Published : 05 Sep 2020 02:07 PM
Last Updated : 05 Sep 2020 02:07 PM

திரையரங்குகள் திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்; தென் மாநிலங்கள் புறக்கணிப்பா?- மத்திய அரசுக்கு டி.ஆர். கடும் கண்டனம்

கரோனா அச்சுறுத்தலால் சுமார் 150 நாட்களுக்கும் மேலாகத் திரையரங்குகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இதனால் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் எனப் பலருக்கும் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல படங்கள் ஓடிடி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு வருகின்றன. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் திரையரங்குகளைத் திறக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

எனவே, மீண்டும் திரையரங்குகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த, நாடு முழுவதுமுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க அதிபர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலருக்கும் மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த யாருக்கும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது:

''மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பின் சார்பாக மீண்டும் திரையரங்குகள் திறப்பது குறித்த ஒரு ஆலோசனைக் கூட்டத்தை வரும் 8 ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளனர். அதற்காக திரைப்பட உரிமையாளர்கள், திரைப்பட அதிபர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் இருக்கக் கூடிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால், தென்னிந்தியாவைக் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா என ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருக்கிறார்கள். ஆண்டுக்கு 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அழைப்பில்லை. ஆனால், குறைவான திரைப்படங்களை வெளியிடக்கூடிய குஜராத்தில் இரண்டு அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் தென்னகத்தை மட்டும் ஏன் புறக்கணிக்க வேண்டும்? இதைப் பற்றி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை. இது மிகவும் கண்டனத்துக்குரியது. வருத்தத்துக்குரியது. எங்கள் ஆதங்கத்தை தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் இதனை நான் தெரிவித்துக் கொள்கிறேன்''.

இவ்வாறு டி.ஆர். கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x