Published : 09 Sep 2020 08:12 PM
Last Updated : 09 Sep 2020 08:12 PM

ஜனவரிக்குள் 'இந்தியன் 2' முடிக்க கமல் திட்டம்

சென்னை

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை ஜனவரிக்குள் முடித்துக் கொடுக்க கமல் திட்டமிட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

இதனிடையே படப்பிடிப்புத் தளத்தில் விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த பிரச்சினைகள், கரோனா அச்சுறுத்தல் ஆகிய காரணங்களால் 'இந்தியன் 2' படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. ஆனால், இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகளைப் படக்குழு தொடங்கிவிட்டது.

இதனிடையே, 2021-ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளையும் கவனிக்கவுள்ளார் கமல். மேலும், 'பிக் பாஸ் 4' படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதால் அதன் பணிகளையும் கவனித்து வருகிறார்.

'இந்தியன் 2' படத்திலும் இன்னும் பல காட்சிகள் படமாக்க வேண்டியிருப்பதால், ஜனவரிக்குள் முடித்துவிடும்படி கமல் படக்குழுவினரைக் கேட்டுக் கொண்டுள்ளார். தனது காட்சிகளை முழுமையாக ஜனவரிக்குள் திட்டமிட்டு முடித்துவிடும்படியும், அதற்குப் பிறகு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

இதனால், கமல் காட்சிகளை மட்டும் ஜனவரிக்குள் முடித்துவிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழக அரசு, திரைப்படப் படப்பிடிப்புக்கு அனுமதியளித்துவிட்டதால், சென்னையில் அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x