Published : 07 Sep 2020 04:12 PM
Last Updated : 07 Sep 2020 04:12 PM

அறிமுகம், கஷ்டங்கள், துரத்திய கேள்வி: அஜய் பகிர்வு

திரையுலகில் கிடைத்த அறிமுகம், கஷ்டங்கள், துரத்திய கேள்வி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நடிகர் அஜய் பகிர்ந்துள்ளார்

இணையத்தில் பல படங்களின் முன்னோட்டங்கள் கொட்டிக் கிடந்தாலும், ஒரு சில படங்களின் முன்னோட்டம் மட்டுமே இளைஞர்களைக் கவரும். இந்த கரோனா அச்சுறுத்தல் காலத்தில் ஜூலை 30-ம் தேதி வெளியான 'காதலும் நானும்' என்ற படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெற்ற வசனங்கள், காட்சியமைப்புகள் என அனைத்துமே இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

செந்தில் குமரன் தயாரிப்பில், சதீஷ் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார் அஜய். 'ராஜதந்திரம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி!

திரையுலகில் எப்படி அறிமுகம் கிடைத்தது?

நாடகங்கள் மூலமாக திரைத்துறைக்குள் நுழைய ஒரு வழி இருந்தது. அதைப் பண்ணலாம் என்று நடிப்பு பயிற்சி எடுத்து நாடகங்கள் நடிக்கத் தொடங்கினேன். நடிப்புப் பயிற்சி எடுக்க முதலில் கூத்துப் பட்டறைக்குச் சென்றேன். அந்தச் சமயத்தில் அங்கு எந்தவொரு வகுப்பும் தொடங்கப்படாத சூழல் இருந்தது. அப்போது, அங்கு பணிபுரிந்த தேவி என்பவர் தனியாக நடிப்பு பயிற்சி ஒன்றைத் தொடங்கினார். அவரது பட்டறையில் பயின்றேன். அங்கு முத்துச்சாமி சார் எல்லாம் வந்து சொல்லிக் கொடுப்பார். அவர்களுடன் இணைந்து நிறைய நாடகங்கள் பண்ணினேன். அப்போது தான் 'உதயம் என்.ஹெச் 4' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். பின்பு சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது தான் 'ராஜதந்திரம்' வாய்ப்பு வந்தது. அதில் தான் அனைவருடைய மனதிலும் பதிந்தேன் என்று சொல்வேன்.

'காதலும் நானும்' வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

'வேழம்' என்ற படத்தில் அசோக் செல்வனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ஷக்திக்கு எனது நடிப்பு ரொம்ப பிடித்திருந்தது. அவர் தான் என்னை இந்தப் படத்துக்குப் பரிந்துரை செய்தார். இயக்குநர் சதீஷ் இந்தப் படத்தின் கதையைக் கூறும் போது, 8 ஆண்டுகள் தேடலுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பாக அமைந்தது. என்னை ஒரு நடிகராக முன்னிலைப்படுத்த நடந்த தேடலுக்கான ஒரு விடை தான் இந்தப் படம் என்று சொல்வேன்.

'காதலும் நானும்' படத்தின் கதைக்களம் குறித்து...

கதையாக ரொம்ப புதிது என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனால், அந்த கதையைக் கையாண்ட விதம் வித்தியாசமாக இருக்கும். பருவ வயது பையன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், அந்தப் பெண் அவனை ஏமாற்றிவிடுகிறாள். ஒரு பெண்ணுக்காக நாம் இவ்வளவு ஒழுக்கமாக, நல்ல பையனாக இருந்தோம். இப்போது அந்த பெண் நம்மைவிட்டுப் போய்விட்டது. எதுவுமே இங்கு நிஜமில்லை என்ற மனநிலைக்கு அந்த பையன் வருகிறான். அப்போது அந்த பையன் எடுக்கும் முடிவு என்னவாகிறது என்பது கதை. இன்றைய இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கிற மாதிரியான கதை தான்.

நாயகனாக முன்னேற பல்வேறு தடைகளைச் சந்தித்திருப்பீர்களே..

தடைகள் என்பதைத் தாண்டி பிடித்த விஷயத்தைத் தொழிலாக எடுத்துப் பண்ணும் போது, அதில் வரும் தடைகள், கஷ்டங்கள் எல்லாம் நமக்கு கற்றுக் கொடுக்கிறது என்று எடுத்துக் கொண்டேன். அப்படித்தான் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறேன். "எப்போதுமே நாயகனாகப் போகிறாய்" என்ற கேள்வி என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேரும் போது, உடனே எப்போது எம்.டி ஆகப் போகிறாய் என்று கேட்பது போலத் தான் இந்தக் கேள்வியும் என நினைக்கிறேன். அப்பா, அண்ணன் என யாருமே பெரிய தயாரிப்பாளரோ, இயக்குநரோ கிடையாது. நம்மளே ஒரு படம் எடுத்து நாயகன் ஆவதற்கு வசதியும் கிடையாது. படிப்படியான முயற்சியில் தான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.

தொடர் போராட்டம் எனும் போது, ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்திருப்பீர்களே..

முதலில் கஷ்டப்பட்டது உண்மை தான். ஒரு கட்டத்தில் இது போராட்டமே கிடையாது. நமக்குப் பிடித்த விஷயத்துக்காக பண்றோம் என ஓடத் தொடங்கினேன். எனக்கு வெற்றி முன்பே கிடைத்திருந்தால் கூட பெரிய அளவுக்கு சந்தோஷமடைந்திருப்பேனா என்று தெரியாது. ஒரு விஷயத்துக்காக போராடிக் கிடைக்கும் சந்தோஷம் தான் பெரியது. இப்போது எனது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் எனது வெற்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் அதை அடைந்தே தீருவேன் என்ற எண்ணத்தோடு ஓடிக்கொண்டே இருக்கிறேன், இருப்பேன்.

திரையுலகில் நண்பர்கள் என்றால் யாரைச் சொல்வீர்கள்?

நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போது 'காதலும் நானும்' ஸ்னீக் பீக்கை விஜய் சேதுபதி சாரிடம் காட்டினேன். அவர் பார்த்துவிட்டு பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பிறகு அசோக் செல்வன், கலையரசன், ரமேஷ் திலக், பால சரவணன், இயக்குநர் 'எங்கேயும் எப்போதும்' சரவணன், பிரசாத் முருகேசன், தாஸ் ராமசாமி, சாம் ஆண்டன், முத்துக்குமரன், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் என நிறையப் பேர் பாராட்டினார்கள். அவர்கள் அனைவருமே என் நண்பர்கள் தான். இவர்களுடைய பாராட்டு மிகப்பெரிய ஊக்கம் அளித்திருக்கிறது. அந்த ஊக்கம் என்னை இப்போது பலமடங்கு பலப்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x