’ஆர்.எக்ஸ் 100’ இயக்குநர் இயக்கத்தில் சர்வானந்த்

’ஆர்.எக்ஸ் 100’ இயக்குநர் இயக்கத்தில் சர்வானந்த்
Updated on
1 min read

'ஆர்.எக்ஸ் 100' இயக்குநர் அஜய் பூபதி இயக்கவுள்ள புதிய படத்தில் சர்வானந்த் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஆர்.எக்ஸ் 100'. அஜய் பூபதி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கார்த்திகேயா, பாயல் ராஜ்பூத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அஜய் பூபதியின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது.

இதனிடையே, இன்று (செப்டம்பர் 7) அஜய் பூபதியின் அடுத்தப் படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வானந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். 'மஹா சமுத்திரம்' என்ற பெயரில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சரிலேரு நீக்கவெரு' தெலுங்கு படத்தைத் தொடர்ந்து ஏ.கே நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வானந்த் உடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வமாக அறிவித்து, படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in