Published : 01 Sep 2020 02:59 PM
Last Updated : 01 Sep 2020 02:59 PM

பிளாஸ்மா தானம் செய்யுங்கள்: ராஜமௌலி, கீரவாணி வலியுறுத்தல்

ஹைதராபாத்

கரோனா தொற்று உள்ளவர்களைக் குணப்படுத்த, தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவுறுத்தியுள்ளார். அவரது உறவினரான இசையமைப்பாளர் கீரவாணியும் இதுகுறித்துப் பகிர்ந்துள்ளார்.

கடந்த மாதம் இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த ராஜமௌலி, அனைவரும் வீட்டுத் தனிமையில் இருப்பதாகப் பகிர்ந்திருந்தார்.

பின்னர், வீட்டுத் தனிமைக் காலம் முடிந்து கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானவுடன், பிளாஸ்மா தானம் செய்ய இன்னும் சில வாரங்கள் காத்திருக்கப் போகிறோம் என்று பகிர்ந்திருந்தார். தற்போது பிளாஸ்மா தானம் குறித்து மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும் ஆன்டிபாடீஸ் உருவாகிவிட்டதா என்று பரிசோதனை மேற்கொண்டேன். எனது ஐஜிஜி அளவுகள் 8.62 என்கிற நிலையில் உள்ளன. 15-க்கும் அதிகமாக இருந்தால்தான் என்னால் பிளாஸ்மா தானம் கொடுக்க முடியும். பெரியண்ணனும், பைராவாவும் இன்று தானம் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆன்டிபாடீஸ் நம் உடலில் உருவாகிக் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும். கோவிட்-19 தொற்று குணமாகிய அனைவரும் முன் வந்து பிளாஸ்மா தானம் செய்து உயிரைக் காப்பாற்றுபவராக மாறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று ராஜமௌலி பதிவிட்டுள்ளார்.

ராஜமௌலியின் உறவினரான இசையமைப்பாளர் கீரவாணியும், "நானும், எனது மகன் பைரவாவும், நாங்களாகவே சென்று பிளாஸ்மா தானம் கொடுத்துள்ளோம். நல்லபடியாக உணர்கிறோம். வழக்கமான ரத்த தானத்தைப் போலத்தான் இது சாதாரணமாக நடந்தது. இதைச் செய்ய யாரும் பயப்பட வேண்டாம். மருத்துவமனையில் பிளாஸ்மா தானப் பிரிவிலிருந்த மருத்துவக் குழுவுக்கு நன்றி" என்று பகிர்ந்துள்ளார்.

— rajamouli ss (@ssrajamouli) September 1, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x