Published : 13 Sep 2020 07:49 PM
Last Updated : 13 Sep 2020 07:49 PM

ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: லாரன்ஸ் வேண்டுகோள்

முதல்வர் வேட்பாளர் குறித்து ரஜினி தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்கவுள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. ஆனால், ரஜினி தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே வெளியாகவில்லை. ரஜினிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், தீவிர ரசிகராகவும் வலம் வருபவர் நடிகர் மற்றும் இயக்குநர் லாரன்ஸ்.

செப்டம்பர் 4-ம் தேதி அன்று நவம்பரில் ரஜினி கட்சி தொடங்கவுள்ளதைச் சூசகமான தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார் லாரன்ஸ். அதனைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி அரசியல் கட்சி தொடக்கம் குறித்து செய்திகள் பரவின.

இதனிடையே, இன்று (செப்டம்பர் 13) லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"தலைவர் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன். கடந்த வாரம் நான் ஒரு ட்வீட் போட்டதும் மீடியா நண்பர்கள் உள்ளிட்ட பலரும் எல்லா கட்சியும் உங்களுக்குச் செய்துள்ளது என்றும் அனைவரையும் மதிப்பதாகவும், ரஜினி கட்சி தொடங்கினால் நீங்கள் அவரை ஆதரிக்கவுள்ளதாகவும், ஏனெனில் மற்றவர்களைத் தவறாகப் பேசும் எதிர்மறை அரசியல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தீர்களே என்று என்னிடம் கேட்கின்றனர். மேலும் ரஜினியை முதல்வர் வேட்பாளராகவோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் ஒருவரை ஆதரிப்பீர்களா என்றும் கேட்கின்றனர்.

இன்று இதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் தலைவர் முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். லீலா பேலஸ் ஹோட்டலில் தனது முடிவை அவர் அறிவித்த போது, நான் அவரது முடிவை ஆதரித்து ட்வீட் செய்தேன். ஏனென்றால் நான் அவருக்கு எதிராக செயல்பட விரும்பவில்லை. ஆனால் முழு மனதோடு என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மட்டுமல்ல அனைத்து ரசிகர்களும் அப்படியே உணர்ந்ததாக நினைக்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் நான் தலைவரிடம் இதைப் பற்றி நான் பேசும்போது கூட அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். எனவே தலைவர் முதல்வர் வேட்பாளராக நின்றால் மட்டுமே நான் அவருக்காகச் சேவை செய்ய நான் தயாராக இருக்கிறேன். மற்றவர்களுக்கு அல்ல. அவரை சம்மதிக்க வைக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். இல்லையென்றால் தொடர்ந்து நான் என்னுடைய சேவையைத் தனிப்பட்ட முறையில் செய்வேன். தலைவர் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்து முதல்வர் வேட்பாளராக நிற்க வேண்டும் என்று என்னுடைய பணிவான வேண்டுகோளை வைக்கிறேன்.

எதிர்காலத்தில் அவர் விரும்பினால் யாரையாவது தேர்வு செய்யட்டும், ஆனால் இப்போது அவரே முதல்வராக நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதை அவருடைய அனைத்து ரசிகர்களும் வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் இது நடக்கும் என்று என் மனம் சொல்கிறது. நீங்க வந்தா நாங்க வரோம். இப்ப இல்லன்னா எப்போ...

நவம்பர்?"

இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x