Last Updated : 08 Sep, 2020 12:11 PM

 

Published : 08 Sep 2020 12:11 PM
Last Updated : 08 Sep 2020 12:11 PM

அஜித்தின் முதல் ஹிட்.. செம வசூல்.. மெகா வெற்றி... ‘ஆசை’; வஸந்தின் ‘ஆசை’ வெளியாகி 25 ஆண்டுகள்

இன்றைக்கு மிக உச்சத்தில் இருக்கிற நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அஜித்தின் திரை வாழ்வில் ‘மங்காத்தா’ திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அது அஜித்தின் ஐம்பதாவது படம். அதேபோல், அஜித்தும் ஷாலினியும் இணைந்து நடித்த ஒரே படமான ‘அமர்க்களம்’ அஜித்தின் 25வது படம். இது, அஜித்தின் திரைப்பயணத்திலும் வாழ்க்கைப் பயணத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்துவிட்டது. முதல் படமான ‘அமராவதி’யும் அப்படித்தான். ஆனால், அஜித்தின் திரை வாழ்வில், மிக மிக முக்கியமான படம்... ‘ஆசை’. அஜித்துக்குக் கிடைத்த முதல் வெற்றிப் படம் இதுதான். இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகளாகின்றன. 95ம் ஆண்டு படம் வெளியானது. படம் வெளியாகி 25ம் ஆண்டுகளாகின்றன.

சோழா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், செல்வா இயக்கிய படம் ‘அமராவதி’. இந்தப் படம்தான் அஜித்தின் முதல் படம். பாலபாரதி இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட்டடித்தன. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. ஆனாலும் படத்தில் அஜித்தைப் பார்த்துவிட்டு, ‘யார் இது’ என்று ரசிகர்கள் கேள்விகேட்டுக்கொண்டனர். இங்கே ஒரு கொசுறு தகவல்... இதில் அஜித்துக்கு குரல் கொடுத்திருந்தவர் நடிகர் விக்ரம்.

பிறகு, இயக்குநர் கே.சுபாஷ் இயக்கத்தில், அஜித் நடித்த இரண்டாவது படம் ‘பவித்ரா’. ’அமராவதி’யில் சங்கவிதான் ஹீரோயின். ‘பவித்ரா’ படத்தில் கதையின் நாயகி, டைட்டிலின் நாயகி எல்லாமே ராதிகாதான். இதில் அஜித்துக்கு ஜோடி கீர்த்தனா. இந்தப் படமும் சொல்லிக்கொள்ளும் வெற்றியைத் தரவில்லை. இத்தனைக்கும் இந்தப் படத்துக்கு புக் செய்யவரும்போதே, முதுக்குத்தண்டில் அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார் என்பது கூடுதல் தகவல்.

இந்த சமயத்தில்தான், இயக்குநர் மணிரத்னமும் அவரின் நண்பர் எஸ்.ஸ்ரீராமும் இணைந்து புதிதாக பட நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்கள். கம்பெனியின் மூலம் படம் ஒன்றை இயக்க, இயக்குநர் வஸந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக, வஸந்த் சொன்ன கதை மணிரத்னத்துக்கு ரொம்பவே பிடித்துப் போனது. ஹீரோ யார் என்று மணிரத்னம் கேட்க, ‘அஜித்’ என்றார் வஸந்த். ‘அஜித்?’ என்று அழுத்தமாகக் கேட்டார் மணிரத்னம்.

‘அமராவதி’ படம் வருவதற்கு முன்பே, இயக்குநர் வஸந்த், வேஷ்டி விளம்பரம் ஒன்றைப் பார்த்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் வரும் அஜித்தின் துறுதுறு முகம் கவர்ந்துவிடவே, ‘அடுத்த படம் பண்ணும் போது, இந்த இளைஞரை சினிமாவுக்குள் கொண்டுவரவேண்டும்’ என ஆசைப்பட்டார் வஸந்த். ஆனால், அதற்குள், ‘அமராவதி’யும் ‘பவித்ராவும்’ வந்துவிட்டன. ஆகவே இயக்குநர் வஸந்த், அஜித்தை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை, ‘ஆசை’ மூலமாக நிறைவேறியது. இந்தப் படம்தான் அஜித்துக்கு வெற்றியை மட்டும் அல்லாமல் முதன்முதலாக பட்டத்தையும் கொடுத்தது. அது... ‘ஆசை நாயகன் அஜித்’ என்ற பட்டம்.


அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகிணி, பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நடித்த இந்தப் படம் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. ஏற்படுத்திய தாக்கம் இன்றைக்கும் உண்டு. பூர்ணம் விஸ்வநாதனுக்கு ரோகிணி, சுவலட்சுமி என இரண்டு மகள்கள். இவர்களில் ராணுவத்தில் பணிபுரியும் பிரகாஷ்ராஜ், ரோகிணியைத் திருமணம் செய்து கொண்டு டில்லியில் இருப்பார். பூர்ணம் விஸ்வநாதனும் சுவலட்சுமியும் சென்னையில் இருப்பார்கள்.


அங்கே துறுதுறு சுறுசுறு விறுவிறு இளைஞன் ஜீவா கதாபாத்திரத்தில் அஜித், எல்லா வயதினரையும் கவர்ந்தார். நாயகி யமுனா கேரக்டரில் சுவலட்சுமி. இருவருக்கும் காதல். ஒருவர் மீது ஒருவர் ஆசைப்படுவார்கள். அது... காதல் ஆசை. அதேசமயம், மனைவியின் தங்கையைப் பார்த்ததும் பிரகாஷ்ராஜுக்கு சபலம். ஆசை. இங்கே காமமே ஆசை.


ஒருகட்டத்தில், சுவலட்சுமியை அடைவதற்காக, மனைவியையே கொலைசெய்வார் பிரகாஷ்ராஜ். கைக்குழந்தையுடன் இருக்கும் பிரகாஷ்ராஜ் மீது பூர்ணம் விஸ்வநாதனுக்கு கரிசனம். மரியாதை. அன்பு. பரிவு. சுவலட்சுமியின் காதல் பிரகாஷ்ராஜூக்கு தெரியவரும். கொஞ்சம் கொஞ்சமாக, வில்லத்தனத்தில் இறங்குவார். தன் சைக்கோ குணத்தைக் காட்டுவார். ஆனால் உள்ளே நம்பியார்த்தனத்தையும் வெளியே எம்ஜிஆர் கேரக்டருமாக ரெட்டைவேடம் போடுவார் பிரகாஷ்ராஜ்.

பூர்ணம் விஸ்வநாதனுக்கும் சுவலட்சுமிக்கும் அஜித்தை கெட்டவனாகக் காட்டுவதற்காக பிரகாஷ்ராஜ், சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் காட்சிகள் ஒவ்வொன்றும் பகீர் ரகம். போதாக்குறைக்கு, அஜித்தை வைத்து டிராமா, கைக்குழந்தையை வைத்து டிராமா, கடன் கொடுத்தவனை வைத்து டிராமா என்று அசால்ட்டாக வில்லத்தனங்களை செய்துகொண்டே இருப்பார். பார்க்கிற நாமே பதைபதைத்துப் போவோம்.
இதனால் பாதிக்கப்படுகிற அஜித்துக்கு, ஒருகட்டத்தில் பிரகாஷ்ராஜின் செயல்கள் தெரியவரும். அவர், ஒருபக்கம் தன் காதலியிடம் தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயம். இன்னொரு பக்கம், பிரகாஷ்ராஜின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த வேண்டிய அவசர அவசியம். இந்தத் தவிப்பையும் கோபத்தையும் வெகு அழகாகக் காட்டியிருப்பார் அஜித்.


கட்டகடைசியாக, பூர்ணம் விஸ்வநாதனுக்கு மாப்பிள்ளையின் சூழ்ச்சிகள் தெரியவரும். மகள் ரோகிணியைக் கொன்றது மட்டும் அல்லாமல், இன்னொரு மகளின் வாழ்க்கையையும் அபகரிக்க நினைக்கிற ராவணத் தனத்தைப் புரிந்துகொள்வார். ஆவேசமாவார். சாது மிரண்டால் என்ன நடக்குமோ அதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். பிரகாஷ்ராஜைக் கொல்லுவதற்கு பூர்ணம் விஸ்வநாதன் செயல்படும் காட்சியில், தியேட்டர் மொத்தமும் அப்படியொரு கைத்தட்டலை வழங்கி, கிடுகிடுக்கச் செய்தது ரசிகர் கூட்டம். அந்த அளவுக்கு பிரகாஷ்ராஜ் மீதிருந்த எல்லையே இல்லாத கோபம். மன்னிக்கவே முடியாத அளவுக்கு ஆத்திரம். அந்தக் கேரக்டர் மீது வந்த ஆத்திரம். அவற்றின் வெளிப்பாடுதான் அந்தக் கைத்தட்டல். விசில் சத்தம். ஆர்ப்பரிப்பு. சென்னை, டெல்லி, பேருந்து, ரயில், அஜித், சுவலட்சுமி, ரோகிணி, ஹோட்டல் காட்சி, பனி படர்ந்த மலை என்று ஒவ்வொரு காட்சிகளையும் கவிதையாக்கியிருப்பார் ஒளிப்பதிவாளர் ஜீவா.

’ஆசை’ படத்தில் இயக்குநர் வஸந்தின் அட்டகாச இயக்கம், அஜித்தின் ஹேண்ட்ஸம் நடிப்பு, பிரகாஷ்ராஜின் மெல்லிய ஆனால் கொடூரமான வில்லத்தனம், பூர்ணம் விஸ்வநாதனின் கனிவும் கருணையும் பாசமும் பொங்குகிற, வெளுத்ததெல்லாம் பால் என்று மாப்பிள்ளையை நினைக்கிற இயலாமை கலந்த நடிப்பு, சுவலட்சுமியின் அழகும் இளமையும் கண்களும் காதலுமான நடிப்பு, ரோகிணியின் பாந்தமான, பாசமான, மோசமாகிப் போன நடிப்பு, எல்லாவற்றையும் போல், தேவாவின் இசையைச் சொல்லியே ஆகவேண்டும்.

கி.மு., கி.பி. என்பது போல, ஆசைக்கு முன், ஆசைக்குப் பின் என்று தேவாவின் இசையைச் சொல்லவேண்டும். வாலி, வைரமுத்துவின் வரிகளுக்கு ‘ஆசை’ படத்துக்கு தேவா போட்ட டியூன்கள் எல்லாமே வேற லெவல். அதுவரை வழக்கமான மெட்டுகளும் டியூன்களும் போட்டு பாடல்களை ஹிட்டாக்கி வந்த தேவா, இந்தப் படத்தில் இப்படியொரு இசையைத் தருவார் என்று எவருமே நினைக்கவில்லை.

பொதுவாகவே இயக்குநர் வஸந்தின் படங்களில், பாடல்கள் சம்திங் ஸ்பெஷலாகத்தான் இருக்கும். ‘புல்வெளி புல்வெளி’, என்றொரு பாடல், ‘திலோத்தமா’ என்றொரு பாடல். ’கொஞ்சநாள் பொறு தலைவா’, ‘மீனம்மா’ என்று எல்லாப் பாடல்களுமே மயிலிறகில் தேன் கலந்து, செவியை வருடின.

அஜித்துக்கு ‘அமராவதி’, ‘பவித்ரா’ என இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, முதன்முதலாகக் கிடைத்த வெற்றிப்படம்தான் ‘ஆசை’. ‘கேளடி கண்மணி’தான் இயக்குநர் வஸந்துக்கு முதல் படம். ‘நீ பாதி நான் பாதி’ இரண்டாவது படம். மூன்றாவதாக ‘ஆசை’. ஆக இருவருக்குமே மூன்றாவதாக அமைந்த படம். முத்தாய்ப்பாக அமைந்தபடம். முத்துமுத்தாக வெற்றியைக் கொடுத்த படம்.

படத்தை எல்லோரும் ஆசை ஆசையாகப் பார்த்தார்கள். மீண்டும் ஆசையுடன் விரும்பி வந்து, திரும்பத்திரும்பப் பார்த்தார்கள்.

95ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 8ம் தேதி படம் வெளியானது (9ம் தேதி வெளியானது என்றும் சொல்கிறார்கள்). ’ஆசை’ படம் வெளியாகி 25 ஆண்டுகளாகின்றன.
’ஆசை’ பிரகாஷ்ராஜையும் ‘ஆசை’ சுவலட்சுமியையும் ’ஆசை’ வஸந்தையும், ‘ஆசை நாயகன்’ அஜித்தையும் மற்றும் ‘ஆசை’ டீமையும் மனதார வாழ்த்துவோம். ஆசை ஆசையாக வாழ்த்துவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x