Last Updated : 01 Sep, 2020 04:30 PM

 

Published : 01 Sep 2020 04:30 PM
Last Updated : 01 Sep 2020 04:30 PM

திருச்சியில் எப்எம்ஜிஇ தேர்வெழுதிய நடிகை சாய் பல்லவி; செல்பி எடுத்து மகிழ்ந்த சக தேர்வர்கள்

சாய் பல்லவியுடன் செல்பி எடுத்துக்கொண்ட சக தேர்வர்கள்

திருச்சி

நாடு முழுவதும் நடைபெற்ற எப்எம்ஜிஇ தேர்வை திருச்சி மையத்தில் எழுதினார் பிரபல நடிகை சாய் பல்லவி. அப்போது, சக தேர்வர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

வெளிநாட்டு மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் மாணவர்கள், இங்கு மருத்துவராக பணியாற்ற வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் (FMGE- Foreign Medical Graduate Examination) தேர்ச்சி பெறுவது அவசியம்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தால் இந்த எப்எம்ஜிஇ தேர்வை இந்தியாவில் எழுதத் தேவையில்லை. அதேவேளையில், ரஷ்யா, சீனா, வங்கதேசம், பிலிப்பைன்ஸ், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற கட்டாயம் இந்தத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

தேசிய தேர்வு வாரியம், ஜூன் மற்றும் டிசம்பர் என ஆண்டுக்கு 2 முறை இந்தத் தேர்வை நடத்தி வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, நேற்று (ஆக.31) நடைபெற்றது.

இந்தத் தேர்வுக்காக திருச்சி சிறுகனூர் எம்ஏஎம் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி பங்கேற்று தேர்வெழுதினார். இவர், ஜார்ஜியா நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இரு வேளை தேர்வும் முடிந்து புறப்படுவதற்கு முன் சக தேர்வர்கள் அவரை அடையாளம் கண்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.

சாய் பல்லவியுடன் செல்பி எடுத்துக்கொண்ட சக தேர்வர்கள்

இதுதொடர்பாக கல்லூரி ஊழியர் ஒருவர் கூறும்போது, "முகக்கவசத்துடன், தலையில் முக்காடும் அணிந்திருந்ததால் முதலில் அருகில் அமர்ந்திருந்த மாணவர்களுக்குக்கூட சாய் பல்லவியை அடையாளம் தெரியவில்லை. ஆனால், சிறிது நேரத்தில் தேர்வறையில் அடையாளம் தெரிந்து கொண்டனர். பின்னர், தேர்வு முடிந்த பிறகு செல்பி எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டார். தான் ஒரு பிரபல நடிகை என்ற பெருமிதம் சிறிதும் இன்றி, செல்பி எடுத்த சக தேர்வர்களுடன் மிகவும் இயல்பாக நடந்து கொண்டார். செல்பிக்காக தனது முகக்கவசத்தையும் ஓரிரு விநாடிகள் அவர் அகற்றினார்.

பிரபல நடிகையாக உயர்ந்துவிட்ட நிலையிலும், தேர்வில் பங்கேற்றதன் மூலம் எந்த நிலையிலும் கல்விதான் நிலையான செல்வம் என்பதை சாய் பல்லவி பிறருக்கு உணர்த்தியுள்ளார் என்று சக தேர்வர்கள் பெருமையாக பேசிக் கொண்டனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x