஜேஷ், இயக்குநர் தனபால் பத்மநாபன், ஆடிட்டர் CA S. கிருஷ்ணகுமார், வழக்கறிஞர்கள் விஜயன்சுப்ரமணியன்- M.V. பாஸ்கர் மற்றும் நிகில் முருகன் ஆகியோர் உள்ளனர்.

CEAD திரைத்துறை ஆலோசனை அமைப்பின் தொடக்கம் பற்றி, அதன் நிறுவனரும், முதன்மை ஆலோசகருமான தனஞ்ஜெயன் கூறியிருப்பதாவது:

"கரோனாவின் பாதிப்பிற்குப் பின் தமிழ்த் திரைப்பட உலகம் பல புதிய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது. அந்த மாற்றங்களுக்கு ஏற்றது போலத் திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு, புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கும், தற்போது திரைப்படம் எடுத்து வரும் தயாரிப்பாளர்களுக்கும், ஒரு நம்பகத்தன்மையுடன் கூடிய வல்லுநர்களின் உதவி மிகவும் வலுசேர்க்கும். அந்த எண்ணத்தில்தான் இந்தத் திரைப்படத்துறை ஆலோசனை அமைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் குழு மூலம் முதல் பிரதி திரைப்படத் தயாரிப்பு, பட்ஜெட் திட்டமிடல், பட்ஜெட் கணிப்பு, தயாரிப்புக்குப் பிந்தைய பணி (Post Production), சந்தைப்படுத்தல்/விளம்பரம், மறுஆக்க (Remake) வியாபாரம், திரைப்படத் திட்டமிடல், கதை மதிப்பீடு, கதையில் மாற்றங்கள், நிதி நிர்வாகம் மற்றும் ஏற்பாடு, தயாரிப்பு நிர்வாகம், வியாபாரம்/வருவாய் அதிகரித்தல், தமிழ்நாடு அளவில் திரையரங்கு விநியோகம், மொத்தமாக ஒரு திரைப்படத்திற்குத் தேவைப்படும் ஆலோசனைகள், சட்டபூர்வமான விஷயங்கள், முழுமையான நிர்வாக ஆலோசனை, திரைப்படத்தின் பூரண வியாபார ஆலோசனை எனத் திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆலோனைகளையும் வழங்க எங்கள் குழு தயாராக உள்ளது".

இவ்வாறு தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x