மன அழுத்தமா? - ரஜினி படத்தைப் பாருங்கள்; உற்சாகம் பிறக்கும்: ஜவகல் ஸ்ரீநாத்

மன அழுத்தமா? - ரஜினி படத்தைப் பாருங்கள்; உற்சாகம் பிறக்கும்: ஜவகல் ஸ்ரீநாத்
Updated on
1 min read

ரஜினிகாந்த் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றும், அவர் திரைப்படங்களைப் பார்த்தால் உற்சாகம் கிடைக்கும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பிரபல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களை அடிக்கடி பேட்டி காண்கிறார். அப்படி சமீபத்தில் ஜவகல் ஸ்ரீநாத்தை அஸ்வின் பேட்டியெடுத்துள்ளார்.

பேட்டி முடிய சில நிமிடங்கள் இருக்கும்போது, "உங்களுக்கு மிகவும் பிடித்த மூன்று நடிகர்கள் யார்?" என்று அஸ்வின் கேட்க, அதற்கு "அமிதாப் பச்சன், ஷாரூக் கான் மற்றும் ரஜினிகாந்த்" என்று ஜவகல் ஸ்ரீநாத் சொன்னார்.

''ஏன் ரஜினி பிடிக்கும்?'' என அஸ்வின் கேட்டார்.

"நம் வாழ்க்கைக்கு அவர் அற்புதமான ஆற்றலைக் கொண்டு வருகிறார் என நான் நினைக்கிறேன். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் ரஜினியின் திரைப்படத்தைப் பாருங்கள். முழு உற்சாகத்தோடு திரும்ப வருவீர்கள். அவர் படங்களில் எங்கோ அடிமட்டத்திலிருந்து வந்து உயர்வார். அவரது திரை ஆளுமை, அவரிடம் இருக்கும் கூடுதலான ஒரு ஈர்ப்பு, திரைப்படங்களுக்கு அவரால் சேரும் உயிர்ப்பு என எல்லாமே காரணம். அதனால் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஒரு சில முறை அவரைச் சந்தித்திருக்கிறேன். ஒரு முறை பெங்களூரு விமான நிலையத்தில் சந்தித்தேன். தனது காரில் என்னை ஏறும்படியும், எங்கு செல்ல வேண்டுமோ இறக்கிவிடுகிறேன் என்றும் சொன்னார். அவரது கனிவே அது. அதைத்தான் சொல்கிறேன். உங்கள் நாள் மோசமாக இருந்தால், ரஜினிகாந்தின் திரைப்படத்தைப் பாருங்கள்" என்று ஸ்ரீநாத் பதில் சொன்னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in