2021-ல் இரண்டு படங்கள்: விஜய் திட்டம்

2021-ல் இரண்டு படங்கள்: விஜய் திட்டம்
Updated on
1 min read

2021-ல் விஜய் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடலாம், அதற்குள் கரோனா அச்சுறுத்தல் எல்லாம் குறைந்து சகஜநிலை திரும்பும் எனப் படக்குழு காத்திருக்கிறது.

இதனிடையே, 2020-ம் ஆண்டைப் பொறுத்தவரையில் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு. எந்த வகையில் என்றால், விஜய் நாயகனாக நடிக்கத் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு ஆண்டுமே ஏதேனும் ஒரு படம் வெளியாகியுள்ளது. ஆனால், 2020-ம் ஆண்டில்தான் விஜய்யின் எந்தவொரு படமும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'மாஸ்டர்' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் முழுமையாக முடிந்தவுடனேயே தொடங்கும் எனத் தெரிகிறது.

2021-ம் ஆண்டு பொங்கலுக்கு 'மாஸ்டர்' படம் வெளியானாலும் கூட, அதே ஆண்டு தீபாவளிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் விஜய். அதற்குத் தகுந்தாற்போல் இரண்டு ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிப்பது போலத் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோக, ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு நடிக்கவுள்ள அடுத்த படத்தையுமே சீக்கிரமாக முடித்து வெளியிடத் தீர்மானித்துள்ளார் விஜய். அந்தப் படம் 2022 கோடை விடுமுறைக்கு வெளிவரக்கூடும் என்கிறார்கள் திரையுலகில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in