

தனக்காக இதுவரை அப்பா (மம்மூட்டி) எந்தவொரு சிபாரிசும் செய்யவில்லை என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
ஜூன் 14-ம் தேதி சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பிறகு இந்திய அளவில் பல நடிகர்கள், வாரிசு அரசியல் தொடர்பாக கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சையினால்தான் சுஷாந்த் சிங் காலமானார் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.
இதனிடையே, சமீபத்தில் சமூக வலைதளத்தில் துல்கர் சல்மானின் புதிய லுக் வைரலானது. இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
அதில் வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு துல்கர் சல்மான் கூறியிருப்பதாவது:
"நான் ஒரு அறிமுகம் கிடைக்க கஷ்டப்பட்டேன் என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும். ஆனால், என் தந்தை எனக்கு இதுவரை உதவவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என்னிடம் வராதே, நான் யாரிடமும் சிபாரிசு செய்ய மாட்டேன் என்று அப்பா சொல்லிவிட்டார். இன்றுவரை கூட அதை அவர் செய்யவில்லை. அதற்காகவே அவரை நான் நேசிக்கிறேன்".
இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.