Published : 06 Sep 2020 07:37 AM
Last Updated : 06 Sep 2020 07:37 AM

பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் முயற்சியில் பப்ஜிக்கு மாற்றாக ‘பாஜி’ விளையாட்டு செயலி

புதுடெல்லி

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்திய பிறகு அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டுடனான வர்த்தக உறவில் கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு படிப்படியாக செயல்படுத்தியது.

முதல் கட்டமாக சீனாவின் டிக் டாக் உட்பட 59 மொபைல் செயலிகளை தடை செய்தது. இரண்டாவது கட்டமாக பப்ஜி உட்பட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

பப்ஜி செயலி தென் கொரிய நிறுவனத்துக்கு சொந்தமானது என்றாலும், அந்நிறுவனத்தில் சீன நிறுவனத்தின் பங்குகள் இருப்பதால், இது சீனாவுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக பப்ஜி உள்ளது, நாட்டு மக்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்தக் காரணங்களுக்காக பப்ஜி தடை செய்யப்பட்டதாக மத்திய அரசு கூறியது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பப்ஜி உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில், பப்ஜி விளையாட்டுக்கு மாற்றாக, ‘பாஜி’ என்ற பெயரில் இந்தியாவின் புதிய செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ‘என்கோர் கேம்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை வடிவமைத்து வருகிறது.

இந்நிறுவனத்தின் துணை நிறுவனர் விஷால் கோண்டால் கூறும்போது, ‘‘பாஜி - பியர்லெஸ் அண்ட் யுனைடெட் : கார்ட்ஸ்’ (FAU-G Or Fearless And United: Guards) என்ற பெயரில் இந்த சாகச விளையாட்டு செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் கடந்த மே மாதமே தொடங்கி விட்டோம். அக்டோபர் மாதம் இந்த செயலி அறிமுகமாகும்’’ என்று தெரிவித்தார்.

இந்த விளையாட்டு இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்கள், சாகசங்கள், அதிரடி நடவடிக்கைகள், தேசப்பற்று போன்றவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. பாஜி செயலியின் முதல் நிலை, கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களின் தீரத்தை எடுத்துக் காட்டும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை ஆண்டுக்கு 20 கோடி பேர் பதிவிறக்கம் செய்வார்கள் என்று என்கோர் கேம்ஸ் நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்த செயலி மூலம் வரும் வருவாயில் 20 சதவீத தொகை உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட உள்ளது. இந்த பாஜி செயலி பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாருடன் இணைந்து உருவாக்கப்பட்டு வருகிறது. அக் ஷய் குமாரின் தந்தை ராணுவ அதிகாரியாக பணியாற்றியவர்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் தொடங்கிய உடனேயே நிவாரண நிதியாக ரூ.25 கோடியை அக் ஷய் குமார் வழங்கினார். அத்துடன், அசாம் வெள்ள நிவாரணத்துக்கும் நிதி வழங்கினார். சமூக பொறுப்புடன் செயல்படும் அக் ஷய், தற்போது இந்திய மக்களுக்காக உள்நாட்டிலேயே விளையாட்டு செயலி உருவாக பக்கபலமாக இருந்து உதவி செய்து வருகிறார்.

சீனாவுக்கு எதிரான மனநிலை இந்திய மக்களிடம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய சுயசார்பு அல்லது பிரதமர் மோடியின் ‘ஆத்ம நிர்பார்’ திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பாஜி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x