Published : 13 Sep 2020 02:03 PM
Last Updated : 13 Sep 2020 02:03 PM

தயாரிப்பாளர்கள் Vs திரையரங்க உரிமையாளர்கள்; மோதல் முற்றுகிறது - திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு எஸ்.ஆர்.பிரபு பதிலடி

சென்னை

தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையே மோதல் முற்றுகிறது. திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பதிலடிக் கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்துக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதமொன்றை எழுதியுள்ளார் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா. அந்தக் கடிதத்துக்குப் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால் புதிய படங்கள் வெளியீடு இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கடிதத்துக்கு ஆதரவு தெரிவித்து 40-க்கும் மேற்பட்ட முன்னணி தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடிக் கொடுத்துள்ளார். அதில் இந்தியா முழுக்க உள்ள நடைமுறை எனவும், இதற்கு வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

தயாரிப்பாளர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் வெளியிடப்படும் ஆடியோக்களுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பதிலடிக் கொடுக்கும் வகையில் ஆடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட ஆடியோ பதிவுகளுக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கடிதமொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"வணக்கம்! எனக்கு திருப்பூர் சுப்ரமணியம் அண்ணா அளவுக்கு பேச வராது அதனால் தான் இந்தப் பதிவு. நேற்று அவர் பேச்சில் எனக்குப் புரிவதெல்லாம் 250 திரையரங்குகள் மட்டுமே விபிஎஃப் - மூலம் 20% அளவுக்கு அதுவும் தயாரிப்பாளர்களால் பயனடைந்து வருகிறது என்பதும், அவற்றால் 750 தனி திரையரங்குகள் துன்பப்பட்டு வருகிறது என்பதுதான். அப்படியிருக்கையில் அவர்கள் முதலில் அவர்களுக்குள்ளாகத் தான் பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும்.

இன்று 750 தனி திரையரங்குகள் விபிஎஃப் விவகாரத்தில் பாதிக்கப்பட்டால் அதன் அர்த்தம் அவர்களும் DSP (Digital Service Provider)- களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே ஆகும். அதை நீங்கள் பேசி சரி செய்து கொள்ளுங்கள். ஏனெனில், நாங்கள் இனி படம் எடுக்கும் வேலையை மட்டும் பார்க்கிறோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? 2017-ல் DSP-களுடன் பேசி இப்பிரச்சினைக்கு 6 மாதத்தில் முடிவு எட்டிவிடுவோம் என்று அமைச்சர் முன்னிலையில் பேசி சென்றுவிட்டு இன்று வரை அதற்குத் தீர்வு எட்டப்படவில்லை.

ஆனால் ஒவ்வொரு முறையும் உங்களிடமிருந்து தீர்வு தவிர்த்து ஏளனப் பேச்சும், திசைதிருப்பும் எதிர்க்கேள்விகளும் தான் வருகிறது. விபிஎஃப் விவகாரத்தில், இவ்வளவு காலம் Analog to Digital conversion - ற்கு உதவியாயிற்று, இனியும் உதவ இயலாது என்பதே தயாரிப்பாளர்கள் முடிவு.

அடிப்படையில் நம் வியாபார முறை என்பது, படம் நாங்கள் எடுப்போம். அதை திரையடும் வசதியை நீங்கள் தருவீர்கள். பார்வையாளரிடம் இருந்து வசூலிக்கும் தொகையில் திரையரங்க தரம் பொருத்து, நாம் பேர முறையில் பங்கிட்டுக்கொள்வோம் என்பதே! ஆனால் இடைப்பட்ட காலத்தில் விபிஎஃப் மூலமும், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலமும் திரையரங்குகள் தனியாக வருவாயை பிரித்து அதிக லாபம் ஈட்ட நினைப்பதே எங்கள் பிரச்சினை. நீங்கள் புரொஜக்டர் வாங்க, மேம்படுத்த தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கி வருவது தவறில்லையென்றால் நாங்கள், விளம்பர வருவாயை கேட்பதும் எவ்வித தவறும் இல்லை!

ஆன்லைன் கட்டணத்தில் 2% மட்டுமே வங்கி கட்டணம். ஆனால் 10 முதல் 30 ரூபாய் வரை “நமது“ பார்வையாளரிடம் டிக்கெட் விலை தவிர்த்து வாங்கி தனியே பங்கிட்டுக் கொள்கிறீர்கள். புரொஜக்டர் வாங்க முதலீடு செய்கிறார்கள் என்று DSP - க்கும், புதுப்பிக்கப் பணம் தருகிறார்கள் என்று முன்பதிவிற்கும் இப்படி தனியே பங்கு பிரிக்க ஆரம்பித்து இன்று அவை பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது.

இன்று விபிஎஃப் நியாயப்படுத்தும் நீங்கள் நாளை வரும் ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் தயாரிப்பாளரைப் பணம் கேட்பதை நியாயப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள். நல்ல வேளை சவுண்ட் சிஸ்டம், இருக்கைகள், ஏசி என ஒவ்வொன்றிற்கும் கேட்கும்முன் இதை நாம் பேச ஆரம்பித்து விட்டோம். ஒன்றை நினைவு கூறுங்கள் நாங்கள் என்றுமே உங்கள் கேண்டீன் வருவாயிலும், பார்க்கிங் வருவாயிலும் பங்கு கேட்டது இல்லை. விளம்பர வருவாய் கூட தனிப்பட்ட முறையில் எனக்குக் கேட்க விருப்பமில்லை. எங்கள் உரிமையானது எங்களுக்கு வந்தால் போதும்.

இவ்வளவு காலம் ஏன் கேட்கவில்லை என்றால், உண்மையில் நாங்கள் நிலை குலைந்திருக்கிறோம் மற்றும் உங்களையே சார்ந்து இருந்தோம், எல்லா வகையிலும் இழப்பை மட்டுமே கண்டு வருகிறோம். இயலாமை எங்களைக் கேட்கச் செய்தது. அதைப் பார்த்து நன்றியற்றவர்கள் என்று கூறுகிறீர்கள். ஏமாற்றப்பட்டவர்களாக உணரும் எங்களிடம் எப்படி நன்றியை எதிர்பார்க்கிறீர்கள்?

உடனே நடிகர் சம்பளம் அதிகம் அதைக் குறையுங்கள் என்கிறீர்கள். நாங்கள் என்றைக்காவது உங்கள் செலவுகளைக் குறைக்கச் சொல்கிறோமா? நீங்கள் செலவு செய்தால் பார்வையாளர்கள் பெருகுவார்கள், அதன் பலன் எங்களுக்கும் வருகிறது தானே? நடிகர்களுக்கு அள்ளிக் கொடுக்க வரிசையில் ஆட்கள் இருக்கும் பொழுது சம்பளம் குறைக்க யார் ஒத்துக்கொள்வார்கள்?

அப்படி டிமாண்ட் இல்லாத படத்திற்கு விநியோகஸ்தரோ, திரையரங்கமோ யார் முன்பணம் அள்ளிக் கொடுக்கப் போகிறார்கள்? இது வெறும் திசைமாற்றும் பேச்சு. தயவுசெய்து இதை இனி பேசாதீர்கள். அனைத்தும் 100% வெளிப்படையான கணக்காக மாறும்பொழுது, தானாகச் சம்பளங்கள் பங்கீட்டு முறைக்கு மாறி கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.

ஹாலிவுட்/பாலிவுட் அவற்றிற்குச் சிறந்த உதாரணம். அப்படியே உங்கள் முன்பணம் தேவைப்படாத சூழ்நிலையும் உருவாகிவிடும். அதற்கான விஷயத்தை தனியங்கி மெசேஜ் முறையில் கரோனா முடிந்தவுடன் செய்து தருவதாக கூறியுள்ளீர்கள், இப்பவும் நடக்கும் என்றே நம்புகிறேன்.

ரோகிணி திரையரங்க விவகாரம் பற்றிய உங்கள் பதிலை ஒருமுறை நீங்களே தனியே கேட்டுப்பாருங்கள். என்ன ஆயிற்று உங்களுக்கு? கொஞ்சமாவது நியாயம் பற்றிய அக்கறையிருந்தால் இப்படியொரு பதிவை இடுவீர்களா? உங்கள் பேச்சிற்கு திரைத்துறையில் பெரும் மதிப்பு உள்ளது. அதை நல்ல விஷயங்களுக்கு மட்டுமே தயவுசெய்து இனி பயன்படுத்துங்கள்!

திரையரங்க வருவாய் / திரையரங்கம் இல்லாத வருவாய் எப்பொழுதுமே வேறுவேறு துறைகள். அதைப்பற்றிக் குழப்பிக் கவலைப்படுவது அவசியமற்றது. திரையரங்க வருவாய் என்றுமே அழியாது, அதுவே அடிப்படை என்பதை உங்களைவிட அதிகம் நம்புகிறேன். அது உண்மையும் கூட. இன்று ஓடிடி என்ற ஒரு விஷயம் வராவிட்டால், திரைத்துறை மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு சென்றிருக்கும். இனி அதைத் தடுக்கவோ, தனிக்கவோ இயலாது.

ஆனால் அதனூடே பயணித்து திரையரங்குகளுக்கான லாபத்தை அதிகப்படுத்தலாம். ஆனால் அதற்கு இந்த அதிகாரப்போக்கும், பேச்சும் என்றுமே உதவாது. நாங்களோ நீங்களோ யாரும் யாருக்கும் முதலாளிகளல்ல நாம் பங்காளிகள். பங்காளிச்சண்டை பரம்பரைப் பகையே உருவாக்கும் என்பதை அனைவரும் அறிவோம்.

நம்மில் யாருடைய வீழ்ச்சியும் அடுத்தவரைப் பாதிக்கும். நம் அடுத்த தலைமுறைக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கித்தருவது நமது கடமை. அதற்குப் பொறுமையும், பொறுப்பும் தேவை. இன்றும் திரையுலகின் சிறந்த ஆளுமையான உங்களிடம் சமீபமாக அவை சற்று குறைந்து காணப்படுகிறது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. காரணம் ஏளனமோ, வெறுப்போ நீங்கள் அதை விரைவில் உணர்ந்தால் நம் திரைத்துறைக்கு வளமான சூழலை நாம் உருவாக்க ஏதுவாக இருக்கும்.

கடந்த 20 வருட கால திரை வரலாற்றில் திரைப்படங்கள் தயாரித்து நல்ல நிலைக்கு வந்துள்ள தயாரிப்பாளர்களைத் தேடிப்பாருங்கள். நல்ல நிலையிலுள்ள சில பைனான்சியர், விநியோகஸ்தரை உங்களால் காண இயலும். எத்தனை தயாரிப்பாளர்களைக் காணமுடிகிறது? ஏன் நீங்களே கூட தயாரிப்பைத் தவிர்த்து முதலீடு செய்யும் அனைத்தை துறையிலும் கொடிகட்டிப் பறப்பது ஏன்?

அதற்காகச் சண்டையிடுவதும் வாதம் செய்வதும் எங்கள் நோக்கமல்ல, தற்போது எங்களுக்கு எங்கள் வாழ்வியல் மட்டுமே முக்கியம். தயாரிப்பாளர் வாழ்ந்தால் அனைத்தும் சுகிக்கும். அதுவே தீர்வு. அதற்கு ஆசைப்படுவது சுயநலம் மட்டுமல்ல, பொதுநலமும் தான்! நல்ல முடிவுகளை எதிர்நோக்கி!"

இவ்வாறு எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x