

கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கன்னடத் திரையுலகில் பிரபல தயாரிப்பாளரான ஆர்.என்.மந்த்ரேவின் பேத்தி நடிகை ஷர்மிளா மந்த்ரே. 2007-ம் ஆண்டு 'சஜ்னி' என்ற படத்தின் மூலம் கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாக நடித்து வந்தார்.
2012-ம் ஆண்டு மாதேஷ் இயக்கத்தில் உருவான 'மிரட்டல்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறாத காரணத்தால் தொடர்ச்சியாக கன்னடத்திலேயே கவனம் செலுத்தத் தொடங்கினார்.
ஆனால், தமிழில் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு', 'சண்டக்காரி', 'நானும் சிங்கிள்தான்' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். எதிலுமே அவர் நடிக்கவில்லை. தற்போது அவருக்கும், குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக ஷர்மிளா மந்த்ரே தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"அனைவருக்கும் வணக்கம். எனக்கும், என் குடும்பத்தினர் சிலருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகளே இருப்பதால் வீட்டுத் தனிமையில் இருக்கிறோம். நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவரின் அறிவுரைக்கேற்ப சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன்".
இவ்வாறு ஷர்மிளா மந்த்ரே தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு நண்பருடன் காரில் வெளியே சென்றபோது பெங்களூருவில் விபத்தில் சிக்கினார் ஷர்மிளா மந்த்ரே. கரோனா அச்சுறுத்தல் சமயத்தில் அவர் காவல்துறையின் அனுமதியின்றி வெளியே சுற்றியது சர்ச்சையானது.