

முன்னணி நடிகர்கள் ஏன் வெளிப்படையாகப் பேசுவதில்லை என்பதற்கான காரணத்தை அபய் தியோல் தெரிவித்துள்ளார்.
இந்தித் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அபய் தியோல். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ஹீரோ' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் பாலிவுட்டில் நிலவும் பிரச்சினைகள் அனைத்துக்குமே வெளிப்படையாகக் கருத்துகள் தெரிவிக்கக் கூடியவர்.
தனுஷுடன் நடித்த 'ராஞ்சனா' படத்தின் குறைகள் இவை என்று சமீபத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டு இருந்தார். தற்போது 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், முன்னணி நடிகர்கள் ஏன் வெளிப்படையாகப் பேசுவதில்லை என்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.
அதில் அபய் தியோல் கூறியிருப்பதாவது:
"நீங்கள் தொடர்ந்து திரைத்துறையில் இருக்க வேண்டுமென்றால் தோழமையாக, யாரும் எளிதில் அணுகக்கூடிய நபராக இருக்க வேண்டும். உங்களுக்கென வலிமையான கருத்துகள் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அகந்தை என்று பார்க்கப்படும்.
ஆனால், என்னைப் போல என் சக நடிகர்கள் ஏன் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்வதில்லை என்று எனக்குப் புரிகிறது. சமூக வலைதளங்களில் நாம் தாக்கப்படுவோம், கிண்டல் செய்யப்படுவோம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நம் நடிகைகளுக்கு பாலியல் அச்சுறுத்தல், கொலை மிரட்டல் தருகிறார்களே. சஞ்சய் லீலா பன்சாலியை அடித்தார்கள் இல்லையா? தீபிகா படுகோனேவையும் மிரட்டினார்கள். ஆனால் ஒரு புகார் கூட பதிவு செய்யவில்லை. இது அவர்கள் எவ்வளவு பயத்துடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது".
இவ்வாறு அபய் தியோல் தெரிவித்துள்ளார்.